யாழ்/நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா அரோகரா கோஷத்துடன் காண்டாமணியோசையுடன் நேற்று(11.09.2015) விமர்சையாக இடம்பெற்றது-:(படங்கள்) !!!

யாழ். மண்ணின் பக்தியின் சிறப்பை உலகெங்கும் பறைசாற்றி வரும் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவப் பெருவிழா இன்று இனிதே நடைபெற்றது.

யாழ். மண்ணின் தொன்மைவாய்ந்த கலாசாரப் பாரம்பரியங்களின் கேந்திர நிலையமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் விளங்குகின்றது.
நல்லைக்கந்தனின் மஹோற்சவப் பெருவிழாவினை யாழ். மண்ணின் குடும்ப விழாவாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் சொந்தங்கள் கொண்டாடி தரிசித்து வணங்கி மகிழ்கின்றனர்.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜைகளை அடுத்து வள்ளி தெய்வானை சமேதராய் சண்முகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் வெளி வீதியில் எழுந்தருளினார்.
பிராமண உத்தமர்களின் வேதமந்திர உச்சாடனமும் மங்கள வாத்தியங்களும் முழங்க பக்தர்களின் ஹரஹர கோஷம் கடலலையை விஞ்சி ஆர்ப்பரிக்க, காண்டாமணியோசை அணி செய்ய நல்லையம்பதியின் நாயகன் தேரில் ஆரோகணிக்கப்பட்டார்.
அதனை அடுத்து அகிலம் போற்றும் அலங்காரக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்சவப் பவனி ஆரம்பமானது.

நல்லையம்பதியில் திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பிரவாகத்தில் திளைக்க நல்லுாரின் நாயகன் கம்பீரமாக வெளிவீதி வலம் வந்தார்.
பக்தியுணர்வு மேலிட, அரஹர கோஷம் எழுப்பி பக்தர்கள் திருவடத்தை பிடித்து இழுத்தும், பறவைக்காவடி, தூக்குக்காவடி ஆகியவற்றை எடுத்தும் தீச்சட்டிகளை ஏந்தியும் சிதறு தேங்காய்களை உடைத்தும் தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் முருகப் பெருமான், பச்சை சாத்தி பக்திக் கோலத்துடன் ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

யாழ். மண்ணின் குடும்பவிழா என வர்ணிக்கப்படும் நல்லைக் கந்தனின் இரதபவனியில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.




நேற்றைய முன்தினம் நடைபெற்ற நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இன்றைய தினம் 25ஆவது திருவிழாவாக தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு உள்வீதியிலுள்ள தீர்த்தக் கேணியில் தீர்த்தத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலம் வரும். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், திங்கட்கிழமை வைரவர் மடையுடன் நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.