(கோப்புக்காட்சி) |
எதிர்வரும் 11-12.09.2015 வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று யாழ் நல்லூர் தேர், தீர்த்தத்திருவிழாவின்போது, யாழ் மண்ணின் கலாசார சீரழிவு அனுமதிக்க முடியாது நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்து
நல்லூர் தேர், தீர்த்த திருவிழாவின்போது, கலாசார சீரழிவு குற்றங்கள், மற்றும் குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இவ்வாறு எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூர் ஆலயத்தில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த ஆலயத்தின் தேர் மற்றும் தீர்தத்திருவிழாக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும். இந்தத் திருவிழாக்களில் புலம் பெயர் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து கலந்து கொள்வது வழக்கம். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நல்லூருக்கு வருகை தருவார்கள்.
(கோப்புக்காட்சி) |
இம்முறை நல்லூர் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களில் மாத்திரம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தற்போதைய நாட்டுச் சூழலையடுத்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியிலேயே நல்லூர் தேர் மற்றும் தீர்த்தத்திருவிழா காலங்களில் கலாசார குற்றங்கள் மற்றும் திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
குற்றச் செயல்களைத் தடுப்பதே பொலிசாரின் நோக்கம். அதற்கு உதவியாக நீதிமன்றங்கள் கட்டளை பிறப்பிக்க வேண்டியது காலத்தின் கடமையாகும் என தமது கட்டளையில் தெரிவித்துள்ள நீதிபதி, நல்லூர் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவில் பொதுமக்களின் பொறுப்பு கடமைகள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி, குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து விசேட பொலிஸ் அணிகள் தேர்த்திருவிழாவின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏதாவது குற்றச்செயல்கள் நடைபெறும்போது, அதனைத் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பொலிசாரினால் எடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றம் நடைபெற்றதன் பின்னர் கைது செய்வதைவிட, குற்றம் நடைபெறாமல் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள், பொதுமக்கள் கடைப்பிடித்து, பொலிசாரின் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இந்த நீதிமன்றம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது.
பெறுமதியான தங்க நகை ஆபரணங்களை தேர்த்திருவிழா தீர்த்தத்திருவிழா அணிவதைத் தவிர்த்தல் நல்லது. தங்க முலாம் இடப்பட்ட நகைகளை அணிவது சிறந்தது. இதனைச் செய்வதன்மூலம் தங்கநகைத் திருட்டு சங்கிலி அறுப்புக் குற்றங்களைத் தவிர்க்கலாம்.
திருவிழா நேரத்தில் நல்லூருக்குச் செல்லும்போது பெருமளவு பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பதும் நல்லது. பிக்பொக்கட் ஆசாமிகள் யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல வெளி மாவட்டங்களில் இருந்தும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் பெருமளவு பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
ஆலயத்திற்குச் செல்லும் பெண்கள் ஆண் உறவினர் துணையுடன் செல்வது விரும்பத்தக்கது. பிக்பொக்கட் சங்கிலி அறுப்பு நடைபெறும் சந்தர்ப்பங்களில் அவர்களை பொதுமக்கள் பிடித்து அருகில் உள்ள பொலிசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு பிடிக்க முடியாத சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பொலிசாரிடம் சமர்ப்பிப்பது வரவேற்கத்தக்கது.
சிறுவர்களுடன் செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நல்லூரில் ஆலயத்திற்குச் செல்லும்போது, தமிழருக்குரிய கலாசார உடைகளை அணிந்து செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தமிழர்கள் திருவிழாவைக் கண்டு களிக்க நல்லூரை நோக்கிப் படையெடுத்துள்ள சூழ்நிலையில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் உடைகளை அணிவதை வெளிநாட்டில் இருந்து வந்துள்ள தமிழர்கள் தவிர்க்க வேண்டும். ஆண்கள் முக்கால் காற்சட்டை அணிவதையும், பெண்கள் முக்கால் காற்சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிவதையும் தவிர்ப்பதுடன், குழந்தைகளுக்கு மேற்கத்தைய பாணியில், அவர்களை ஆலயத்தி;ற்கு அழைத்துச் செல்லும்போது அணிவிப்பதையும் தவிர்த்தல் வேண்டும். கலாசாரத்துக்கு ஒவ்வாத உடைகள் அணிவதைத் தவிர்த்து, தமிழ் இந்து மணம் கமழும் உடைகள் அணிவதை விசேடமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்கள் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
பெண்களுடன் சேட்டைவிடும் இளைஞர்களை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. மதுபானம் அருந்திவிட்டு வரும் நபர்கள் அவிடத்தில் நிற்கும் பொலிசாரினால் கைது செய்யப்படுவார்கள். சிகரட் பாவனை நல்லூர் பிரதேசமெங்கும் தவிர்க்கப்பட்டுள்ளது. உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. தேர் ஊர்வலத்தின் போது ஒவ்வொரு 15 அடிக்கும் பொலிசார் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். தீர்த்தத்திருவிழாவின்போது கேணியைச் சுற்றிலும் பொலிசார் நிறுத்தப்பட்டு, அங்கு ஒழுக்கக் கேடான முறையில் கேணியில் இறங்குபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
தீர்த்தத்திருவிழாவின்போது பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்யும் அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள். பொலிசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வழிபாட்டு உரிமைக்கு எதுவிதத் தடங்கல்களும் இல்லாமல் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுமக்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஆலயச் சுற்றாடலில் கலாசாரச் சீரழிவுக் குற்றங்கள் திருட்டுக்கள் சங்கிலி அறுப்புக்கள் என்பன இடம்பெறாமல் தடுப்பதற்காக இத்தகைய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நீதிமன்றத்தினால் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் வூட்லருக்கு அறிவிக்கப்படுகின்றது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் அவருடைய தலைமையிலான பொலிஸ் அணி 24 மணிநேரமும் தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு நீதிமன்றத்தின் விசேட உத்தரவுக்கமைய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பெருமளவிலான பாரதூரமான போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு வழக்கில், பிணை மனவுக்கான ஆட்சேபணை மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி விசாரணையை ஒத்தி வைத்துள்ள நீதிபதி இளஞ்செழியன், நல்லூர் உற்சவ காலத்தில் விசேடமாக தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு, பொலிசார் நல்லூரை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளபடியால், மற்றைய பிரதேசங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாதிருப்பதற்காக பிணை மனுக்கள் பரிசீலனை செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளார்.