பொதுத்
தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து அனுராதபுரம் சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகள்
இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு எதிராக அங்குள்ள 49 தமிழ்க் கைதிகளும்
உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
தேர்தல்
முடிவுகள் வெளிவந்ததையடுத்து சிறைச்சாலை அதிகாரியான உப்புல்தெனிய மற்றும்
அபேயசிங்க, சுனில் போன்ற சில அதிகாரிகள் தமிழ்க் கைதிகளுடன் கடுமையாக
நடந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிய செல்
ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு 49 கைதிகளும் நெருக்கமாக
அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள்
மலசல கூட்டத்தைப் பயன்படுத்துவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை எனவும்,
பதிலாக சிறிய ரின்கள் சில இதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தமிழ்க்
கைதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன.
உங்களுடைய
ஆட்களால்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனக்கூறி கைதிகளை கடுமையான
முறையில் அதிகாரிகள் எச்சரித்திருப்பதாகத் தெரிகின்றது. அனுராதபுரம்
சிறையில்வைத்துத்தான் இரு தமிழ்க் கைதிகள் இரு வருடங்களுக்கு முன்னர்
அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. இதனால், நேற்று முதல்
தமிழ்க் கைதிகள் அச்சத்திலிருப்பதாகத் தெரிகின்றது.
இதனையடுத்து
தம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும், தம்மை தமது சொந்த
இடங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றுமாறு கோரியும் தமிழ் அரசியல் கைதிகள்
இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும்
தெரியவந்திருக்கின்றது.