யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப்படும் நகரமாக மாற்றுவதில் உலகவங்கி ஒப்புதல்!!!


மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப்படும் நகரமாக மாற்றுவதில் முகங் கொடுக்க வேண்டிய சவால்களை அடையாளப்படுத்தும் முகமாக நகரஅபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகரஅபிவிருத்தி அதிகார சபையினால் பூர்வாங்கக் கூட்டம் ஒன்று முதலமைச்சர் காரியாலயத்தில் இன்று(07) காலை 10 மணிக்கு நடாத்தப்பட்டது. அதில் உலகவங்கியைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்குபற்றினர்.

2050ம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் பற்றிய கருத்தரங்கம் அங்கு நடைபெற்றது.


முதலில் வடமாகாணசபையின் பிரதம செயலாளர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று இக் கருத்தரங்கத்தில் பங்குபற்றுவதற்கு நன்றியைத் தெரிவித்தார். அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் விளக்கக் காட்சி மூலம் மேற்படி உத்தேசயாழ் நகர அபிவிருத்திதிட்டங்கள் சம்பந்தமான விபரங்களை தெரியப்படுத்தினார்.

அதன் பின்னர் உலகவங்கியில் இருந்துவருகைதந்தஉயர் அதிகாரி மிங்சாங் அவர்கள் கண்டி, காலி போன்ற நகரங்களில் மேற்படி நகர அபிவிருத்திகளை தொடங்கி இருப்பதாகவும் இதனை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று உலகவங்கி அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தல் கிடைத்ததால் இக் கூட்டத்தில் தாம் பங்குபற்றுவதாக குறிப்பிட்டார். அண்மையில் உலகவங்கியின் உப தலைவரை வொஷிங்டனில் முதலமைச்சர் சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாகத் தம்மை நேரடியாகச் சென்று இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


இது ஒரு பூர்வாங்கக் கூட்டம் என்றும் எப்பேர்ப்பட்ட அபிவிருத்தி  நடைபெற இருக்கின்றது என்பதை அறிந்தபின் அதற்குரிய நிதியத்தைத் தமது வங்கி இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுத்துதவ  முன்வரும் என்றும் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக தமது கருத்துக்களை எடுத்துரைத்த முதலமைச்சர் பின்வருமாறு கூறினார்-

எமது வடமாகாணம் இலங்கையின் மற்றைய மாகாணங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. வட கிழக்குமாகாணங்களில் வசிப்பவர்கள் வேற்று மொழியையும் பிறிதான மதங்களையும் கலாசாரத்தையுங் கொண்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அவதானத்திற்கு எடுக்கவேண்டும். தெற்கில் இருக்கும் 7 மாகாணங்களில் இருந்து வட கிழக்கு மாகாணங்கள் வேறுபட்டவை. மண்ணியல் ரீதியாகப்பார்த்தால் வடமாகாணம் வித்தியாசமான ஒன்றாகவே இருப்பதை அவதானிக்கலாம். வடமாகாணத்தில் நதிகள் இல்லை. நீர் வீழ்ச்சிகள் இல்லை. கிணறுகளிலும், குளங்களிலும் இருந்துதான் நீர் எடுக்க வேண்டியுள்ளது. சரித்திர ரீதியாகவும் நாங்கள் வேறுபட்டவர்கள். 2000 வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்டவர்கள் எம் மக்கள். தற்பொழுதுபோரினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக வடமாகாணம் உள்ளது. காலி, கண்டிபோன்ற இடங்களை அபிவிருத்தி செய்வதற்கும் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் அவதானிக்க வேண்டும்.


அதாவது முதலில் எமதுபிரதேசம் இயல்பான நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். கண்டி, காலி போன்ற மற்றைய இரண்டு நகரங்களும் அபிவிருத்தி அடைந்த நகரங்கள். எம்மைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி அடையாத, மத்திய அரசினால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரதேசமே எமது பிரதேசம் என்பதை உணரவேண்டும்.

பொருளாதார ரீதியாகவும் எமதுமாகாணம் சற்றுவேறுபட்டது. எம்மைப் பொறுத்தவரையில் விவசாய அடிப்படையிலான பொருளாதார விருத்தியையே நாங்கள் நாடி நிற்கின்றோம். சிறிய இடை நிலைதொழில் முயற்சிகளில் (ளுஆநு)ஈடுபடவேநாங்கள் விரும்புகின்றோம்.
பாரியசெயற்றிட்டங்களைவகுத்துதொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின் புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும் சுற்றுலாத்துறை போன்றவை எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றிற்கு அமைவாக விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பம். வானளாவும் பாரிய கூட கோபுரங்களும் கட்டடங்களும் எமது சுற்றாடலுக்கு ஏற்ற வையல்ல. எமது சுற்றாடலுக்கு அமைவாகவே விருத்தி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.

தற்பொழுது வட மாகாணத்தில் இருக்கின்ற எமது மக்கள் இங்கு குறைந்தே காணப்படுகின்றனர். ஒன்றரை இலட்சத்திற்கு மேல் எமது குடிமக்கள் தென்னிந்தியாவில் முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பி அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்டால் எமதுமக்கட் தொகை அதிகமாகும் என்பதைநீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

அரசியல் ரீதியாக வட கிழக்கு மாகாணங்கள் தமது தனித்துவத்தை இலங்கை சுதந்திரம் அடைந்தகாலந் தொடக்கம் வெளிக்காட்டி வந்துள்ளார்கள். எம்மை பிற மாகாணங்களுடன் சேர்த்துப் பார்த்ததால் எமது தனித்துவம் பாதிப்படைந்தது. 1987ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் 13ம் திருத்தச் சட்டம் வடகிழக்கு மாகாணமக்களுக்காகவே கொண்டுவரப்பட்டது. ஆனால் மாகாணசபைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி எமது தனித்துவத்தை நிலைபெறச் செய்யாமல் பாதிப்புள்ளாக்கி வந்துள்ளன தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள். 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்ட குறைவான உரித்துக்களைக் கூட மகாவலி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகளுக்கு ஊடாக பிரித்தெடுத்துள்ளனர் அரசாங்கத்தினர். அந்தவாறான ஒரு செயற்றிட்டத்தைப் போலவே இதையுங் காண்கின்றோம். எம்முடன் கலந்தாலோசித்து எமக்கான நகர அபிவிருத்தியை ஏற்படுத்தாமல் மத்திய அரசாங்கம் தான்தோன்றித் தனமாக இங்கு தமக்கேற்றவாறு ஏற்பாடுகளை நடாத்தி வருகின்றனர் என்றுநான் கருதுகின்றேன். இதனைநாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. எமக்கான அபிவிருத்தியை நாமே உருவாக்கவசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

நுகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு சுரேஷ் பொன்னையா அவர்கள் இது ஒருபூர்வாங்கக் கூட்டம் என்றும் வடமாகாண மக்களுடன் கலந்தாலோசிக்கும் விதத்திலேயே இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது என்றும் வடமாகாணத்து தொழில்நுட்பக் குழு ஒன்று தம்முடன் சேர்ந்தே இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றும் முதலில் ஒரு பூர்வாங்கத் திட்டவரைவொன்று உங்கள் மாகாணசபைக்கு தரப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான் செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் பல பூர்வாங்க கூட்டங்கள் இவ்வாறு நடை பெறவேண்டி இருக்கும் என்றும் அவற்றில் யாழ் மக்களின் கருத்துக்களும் கவலைகளும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். இது எல்லோராலும் வரவேற்கப்பட்டது. எனினும் மக்கள் சார்பான கருத்துக்களை முதலமைச்சரிடம் இருந்து அறிந்து கொண்டதற்காக உலகவங்கியின் உயர் அதிகாரி மிங்சாங் அவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தார். பின்னைய கூட்டங்கள் பற்றி தெரியப்படுத்தப்படும் என்று தெரிவித்து கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

                                                                                               (நன்றி: குளோபல் தமிழ் செய்தி)