இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தருவோருக்கு 5 வருடம் சிறை!!!

சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தரும் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிதாக கொண்டுவரப்படும் குடிவரவு சட்டமூலம் ஒன்றின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் உரிமையை இழக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியும்.

வாடகைக்கு குடியிருப்போரின் அரசியல் தங்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் இடத்து, சில நேரங்களில் நீதிமன்றங்களின் உத்தரவின்றியே அவர்களுடைய வாடகைக்கான ஒப்பந்தத்தை வீட்டு உரிமையாளர் ரத்துச் செய்யவும் முடியும்.
வாடகை ஒப்பந்தங்களை செய்துகொள்வதற்கு முன்னதாக வாடகைக்கு வருவோரின் குடியியல் அந்தஸ்தை வீட்டு உரிமையாளர் சோதனை செய்யவும் வேண்டும். இப்படியான விடயங்களில் திரும்பத்திரும்ப தவறிழைப்போருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

இந்தப் புதிய திட்டத்தின்படி, தஞ்சம் கோரிகளுக்கான நிதி உதவிகளும் நிறுத்தப்படவுள்ளன.
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலும், தற்போது வரி செலுத்துவோரின் நிதியில் இருந்து வாராந்தம் 36 பவுண்டுகளை பெற்று வரும் சுமார் 10,000 பேர் தொடர்ந்தும் அதனைப் பெறுவார்கள்.
சிக்கலான நிலையில் இருக்கும் குடியேறிகளுக்கு மோசமான நிலையில் உள்ள வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்களும் தண்டிக்கப்படுவார்கள்.

பிரான்ஸின் கலே பகுதியில் இருந்து பிரிட்டனுக்குள் நுழைய நூற்றுக்கணக்கான குடியேறிகள் முயற்சிப்பதால் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.