ஆயுதமோதல்களின் பின்னான சூழமைவில் பெண்கள் குழந்தைகளுக் கெதிரான உரிமை மீறல்கள் மீதான ஒருபார்வை:-

  • இக் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தமிழ் சிவில் சமூக  அமையத்தினால் வவுனியாவில் கிராம அபிவிருத்தி நிறுவன (RDF) பயிற்சி வளநிலையமண்டபத்தில் (இல. 17, முதலாம்  ஒழுங்கை, குருமண்காடு வவுனியா) 27 யூன் 2015 அன்று காலை10.00 தொடக்கம் மதியம்  12.00 வரை நடைபெற்றது. ஆயுத மோதல்களின் பின்னரான சூழமைவில் பெண்கள் குழந்தைகளுக் கெதிரானஉ ரிமைமீறல்கள் அதிகரித்து  மேலும்விகாரமானபோக்கினை சமூகத்தில் வெளிக்காட்டிவரும் நிலையில் இப்பகிர்வினையும் கலந்துரையாடலையும் அமையம் வெவ்வேறு  மாவட்டங்களில் ஒழுங்கு செய்து வருவதன் தொடர்ச்சியாக வவுனியாவிலும் ஒழுங்கு செய்திருந்தது. ஒரு சமூகமாகஇச்சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அதற்கான உரையாடல் வெளியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இந்நிகழ்விற்கான முயற்சி எடுக்கப்பட்டிருந்தது.

பெண்கள் குழந்தைகளுக் கெதிரான அண்மைக் கால உரிமைமீறல் செய்திகள்    பற்றி ஊடகங்களின்    நடத்தைக் கோலங்கள் எனும் பொருளில் சிரேஷ்ட பத்திரிகையாளர்திரு. மாணிக்கவாசகர் அவர்களின் கருத்துப்  பகிர்வுகள்:

•    தற்போதைய போரின் பின்னரான எமது வாழ்க்கைச் சூழலில் எமது சமூக்க் கட்டமைப்பு உடைந்துவிட்டது. ஊர் மற்றும் ஒருவரையொருவர் தெரிந்தோர் கிராமத்திலும் இல்லாது போய்விட்டனர். வன்முறைகளுக்கு இதுவும் காரணமாகும்.

•    பத்திரிகைகள் ஏனைய இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்புக் கூறுதல் தன்மை இல்லாமை- பொறுப்பற்ற தன்மை காரணமாக தரக்குறைவான எழுத்துகள் வருகின்றது; படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரே விடயத்தை இரு ஊடகங்கள் அறிக்கையிட்ட முறையை ஒப்பிட்டு அவ்வூடகங்கள் குறித்த விடயத்தை கையாண்ட விதம்பற்றிக் குறிப்பிடப்பட்டது.

•    பெரிய வலையமைப்பைக் கொண்ட ஊடகங்கள் செய்தியிடலில் ஓரளவு கவனமெடுக்கும் அதேவேளை பெரும்பாலான வலைப்பக்கங்கள் சமூக வலைத்தளங்கள் இவற்றில் கவனமெடுப்பதில்லை. சில ஊடககங்கள்/ பக்கங்கள் தெரிந்துகொண்டே- சரி என்ற வாதத்துடன் இவ்வாறு அறிக்கையிடுகின்றன.

•    சட்டம் ஒழுங்கை சரியாக அமுல்படுத்தாத நிலையும் வன்முறைகள் மீண்டும் மீண்டும் நிகழக் காரணம்.இந்நிலைமை இவ்வகையான வனழமுறைகளுக்கு ஒரு மறைமுகமான தூண்ணலை வழங்குகிறது.

•    அண்மைய புங்குடுதீவுச் சம்பவம் மீதான சட்டநடவடிக்கை- விசாரணைகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதானது வேறொரு செய்தியைச் சொல்லுகிறது. எந்தவொரு நீதிக்கான எழுச்சியும் ஏற்படாது தடுத்து விடவேண்டும் என்பதே இதன் பின்னாலுள்ள நடவடிக்கைகளாகும்.

பெண்கள் குழந்தைகளுக் கெதிரான அண்மைக்கால உரிமைமீறல்கள்- ஒரு  பெண்ணாயிருந்து    எதிர் கொள்ளுதல் எனும் பொருளில்சமூக ஆர்வலர், பொறியியலாளர் திருமதி.மைதிலி தயாபரன் அவர்களின் கருத்துப்  பகிர்வுகள்:

•    பெண்கள் தொடர்பான உரிமை மீறல்களில் சட்டம் சரியாகச் செயற்படவில்லை.

•    பெண்ணாக இருந்து எதிர்நோக்குவதை அரசியல், வேறு கோணங்களிலிருந்து அல்லாமல் பெண்களுடைய பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.

•    பெண் முன்னேறும்போது, சமூகத்தில் வெளியில் வரும்போது சம்பவங்களூடாக ஒடுக்குதல் நடைபெறுகிறது; மீண்டும் அதேவட்டத்துக்குள் தன்னை இழுத்துக்கொள்கிறாள்.

•    ஆண்களின் வளர்ப்பு முறை அவர்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பதால் அது தற்கால வன்முறை முன்னெடுப்புகளுள் அவர்கள் உள்ளீர்க்கப்படக் காரணமாக உள்ளது.

•    வன்முறைக்குப் பின் கிளர்ந்தெழுந்திருக்கிறோம். இது தொடர்ச்சியுள்ளதாக இருக்க வேண்டும்; முன்காப்பு முயற்சிகள் செய்ய வேண்டும்; இந்த முயற்சிகளை வேறு கோணங்களுக்கு இழுத்துச் செல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருத்துப்  பகிர்வுகளைத் தொடர்ந்து ‘பெண்கள் குழந்தைகளுக் கெதிரான  அண்மைக் கால உரிமை மீறல்களை ஒரு சமூகமாக எதிர்கொள்ளுதல்' எனும் தொனிப் பொருளில் பங்குபற்றுவோர் கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பரிமாறப்பட்ட கருத்துகள்:

•    இந்த வன்முறைச் சம்பவங்கள் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவா அல்லது சமூகப் பிரச்சனையாகவா பார்க்கப்பட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி அது சமூகப் பிரச்சனையாகவே பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

•    தற்போது குடும்பங்களுள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு மிடையிலான உறவு, ஊடாட்டம் போதாது. தற்போதைய தகவல்தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு நிலையில் அதன் தீய விளைவுகளை எதிர்கொள்ள இந்த உறவும் ஊடாட்டமும் அவசியமாகும்.

•    போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் அத்தியாவசியதேவையாகும். ஆனால் உளவியல் ஆற்றுப்படுத்தல் கட்டமைப்புகள் வேண்டுமென்றே மறுக்கப்பட்டன. இது பிறழ்வான வெளிப்பாட்டு நிலைகளுக்கு இட்டுச் செல்லப்பட வழி செய்யப்பட்டது. இது இன அழிப்பின் ஒரு பகுதியாக சர்வதேசச் சட்டங்களின்படி கொள்ளப்பட முடியும்.

•    ஊடகங்கள் ஊடக தர்மங்களை மீறும்போது அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதா, அதற்குரிய சட்டங்கள் ஏற்பாடுகள் இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இலங்கை இணையக் குற்றங்கள் முறைப்பாடு மற்றும் நடவடிக்கைப் பொறிமுறை பற்றிக் கூறப்பட்டது.

•    தற்கால வியாபார உத்திகளால் எல்லாப் பண்டங்களுக்குள்ளும் ஒரு போதை ஊட்டப்படுகிறது.

•    முற்காலத்தில் விழுமியங்கள் குடும்பம், சமயம், கல்வி என்பவற்றினூடாக ஊட்டப்பட்டன. விழுமியங்கள் தொடர்பான குடும்பம், சமயம், கல்வி என்பவற்றின் தற்போதைய வகிபங்கு என்ன எனும் கேள்வி சமூகத்தின் முன்னே எழுப்பப்பட்டது.

•    ஊடகங்கள் ஒவ்வொரு வகையான செய்திகளையும் என்னென்ன விதிகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும் என தெளிவான ஒழுங்குவிதிகள் உள்ளன. இத்தகைய செய்தியிடலை உணர்திறனுடனான அறிக்கையிடல் என அழைப்பார்கள். இது பல ஊடகங்களில் தற்போது காணப்படவில்லை.

•    உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன என்பது பற்றியும் அவை அதிகரிப்பதற்கான காரணங்கள் பற்றியும் அனுமானங்கள் அடிப்படையில் அபிப்பிராயங்களைக் கொண்டிராது ஆய்வு ஆதாரங்களூடாக அவைபற்றிய முடிவுக்கு வரவேண்டும். இப்பொழுது அவை சாத்தியமான விடயங்களாகும்.

(இக் கருத்துப் பகிர்வு, கலந்துரையாடல்தனித்த ஒரு நிகழ்வு அல்ல. அமையத்தின் இனிவரும் இவ்வகையான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்)

- தமிழ் சிவில் சமூக  அமையம், வவுனியா.
(27 யூன் 2015.