“கறுப்பு பற்றிய புரிதல்”
ராத்திரியில தாமதமா
வீடு வந்து சேராத
காத்து கறுப்பு ஏதாச்சும்
பட்டுரும்னு ஆத்தா,
மூச்சுக்கு முந்நூறு தெறம்
வழிக்கு வழி சொல்லி
அனுப்பும் போதெல்லாம்
'கறுப்பு' என்றால்
பேய் என்று தான்
மனசில பதிஞ்சிருச்சி.
சாமத்துல
சிறுநீர் கழிக்க எந்திரிச்சி
கதியால் கட்டைய
பேயா நெனைச்சி
ஒடம்பெல்லாம் ஒதறல் பிடிச்சி
மூனு நாள் காய்ச்சலுக்கப்புறம்
பள்ளிக்குப்போய்
வகுப்பறை தோழிகள்
கிண்டல் கேட்டு
அழுதிருக்கேன்.
சின்ன வயசில
எனக்கு தெரிஞ்சதெல்லாம்
'கறுப்புன்னா' பேய்
'கறுப்புன்னா' பயம்
அவ்வளவுதான்.
பின்னாளில்
சிவப்புன்னா அபாயம்
வெள்ளைன்னா சுத்தம்
பச்சைன்னா இசைவு
கறுப்புன்னா துக்கம் முன்னு
சர்வதேச நியமங்கள்
கத்திருக்கேன்.
கறுப்புன்னா துக்கம் இல்லே
துணிவுன்னு
கறுப்புக்கே நியமம் எழுதிய
கந்தக கறுப்புகள் வரலாறு
படிச்சப்புறம்
கறுப்பு பத்தி
தெளிவு பொறந்திருச்சி.
எப்பவாச்சும்
கும்மிருட்டில அகப்பட்டு
எத்துப்பட்ட
சந்திகளிலெல்லாம்
தூத்தூன்னு மூனு
எச்சில் துப்பி வந்த
ராத்திரிகள நெனைச்சா
சிரிப்பு வருகிறது.
ஆத்தா சொன்ன
காத்து கறுப்புகள
ஒதறித்தள்ளி
கந்தக கறுப்புகள தேடி
அலையத்தொடங்கிட்டன்.
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்,
-அ.ஈழம் சேகுவேரா-
தாயக கவிஞர்,
-அ.ஈழம் சேகுவேரா-