சிறுநீரகத்தை பறிகொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞன்!!!

ஐந்து இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறி தனது சிறுநீரகத்தை பெற்றுக் கொண்ட நபர் தன்னை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ட்டன் எபோஸ்ட்லி தோட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸன் என்ற இளைஞன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளியை கவனித்துக் கொள்ளும் தற்காலிக பணியில் குறித்த இளைஞன் ஈடுபட்டிருந்தார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறுநீரகம் தேவைப்படுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கேட்டபோது அதற்கு குறித்த ஜோன்ஸன் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
சிறுநீரகத்திற்குப் பதிலாக 5 இலட்சம் ரூபா தருவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் குறித்த இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து குறித்த இளைஞனை கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கவைத்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரகத்தை அந்த நபர் பெற்றுக் கொண்டுள்ளார்.
வீட்டிற்குச் செல்வதற்கு வாகனமொன்றை தயார்படுத்திக் கொடுத்துள்ள குறித்த நபர், தனது இளைஞனின் வங்கிக் கணக்கையும், தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
வீட்டிற்குச் சென்றவுடன் வங்கிக் கணக்கிற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட 5 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடுவதாகவும் குறித்த நபர் உறுதியளித்ததற்கு இணங்க, அந்த இளைஞனும் வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய பின்னர் வங்கிக் கணக்கை ஆய்வுசெய்துள்ள அவர், அதில் எந்த பணமும் வைப்பிலிடாததை அறிந்தவுடன் குறித்த நபரது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அந்த இலக்கம் செயற்பாடதிருந்தது.
அதனையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் தங்கியிருந்த இடத்தில் உரிமையாளரிடம் குறித்த இளைஞன் நீதிகேட்டதால் அவரை அவர் திட்டியுள்ளார்.
சிறுநீரகம் இல்லாததினால் பாரமான எந்த தொழிலிலும் ஈடுபட முடியாத அசாதாரண நிலையில் உள்ள தனக்கு குடும்ப கஷ்டம் நீங்குவதற்கும், வருமானத்திற்காகவும் ஏதாவது ஒரு தொழிலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றார்.
சிறுநீரகம் கொடுத்துவிட்டு ஏமாறியதால் பிரதேசத்திலுள்ள மற்றையவர்கள் தனக்கு கேலிசெய்வதாகவும் ஜோன்ஸன் கவலை வெளியிட்டுள்ளார்.