த.தே.கூட்டமைப்பினரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு-ஈ.தமிழர் செயலகத்தின் பிராதான செயற்பாட்டாளர் பிலிப் முருகையா அழைப்பு விடுத்திருக்கின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஈழத் தமிழர் செயலகத்தின் பிராதான செயற்பாட்டாளர் பிலிப் முருகையா அழைப்பு விடுத்திருக்கின்றார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

‘மீண்டுமொரு பொதுத் தேர்தலை நாடு சந்திக்கின்றது. தமிழினமும் சந்திக்கின்றது. இம்முறையும் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்றும் கோஷங்கள் தமிழர் நிலமெங்கும் ஒலிக்கின்றது. தமிழர்களுக்கான நியாயமான தீர்வொன்று 2016 ஆம் ஆண்டில் உறுதி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் உரக்க கூறுகினட்றார்கள். சர்வதேசம் எம்மை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்தென்றும் எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்களை வீட்டுக்குள் அழைக்கின்றார்.  

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் எப்போதும் போல கோரி நிற்கிறார்கள். ஆதன் சில வேட்பாளர்களும் தேர்தல் களங்களில் மாவீரர்களின் தியாகத்தைப் பற்றி பேசவும் முனைகிறார்கள். புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள வேறு ஒரு பிரிவினர் தமிழ் தேசிய பேரியக்கத்தை வலுவாக கட்டியெழுப்புவதற்கான மாற்றுச் சக்தி அல்லது தலைமை வேண்டும் என்றும் வாதிடுகின்றார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் இருப்பை சிங்கள மேலாதிக்கத்திற்குள்ளும் பூகோள அரசியல் ஜாம்பவான்களிடமும் அடகு வைத்து விட்டது என்றும் அவர்கள் போர்க் கொடி உயர்த்துகிறார்கள்.  ஈழத் தமிழர்களுக்கான செயலகம் தீர்மானமிக்க இக்கால கட்டத்தில் மிக முக்கியமான கேள்விகளை முன்வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.  

கேள்வி 01: 

2016 இல் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன? 1987 களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்த 13ம் திருத்தச் சட்டத்தை அடியொற்றிய தீர்வா? 1985 இல் திம்பு மாநாட்டில் ENLF உட்பட தமிழ் தலைமைகள் வலுயுறுத்திய தீர்வா? அல்லது 38 வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் ஏகோபித்து ஆணையை வழங்கிய வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அமைவான தீர்வா? எந்த தீர்வு என்பதை இந்த பொதுத் தேர்தலிலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்லுமா?  

கேள்வி 02: 

பேரம் பேசுதல் எந்த நியாயாதிக்கத்திற்குள் அல்லது கொள்கைக்கு அமைவாக செய்யப்படுகிறது? 2010 ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 5 வருடங்களாக செய்யப்பட்ட பேரம் பேசல்கள்தான் என்ன? இந்தியாவோடு எதனைப் பேசினீர்கள்? அமெரிக்க தலைமையிலான மேற்குலகோடு எதனை பேசினீர்கள்? 

தென்னாபிரிக்கா மற்றும் புலம் பெயர் சமூகத்துடன் பேசப்பட்ட விடயங்களில் சாராம்சமாவது என்ன? இதில் தமிழர் இருப்பு, வாழ்வியல், தேசியம், தமிழர்களின் ஏகோபித்த தீர்வு சம்பந்தமாக ஏதாவது பேசப்பட்டதா? மைத்திரி அரசில் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்து அதன் பிரதான பங்காளர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரி ஆகியோரிடம் பேசப்பட்ட பேரங்கள் என்ன?  

கேள்வி 03: 

2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் சூடு தனிய முன்னர் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்று வெளிவர இருக்கின்றது. இலங்கையில் நடைபெற்றது பாரிய இனப்படுகொலை என்றும் கட்டமைக்கப்பட்ட ஓர் இனஅழிப்பு (Structural Genocide) என்றும் புலம்பெயர் தமிழர்களும் மனித உரிமைகள் அமைப்புகளும் கூறிக் கொண்டு இருக்க, அது தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? 

இலங்கையில் புரியப்பட்டது போர்க்குற்றங்கள் என்றும் அக்குற்றங்களை புரிந்தவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்படல் வேண்டும் என்றும் தமிழ் உணர்வலை ஒன்று இருக்கும் போது அது தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை என்ன? அல்லது வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசின் உள்ளக விசாரனையை ஏற்றுக் கொண்டு பேரினவாத தேசிய அரசாங்கத்தோடு காலம் கடத்தப் போகின்றதா?  

கேள்வி 04: 

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் 20 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஆசனங்களை வென்று, 2005 ஆம் ஆண்டு புலிகள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த போதும் புலிகளோடு சேர்ந்து அந்தக் கருத்துக்கு வலுச்சேர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான தற்போதைய நிலைப்பாடு என்ன? 

2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 07ம் திகதி தனது பாரளுமன்ற உரையில் புலிகள் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் மீறியவர்கள் என்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தேர்தல் மேடைகளிலே தமிழ் மக்கள் முன் இதே கருத்தினை சொல்லுவாரா?  

முடிவுரை:

ஜனநாயகத்தை நாங்கள் திடமாக மதிக்கிறோம் என்று கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழத் தமிழர் செயலகத்தின் சவால்களுக்கு அல்லது விமர்சனங்களுக்கு முன்னால் பகிரங்கமாக பதில் சொல்வார்களா? அல்லது விவாதத்திற்கு வருவார்களா?  ஜனநாயக மரபுகளை அடிப்படையாக் கொண்டு அனைத்து ஊடகங்களும் இவ்விவாதம் தொடர்பான அழைப்பை பக்க சார்பின்றி பிரசுரம் செய்வார்களா? 

அல்லது தமிழ் தேசிய இனத்திற்கும் குறிப்பாக 30 வருட துயரங்களை அனுபவித்த தமிழ் மக்களுக்கும் ஒன்றுமே தெரியக்கூடாது என்று உள்வீட்டில் அரசியல் நடத்துவார்களா? இவ்விவாதத்திற்கான அழைப்பினை ஏற்றுக் கொள்ள விரும்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு வேட்பாளரோ அல்லது தலைவர்களோ எம்மோடு தொடர்பு கொள்ளலாம். தமிழர் தேசத்தின் எதிர்காலம் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்தியலும் விமர்சனங்களும் உருவாக்கப்படல் வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.  

தாயகப் பணிமனை, இல. 23, நடராஜா வீதி, இலிங்க நகர், திருக்கோணமலை. தொலைபேசி இல.: 026 2223561, 077 900 7475