யாழ்ப்பாணம் இடப்பெயர்வு என்ற பேரவலம் நடந்து இன்றுடன் 20ஆண்டுகள் நிறைவடைகிறது. 1995 ஓக்டோபர் 30 எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில்; இராணுவம் முன்னேறி வருகிறான் மக்களை வெளியேறும்படி அறிவித்தார்கள்...
யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு
நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான
பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு உடனடியாக
இடம்பெயருங்கள் என்ற அறிவிப்பை அடுத்தே அந்த பேரவலம் என வர்ணிக்கப்படும்
யாழ். இடப்பெயர்வு இடம்பெற்றது.
அனைவரும் 24மணிநேரத்தில் யாழ். குடாநாட்டை விட்டு வெளியேறுங்கள் என விடுதலைப்புலிகள் அறிவிப்பை விடுத்தார்கள். யாழ்.நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவலம் ஏற்பட்டது.
யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போது சுமார் 5
லட்சம் மக்கள் வாழ்ந்தனர். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய
பிரதேசங்களுடன் இரண்டு வீதிகள் தான் இணைத்திருந்தன. அந்த இரு வீதிகள் ஊடாக 5
லட்சம் மக்கள் ஒரு இரவுக்குள் கடந்து செல்ல முற்பட்ட போது நிகழ்ந்த
பேரவலம்,
மூட்டை முடிச்சுக்களுடன், பிள்ளைகளை
தூக்குவதா மூட்டை முடிச்சுக்களை தூக்குவதா என வீதி வீதியாக ஏங்கி நின்ற
மக்கள், நிறைமாத கர்ப்பிணிகள் வயோதிபர்கள் நோயாளர்கள் என நடக்க
முடியாதவர்களை தூக்கிய படி பலமணிநேரம் நகரமுடியாத அவலம்.
யாழ்ப்பாண இடப்பெயர்வு அந்த மக்களை
அவர்களின் சொந்த மண்ணிலிருந்து தூக்கி வீசியது மட்டுமல்ல அவர்களின்
வாழ்வியல் அனைத்தையும் தூக்கி புரட்டி போட்டது. இன்று மீண்டும் மக்கள்
தமது சொந்த இடங்களில் மீள குடியேறிய போதிலும் அன்று அழிக்கப்பட்ட
வாழ்வியல் மீள் உருவாக்கம் பெற்றது என சொல்லிவிட முடியாது.
20வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும்
இன்றும் தேக்கநிலையிலேயே உள்ளன.