“சர்வதேச
விசாரணையை அனுமதிப்பது என்பது இலங்கையின் நீதித்துறையை அவமதிப்பதாக
அமையும். எனவே ஒருபோதும் சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்ள முடியாது” என
2015 ஜனவரி 8 யும் திகதி எலக்சனில் வென்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்திருந்தார்.
தமிழ்மக்கள்
எந்தவொரு சிங்கள அரசாங்கத்தையோ அல்லது எந்தவொரு சிங்கள தலைவர்களையோ நம்ப
எந்தவொரு ஆதாரமும், நம்பிக்கையும் கிடையாது. குறிப்பாக இன்றைய இலங்கை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் காலங்களில் உண்மையாக
எப்பவுமே நடந்ததோ நீதியாக வாழ்ந்தவரோ கிடையாது. ஏன் 2000 ஆம் ஆண்டு
சந்திரிக்கா ஆட்சியிலிருந்தபோது தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு
ஒற்றையாட்சி முறைமூலம் தீர்க்க முடியாது எனவே பிராந்தியங்களின் கூட்டாட்சி
முறை மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வினைக் காணவேண்டும் என்கின்ற ஒரு
திட்டத்தை இலங்கை நாட்ளுமன்றத்தில் முன்வைத்தபோது அதை முதலாளாக நின்று
எதிர்த்து அத்திட்ட நகலைக் கிழித்து எறிந்தார். இதை அப்போதைய ரூபவாகினி
தொலைக்காட்சியும் ஒளிபரப்பியிருந்தது.
இவ்வாறு
தீர்வுத்திட்ட நகலைக் கிழித்து எறிந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் எவ்வாறு
தமிழ்மக்களோ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ நீதியான உள்ளக விசாரணையின்
தீர்வினை எதிர்பார்க்கமுடியும்.
ஆனால்
ஐக்கிய தேசியக்கட்சி காலத்தில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு
புதைக்கப்பட்ட ஜே.வி.பி.யினரான சிங்கள இளைஞர்களின் படுகொலை புதைகுழியான
சூரியகந்த புதைகுழி விசாரணையை சந்திரகா அரசாங்கம் நடாத்தியது. இராணுவத்தால்
சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்காக இன்னொரு சிங்கள அரசாங்கம்
விசாரணை நடத்தியிருக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இனப்படுகொலை
செய்யப்பட்டமைக்காக இதுவரை எந்தவொரு சிங்கள அரசாங்கங்கமும் விசாரணை நடத்தி
நீதி வழங்கியது கிடையாது இதுதான் சிங்கள தேசத்தின் கடந்தகால வரலாறு எனவே
உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரிக்கப்படும் உள்ளக விசாரணை சர்வதேச விசாரணையை
தடுத்து நிறுத்தும் சிங்களத்தின் உத்தியே
இதேபோல்
2009ஆம் ஆண்டு இறுதிவரை யுத்தத்தை தலைமைதாங்கி ஓன்றரை இலட்சம் தமிழ்மக்களை
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்த இலங்கை இராணுவ தலைமை தளபதி
பொன்சேகாவுக்கு இராணுவ வெற்றியை ஈட்டியதற்காக சிறிசேன - ரணில்
அரசாங்கத்தால் ‘ஃபீல்டு மார்ஷல்’ பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டமையானது
இனப்படுகொலைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமே ஆகும் இப்படிப்பட்ட ரணிலின்
அரசாங்கத்திடம் எப்படி நீதியான உள்ளக விசாரணையை நாம் எதிர்பார்க்க
முடியும்.
எனவே தமிழருக்கு எதிரான கடந்தகால சிங்கள ராஜதந்திர நகர்வுகளைத் புரட்டிப்பார்த்தால் இது புரியும்.
1949ஆம்
ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தினால் கல்லோயாவில் குடியேற்றப்பட்ட
சிங்கள காடையர்கள் 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தின் போலீஸ்
உதவியுடன் கல்லோயாவில் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட 156 தமிழ் விவசாயிகளை
இனப்படுகொலை செய்தனர். அதாவது 1956, யூன் 5ஆம் தேதி கத்தி, கோடரி, இரும்பு
கம்பிகள் சகிதம் தமிழ் மக்கள் சிங்கள காடையர்களால் இங்கு படுகொலை
செய்யப்பட்டனர். இதற்கான விசாரணை எதுவும் இதுவரை நடந்தது கிடையாது. இதற்கான
நீதியோ, நிவாரணங்களோ இதுவரை வழங்கப்பட்டது கிடையாது.
அதேபோல் 1958ஆம் ஆண்டு இனக் கலவர வடிவில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றிய விபரங்கள் TARZIE VITTACHI எழுதிய EMERGENCY’58 என்ற நூலில்
முழுமையாக உள்ளன. குறிப்பாக 1958, மே 25ஆம் தேதி கிங்குராங்கொட என்ற
இடத்தில் சிங்களக் காடையர்கள் ஒரு கர்ப்பிணித் தமிழ்ப் பெண்ணின் வயிற்றைப்
பிளந்து அச்சிசுவை வெளியே வெட்டி எடுத்து கூத்து கும்மாளம் போட்ட காட்சி
இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. (பக்கம் 38-43) அப்போதைய நாடுதழுவிய இந்த
இனப்படுகொலை கோரத்தாண்டவங்கள் பற்றி இதுவரை சிங்கள நீதித்துறையோ,
அரசாங்கங்களோ விசாரணை நடாத்தியது கிடையாது.
மேலும்
1977ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அதுவும் ரணில் அமைச்சர் பதவி வகித்த
ஜெயவர்த்தன தலைமையிலான ஐதேக அரசாங்கம் நாடு தழுவிய இனப்படுகொலையை தமிழ்
மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்
நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு களியாட்ட விழாவின் போது எந்தவித காரணமுமின்றி
உள்நுழைந்த சிவில் உடை தரித்த சிங்கள போலீசார் கண்மூடித்தனமாக அங்கு
திரண்டிருந்த தமிழ் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு நாடு தழுவிய தமிழ்
மக்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கான
எந்தவொரு நீதி விசாரணையை இதுவரை நடந்தது கிடையாது.
ஆனால்
உலகத்தை ஏமாற்றுவதற்காக ஏன் கலவரம் நிகழ்ந்தது பற்றிய ஒரு விசாரணை
நடாத்துமாறு சஞ்சோனி கமிஷன் விசாரணை ஒன்று நிகழ்ந்தது. இது குற்றவாளிகளை
கண்டுபிடிப்பது பற்றியதோ அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான விசாரணையோ
அல்ல. ஆயினும் அந்த விசாரணையின் அறிக்கைகூட இதுவரை வெளியிடப்படவில்லை.
ஏன்
1981ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டமையும் போலீஸ் மற்றும்
இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் புரியப்பட்ட படுகொலைகளும். இந்த நூலகத்தை
எரிப்பதற்கு கொழும்பில் இருந்து இரண்டு பேருந்துகள் மூலம் அமைச்சராய்
இருந்த காமினி திசநாயக சிங்களக் காடையர்களை அழைத்துவந்து அவரே நேரில்
நின்று நூலகத்தை எரிப்பித்தார். இதில் போலீசாரும், இராணுவத்தினரும்
உதவிபுரிந்தனர்.
நூலகம்
ஒருபுறம் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை மறுபுறம் போலீசாரும்,
இராணுவத்தினரும் யாழ் நகரத்தில்; பொதுமக்களை கண்டபடி சுட்டுக் கொன்றனர்.
இதன்போது யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரனின் வீடு
இராணுவத்தினரால் தாக்கி அழிக்கப்பட்டது. இவை எதற்குமான எந்தவொரு
விசாரணையையும் ரணில் அமைச்சராய் அங்கம் வகித்த ஐதேக அரசாங்கம் இதுவரை
விசாரணை செய்தது கிடையாது. கொல்லப்பட்ட யாருக்கும் எந்தவொரு நீதியோ,
நியாயமோ, நிவாரணமோ வழங்கியது கிடையாது. ரணில் இப்போது கூறும் சிங்கள
நீதித்துறையின் கௌரவம் இனி எங்கிருந்து வரப்போகிறது?
மேலும்
1981ஆம் மலையகத்தில் ஐதேக காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவர
வடிவிலான தமிழினப் படுகொலைக்கான எந்தவொரு விசாரணையையும் ஐதேக அரசாங்கமோ
அன்றி பின் பதவிக்கு வந்த அரசாங்கங்களோ செய்தது கிடையாது.
மெலும்
சிங்களச் சிறைச்சாலையில், 1983, யூலை 24ஆம் தேதி வெலிக்கடைச் சிறையில்
குட்டிமணி, தங்கத்துரை உட்பட 53 தமிழ்க் கைதிகள் சிறைச்சாலை காவலர்களின்
உதவியுடன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அதுவும் காவல் நிறைந்த சிங்கள
சிறைச்சாலையில் நிகழ்ந்த இந்த படுகொலை பற்றி ரணில் அமைச்சர் பதவி வகித்த
ஜெவர்த்தன அரசாங்கம் எந்த விசாரணையையும் செய்தது கிடையாது.
1983
கறுப்பு யூலை இனப்படுகொலை உலகம் அறிந்த ஒன்று. இந்த இனப்படுகொலைக்கு ஐதேக
அரசாங்கமே காரணம் என்றும் அதுபற்றி தெளிவான விபரங்களை THE HOLOCAUST AND
AFTER என்ற தனது பிரபலம் மிக்க நூலில் எல்.பியதாச
(L.PIYADASA) ஆதாரபூர்வமாக விவரித்துள்ளார். அதில் ஐதேக-வில் கைத்தொழில்
அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ மற்றும் மகாவலி அமைச்சராக இருந்த காமினி
திசநாயக உட்பட பல அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் படுகொலைக்கு
தலைமை தாங்கிய இடங்களையும் மற்றும் விவரங்களையும் அந்நூல் தெளிவாக
விவரிக்கிறது. இந்நூல் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் பேராதனை
பல்கலைக்கழக நூலகத்தின் பிரதம நூலகரும் ஆவார். இந் நூல் எழுதியதற்காகவே
இவரது வீடும் தாக்கப்பட்டு இவர் நாட்டை விட்டு வெளியேறி இலண்டனில்
குடியேறினார். இத்தகைய படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தாத சிங்கள
அரசாங்கங்களும், நீதித்துறையும் நீதி வழங்கும் என்று எதிர்பார்க்க
முடியாது.
சந்திரகாவின்
ஆட்சிக்காலத்தில் கோணேஸ்வரி பாலியல் வல்லுறவு படுகொலையில் சிங்களப்
படையினர் ஈடுபட்டனர். அவரது பெண் உறுப்பில் கைக்குண்டு வைத்து வெடிக்கச்
செய்து படையினரால் கொல்லப்பட்டுள்ளார். இந்த அபகீர்த்தி மிகுந்த, வெட்கக்
கேடான படுகொலை பற்றி யாரும் இதுவரை விசாரணை நடத்தியது கிடையாது.
அத்துடன்
மேலும் 1996ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் செம்மணியில் 600 மேற்பட்ட அப்பாவி
தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் இராணுவத்தினரால் சுட்டு
புதைக்கப்பட்டுள்ளனர். அதுவும் 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்குடா நாடு
முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் இந்த இனப்படுகொலை
நிகழ்ந்துள்ளது. இதுபற்றி சந்திரகாவோ, ரணிலோ விசாரணை என்ற வார்த்தைத்தானும்
பேசியது கிடையாது.
அனைத்துப்
படுகொலைகளினதும் உச்சக் கட்டமாக 2009ஆம் ஆண்டு குழந்தைகள், சிறுவர்கள்,
பெண்கள், முதியோர்கள் உட்பட ஒன்றரை இலட்சம் தமிழ்மக்கள் இனப்படுகொலை
செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றிய நம்பகமான தகவல்களை சேனல்-4 தொலைக்காட்சி
வெளியிட்டுள்ளதுடன் ஐநா அறிக்கையும் நாற்பதாயிரத்திற்கும் மேல் மக்கள்
படுகொலை செய்யப்பட்டதை கூறுவதுடன் இத்தொகை மேலும் அதிகமாக இருக்கக்கூடும்
என்றும் கூறியுள்ளது.
இவற்றுக்கு சர்வதேச விசாரணையை கோரிய அமெரிக்க அரசு தமிழ் மக்களை ஏமாற்றாது அதனை செய்ய வேண்டும்.
பேராசிரியர்
ஏ.ஜே.வில்சன் எழுதிய Break up of Srilanka என்ற தனது நூலில் Before the
Civil War என்ற அத்தியாயத்தில் இலங்கை நீதித்துறையின் அபகீர்த் திக்குரிய
தகவல்களை ஆதாரத்துடன் கூறியுள்ளார். மேலும் இரு மூத்த சிங்கள அமைச்சர்கள்
தமக்குத் தேவைப்படும், தமக்கு வேண்டியவாறான தீர்ப்புக்களை இலங்கை
உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் இருந்து எவ்வாறு பெறமுடியும் என்பதை
ஏ.ஜே.வில்சனிடம் அதுவும் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கூறியுள்ளதை
விவரித்துள்ளார். சிங்கள நீதித்துறையை நம்புவதற்கு எந்தவித நியாயமும்
கிடையாது.
நேரடியானதும்,
முழுமையானதுமான சர்வதேச விசாரணையின்றி வேறு எந்த விசாரணையாலும்
இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க முடியாது. அமெரிக்கா
தான் முன்மொழிந்தது போல் சர்வதேச விசாரணையை முன்னெடுக்கப்போவதா அல்லது
நீதியை புதைக்கக்கூடிய களங்கப்பட்ட வரலாற்றையே கொண்டுள்ள ரணிலின் நீதியை
புதைப்பதற்கான செயலில் ஒத்துழைக்கப் போகிறதா?
ஜனநாயகத்தின்
பிறப்பிடமாக, நீதியின் காவலனாக தன்னை பிரகடனப்படுத்தும் அமெரிக்கா
ஈழத்தமிழ் விடயத்தில் நீதியின் பெயரால் சர்வதேச விசாரணையை மட்டுமே
முன்வைக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களிடம் தேர்தலுக்கு முன் அமெரிக்காவின்
வாக்குறுதியாக இருந்தது. இதன் அடிப்படையிற்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
தமிழ் மக்களிடம் வாக்குறுதியை முன்வைத்தது. தேர்தலின் பின் சிங்கள
ஆட்சியாளர்கள் போல் நா பிறழ்ந்து நிக்கிறது
தமிழ்மக்களின்
பால் இவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்களாயின் ஜனநாயக
வழியில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
வடக்கு - கிழக்கு மகாணசபைகளுக்கான பதவிகளில் இருந்தும், நாடாளுமன்ற
பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் அல்லது சர்வதேச சுயாதீன
விசாரணை வேண்டுமென ஐநாவை பகிரங்கமாக வேண்டவேண்டும்.
அத்துடன்
மக்களும் நாடுதழுவிய ரீதியில் அமைதியான வழியில் தொடர்ச்சியான குழற்சி
முறையிலான உண்ணாவிரதத்தினையோ, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையோ உடனடியாக
நடத்தி இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு நீதியானதும், நடுநிலையானதுமான சர்வதேச
விசாரணையை வலியுறுத்த வேண்டும்.
இத்தகைய
பின்னணியில் உலகின் பாரிய அரசியல் மாற்றங்களும் சமூகவியல் மாற்றங்களும்
நிகழ்ந்துவிட்டன ஆனால் சிங்களதேசத்தின் அரசியலிலும், சமூகவியலிலும் ஏன்
நீதித்துறையிலும் எந்த மாற்றங்களும் நிகiவில்லை அது எப்போதும் இனவாதச்
சிந்தனையிலேயே வளர்க்கப்பட்டு திரண்டு முற்றிப்போய்க்கிடக்கிறது. ஆகவே
இனியும் சிங்கள நீதித்துறையில் நீதி என்பது தமிழர்களுக்குக்
கிட்டப்பேவதில்லை அப்படியொரு நீதியை எதிர்பார்ப்பது வடிகட்டிய முட்டாள்
தனமே இதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏற்கப் போகிறது?
நன்றி