நில அபகரிப்புக்கள் குறித்த குளோபல் தமிழ்ச் செய்திகளின் கட்டுரைகளுக்காக விருது வென்றார் தீபச்செல்வன்!!!
நெருக்கடி சூழலில் இயங்கிய சிறந்த ஊடகவியலாளர் விருது தீபச்செல்வனுக்கு!
குளோபல் தமிழ் செய்திகளுக்காக எழுதப்பட்டு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதமிழர் தாயக நில அபகரிப்புக்கள் குறித்த கட்டுரைகளுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நிலத்திற்காய் போராடும் தென்னைமரவாடி மக்கள், அபகரிக்கப்படும் வடக்கு கிழக்கு எல்லைக் கிராமங்கள், எமது நிலம் எமக்கு வேண்டும், சத்தமின்றி அபகரிக்கப்படும் ஒதியமலை முதலிய தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இன நில ஒடுக்குமுறை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைககள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விருதுகள் மும்மொழி ஊடகத்திற்கும் வழங்கப்பட்டபோதும் நெருக்கடி சூழலில் இயங்கியமைக்கான 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருதை தமிழ் மொழி ஊடகவியலாளர் தீபச்செல்வன் மாத்திரம் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
ஏற்கனவே இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நெருக்கடிச் சூழலில் செய்தி தேடலுக்கான சிறந்த ஊடகவிலாயளருக்கான பேராசிரியர் கைலாசபதி விருதையும் 2010ஆம் ஆண்டில் சிறந்த புகைப்பட ஊடவியலாளர் விருதையும் பெற்றுள்ளார்.
பாலேந்திரன் பிரதீபன் என்ற இயற்பெயருடைய தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பாடசாலை கல்வியை கற்றுள்ளதுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு பட்டம் பெற்றவர்.
சென்னைப் பல்கலைக்கழத்தில் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றுள்ளதுடன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அத்துறையில் ஆய்வியல் நிறைஞர் (M.Pihl) பட்டம் பெற்றுள்ளார்.
ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான தீபச்செல்வன் வட கிழக்கில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கள் மற்றும் வட கிழக்கு மக்களின் இன்றைய பிரச்சினைகள் தொடர்பிலும் மக்களின் குரலாக குளோபல் தமிழ் செய்திகளில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகின்றார்.
நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்