"பாட்டி" சொன்ன கதையை நிஜமாக்கிய காக்கா!!!

வெலிங்டன்: பானை ஒன்றில் இருந்த தண்ணீர் மேலே வர காகம் ஒன்று கற்களை எடுத்து உள்ளே போட்டது என்ற அறிவுப்பூர்வமான கதையை சிறுவயதில் நாம் கேட்டிருக்கிறோம். தற்போது அந்தக் கதையை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டி சபாஷ் வாங்கியுள்ளது ஒரு காக்கா.

நாயைப் போலவே காகத்திற்கும் மக்களுக்கும் இனம் புரியாத ஒரு பாசம் உண்டு. நம் பாட்டிகள் சொல்லும் முக்கிய கதைகளில் தவறாமல் காகமும் இடம் பெற்றிருக்கும். மற்ற பறவைகளை விட தினமும் காகத்திற்கு சாப்பாடு வைப்போர் அதிகம்.
ஒரு காகத்துக்கு என்னதான் பிரச்சனை வந்தாலும் குடும்பமாக மற்ற காகங்கள், உடனடியாக அதற்காக குரல் கொடுக்கிறது. இக்காட்சிகளைப் பார்க்கும் போது, காகங்கள் நிஜமாகவே புத்திசாலியா? என்கிற கேள்வி அவ்வப்போது நம் மனதில் எழத்தான் செய்கிறது.
இதன் புத்திசாலித்தனத்தை நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் உறுதிப் படுத்தியுள்ளனர்.


6 சோதனைகள்...
நம் பாட்டி காலத்து கதையான, ‘கல்லைப் போட்டு தண்ணீரை மேலே வரச் செய்த பழங்கதையை' நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆறு விதமான சோதனைகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

யூடியூப்பில்...
தங்களது ஆய்வை வீடியோவாகவும் பதிவு செய்து அதனை யூடியூபில் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.

தண்ணீர் உருளை...
இந்த வீடியோவில் நீண்ட வடிவ உருளை போன்ற கண்ணாடியில் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதன் மேலே உணவுப் பொருள் ஒன்று மிதக்கிறது. கண்ணாடி உருளையின் வெளியே சில கற்களை ஆராய்ச்சியாளர்கள் போட்டுள்ளனர்.

புத்திசாலி காக்கா...
புத்திசாலி காக்கா, அழகாக தனக்கு தேவையான கற்களை கண்ணாடி உருளையின் உள்ளே எடுத்துப் போட்டு, தனது உணவை எடுத்துக் கொள்கிறது. இதே போல், எடை அதிகமான பொருளுக்கும், எடை குறைவான பொருளுக்கும் வித்தியாசம் தெரிவது உட்பட காகத்தின் பல்வேறு புத்திசாலித்தனத்தை இந்த வீடியோ உணர்த்துகிறது.

குழந்தை மாதிரி...
இந்த ஆராய்ச்சி மூலம் காகங்களுக்கு ஐந்து முதல் 7 வயது குழந்தைக்குரிய பக்குவம், புரிதல் போன்றவை இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்ப பாட்டி சொன்ன கதை சரிதான் போல.

     "எங்க பாட்டிகள் ஏற்க்கனவே சொல்லிவிட்டாங்க"