தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம்

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2 ஆம் நிலை சிறுபான்மை இனமாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன், 2012 ஆம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டில் 10.3 வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
ஜூலை 11 ஆம் திகதி உலக குடித்தொகை தினத்தை ஒட்டி இலங்கையில் தமிழர்களின் எதிர்கால இருப்பு தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் ;
யுத்தம், மீள்குடியேற்ற மறுப்பு, குற்றங்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்படாமை, திட்டமிட்ட பாரபட்சங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்படும் இனமாக இலங்கையில் தமிழ் மக்கள் தொடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் உலகத்தில் போருக்குப் பின்னர் உச்சகட்டமான சனத்தொகை வளர்ச்சி பெற்ற நாடுகள், அல்லது பிரதேசங்கள் போன்று வடகிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னர் சனத்தொகை வளர்ச்சியடையவில்லை. வடகிழக்கு மாகாணங்களில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்.
இதற்கு மேல் வடகிழக்கு மாகாணங்களில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை மிக அதிகம். இதற்குப் போர், காணாமல்போதல், இறப்பு வீதம் அதிகரிப்பு போன்றன காரணங்களாகும்.
இந்நிலையில் ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையை சமப்படுத்துவதற்கான எவ்விதமான செயற்பாட்டுத் திட்டங்களும் எம்மிடம் இல்லை. இதேபோன்று சனத்தொகை அதிகரிப்பதற்கான திட்டங்களும் எங்களிடம் இல்லை.
ஆனால் சனத்தொகை அதிகரிப்பை செய்யவேண்டிய கட்டாயத்தில் இன்றைய நிலையில் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
சனத்தொகை அதிகரிப்பிற்கு முதலில் நாங்கள் செய்யக் கூடிய விடயம் என்னவெ ன்றால் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள காலம் தாழ்த்திய திருமணங்களை நிறுத்த வேண்டும். இலங்கையில் காலம் தாழ்த்திய திருமணங்களில் தமிழர்களே முதலிடத்தில் உள்ளார்கள். அதிலும் யாழ்ப்பாணம் முதலாவது இடத்தில் இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் ஆண்கள் 27.4 வீதமாகவும், தமிழ் பெண்கள் 24.4 வீதமாகவும் இருக்கின்றனர். ஆனால் இந்த வீதத்தின் அடிப்படையில் சிங்களவர்கள் சற்று குறைவாகவும், அதனை விட குறைவாக முஸ்லிம்களும் உள்ளனர்.
அதாவது அவர்கள் உரிய வயதில் திருமணம் செய்கிறார்கள். நாங்கள் உரிய வயதில் திருமணம் செய்ய முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக பொருளாதாரம், சீதனம், சாதி, மதப் பிரச்சினை, பிரதேசவாதம் உள்ளிட்ட பல சிக்கல்கள் எங்கள் சமூகத்தில் இருக்கின்றன. இது தற்போது மேலும் அதிகரித்திருக்கின்றது. எனவே இவை எல்லாம் முதலில் களையப்படவேண்டும்.
கால தாமதமான திருமணங்கள் சனத்தொகை வளர்ச்சியை மட்டுமல்லாமல், பிறக்கும் அடுத்த சந்ததியையும் பல்வேறு வகையில் பாதிக்கின்றது. குறிப்பாக மந்தபோசனை உள்ள குழந்தைகள், உளப்பாதிப்புள்ள, நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
எனவே ஆரோக்கியமான சமூகத்திற்கும் சனத்தொகை வளர்ச்சிக்கும் உரியகாலத் திருமணம் சிறந்ததாகும்.
இதேவேளை, யுத்த சூழ்நிலைகள் உருவாக முன்னர் எங்கள் சமூகத்தில், குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 4.1 ஆக இருந்தது. அதாவது ஒரு குடும்பத்தில் 4 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தன.
ஆனால் அது படிப்படியாக குறைவடைந்து 2003 ஆம் ஆண்டு 2.1ஆக இருந்ததுடன், 2005 ஆம் ஆண்டில் 2.3 ஆக மாறி போருக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டில் 2.4 ஆக காணப்படுகிறது. எனவே இந்த அளவு போதாது,
முஸ்லிம்கள் பிறப்பு வீதத்தில் 3.3 ஆக காணப்படுகிறார்கள். சிங்களவர்களும் அதிகம். இந்நிலை தொடர்ந்தால் 2012 ஆம் ஆண்டில் 11.2வீதமாக இருந்த தமிழர்கள் 2021 ஆம் ஆண்டில் 10.8 வீதமாகவும், 2031 ஆம் ஆண்டில் 10.3 வீதமாகவும், 2041 ஆம் ஆண்டில் 9.8 வீதமாகவும் வீழ்ச்சியடையும் நிலை வரும்.
2012 ஆம் ஆண்டு 74.9 வீதமாக இருந்த சிங்களவர்கள், 2041 ஆம் ஆண்டு 100 வீதமாகவும், 2012 ஆம் ஆண்டில் 9.2 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 2041 ஆம் ஆண்டில் 11.7 வீதமாகவும் மாறும் நிலை உள்ளது.
தென்னிலங்கையில் சனத்தொகை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் ஊக்குவிப்பு வடகிழக்கு மாகாணங்களுக்கு இல்லை. மாறாக கட்டாய கருத்தடைகளும் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுமே தொடர்கின்றன.
யாழ்.மாவட்டத்தில் மட்டும் 16 வீதமானவர்கள் வறுமை நிலையில் உள்ளனர். இலங்கையில் மந்தபோசனை உள்ள குழந்தைகள் உள்ள மாவட்டங்களில் வவுனியா 51 வீதமும் யாழ்ப்பாணம் 41வீதமுமாக உள்ளன.
இலங்கையில் சனத்தொகை குறைந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும் மன்னாரும் மாறுகின்றன. எனவே இவற்றை, நிவர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
இந்நிலையில், தமிழர்கள் காலம் தாழ்த்திய திருமணங்களை முழுமையாக நிறுத்தவேண்டும். பொருளாதார ரீதியாக வலுப்பெறவேண்டும்.
பெண்கள் தொகை ஆண்கள் தொகையுடன் சமப்படுத்தப்படவேண்டும். தமிழ் பெண்களுக்கான பா துகாப்பான சூழல் உருவாக்கப்படவேண்டும் என்றார்.