புலிகள் இயக்க சந்தேக நபர்களை தடுத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரும் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர்; சீல் வைத்து விசாரித்து வருவதாக கூறுகின்றது சி.ஐ.டி -
கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்க சந்தேக நபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த முகாம்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன.
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தனது பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவே இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கணகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேருமே இவ்வாறு கடத்தப்பட்டு கொழும்பு சைத்திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரகசிய தடுப்பு இடத்திலும் திருகோணமலை கடற்படை தளத்தின் கன்சைட் எனும் இரகசிய நிலத்தடி சிறைக் கூடத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசேட அனுமதி ஒன்றினைப் பெற்றுக்கொண்டு புலனாய்வுப் பிரிவின் கூட்டு கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வாதலமையிலான குழு இவ்விரு ரகசிய தடுப்பு முகாம்களையும் ஆய்வு செய்துள்ளதுடன் தற்போதும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள நிலத்தடி சிறைக் கூடங்களை உள்ளடக்கிய குறித்த கன்சைட் எனப்படும் இரகசிய இடத்துக்கு சீல் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த பெயரில் இரகசிய தடுப்பு முகாம்களை நடத்திச் சென்றமை தொடர்பில் அப்போதைய திருகோனமலை கடற்படையின் கட்டளை தளபதியும் தற்போதைய கடற்படை தலைமையக விநியோக பிரிவு பணிப்பாளராக கடமையாற்றுபவருமான கொமான்டர் கஸ்ஸப கோத்தாபய போல் உள்ளிட்ட 22 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ள நிலையில் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கும் அறிக்கை சமர்பித்துள்ளனர்.