பிரான்ஸில் தமிழ் மக்களின் பணத்தை சூறையாடும் மர்மகும்பல்!!! எச்சரிக்கை

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் பணம் மற்றும் பொருட்களை சூட்சுமமான முறையில் மர்மகும்பல் ஒன்று கொள்ளையடிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பலர் எமது செய்திப்பிரிவை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் மர்மகும்பல், உங்கள் வீட்டுத்தொலைபேசி மற்றும் கடன் அட்டைகளில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
இந்தக் கொள்ளைக் கும்பலிடம் மூன்று வகையில் பாதிக்கப்பட்டவர்கள் தந்த தகவல்களின் பிரகாரம்,

Achan - Coforama ஆகிய பிரிவுகளில் இருந்து பேசுவதாக அடையாளப்படுத்தும் நபர்கள், குலுக்களில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இதில் உங்கள் தொலைபேசி இலக்கங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2000 யூரோ பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர். இதற்காக உங்களுடைய பெயருடன் ஒரு இலக்கமும் தருகின்றனர் (உதாரணமாக Balasingam 04). 08 99 96 96 1 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் பரிசை, பொருட்களாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்துகின்றனர். குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தும் போது 1€50 பணம் வலிசூலிக்கப்படும். அது பரிசுப்பொருட்களுடன் சேர்த்து மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். எனவே எந்த செலவும் இன்றி அழைப்பினை மேற்கொண்டு பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ஆவர்வத்தில், நபர் ஒருவர் அழைப்புக்களை மேற்கொள்ளும் போது, மறுமுனையில் இருந்து 30 நிமிடங்களில் அழைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் அழைப்புக்களை ஏற்படுத்துக்கள் என அறிவுறுத்தல் வழங்குகின்றனர். நான்கு வகையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். பரிசுப்பொருளை பெறும் ஆவர்வதில் ஒரு பொருளின் பெயரை தெரிவிக்கும் போது அந்தப் பொருள் தொடர்பான உற்பத்தி, தரம் என தெரிவித்து காலநேரத்தை இழுத்தடிக்கின்றனர். ஒரு பொருள் தொடர்பான விளக்கத்தை வழங்க 30 நிமிடங்கள் வரையில் எடுத்துக் கொள்கிறார்கள்.  துண்டிக்கப்பட்ட அழைப்பினை மீண்டும் ஏற்படுத்தி மற்றைய மூன்று பொருள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்து கொள்கிறார். இதன்மூலம் 2h மணித்தியாலங்களை தொலைபேசி அழைப்பின் ஊடாக விரயம் செய்கிறார்.
இந்த மோசடி மூலம் பணத்தை இழந்தவர் மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தி இலவசம் என்று அறிவுறுத்தப்பட்டது எனினும் பணம் அறவிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்படும் போது, அதற்கு சரியான பதில் வழங்காமல் அழைப்பு துண்டிக்கப்படுகிறது.
Sarcelles பகுதியில் உள்ள ஒருவர் இந்த முறையின் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார். 08 99 96 96 11 இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அழைப்பு விடுத்தாக அவர் குறிப்பிட்டார். மோசடி மூலம் 180 யூரோக்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மற்றுமொரு வகையில் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டு தொலைபேசிக்கு அழைப்புக்களை மேற்கொண்டு அமெரிக்காவில் இருந்து பேசுவதாகவும், உங்கள் கணனியில் காணப்படும் கோளாறுகளை தீர்க்க இலாபகரமான மென்பொருட்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். உதாரணமாக 50 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படும் மென்பொருட்களை வெறும் 8 யூரோக்களுக்கு வழங்குவதாகவும், மென்பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் கடன் அட்டை மூலம் பணம் செலுத்த வேண்டும் எனவும் கோருகின்றனர். உண்மையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், சூழ்ச்சி தெரியாமல் தமது கடனட்டை மூலம் செயலியை வாங்குகின்றனர். இதன்மூலம் மோடிக்காரர்கள், உங்கள் கடனட்டை இலக்கத்தை பெற்று பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறான மோசடி கும்பல்கள் பிரெஞ்சு மொழியில் பேசாது, ஆங்கில மொழியில் பேசுகின்றனர். பிரான்ஸில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று, அமெரிக்காவில் இருந்து பேசுவதாக ஏமாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் நிலையங்களிலிருந்து உங்கள் வீட்டு தொலைபேசிக்கு அழைப்புக்களை மேற்கொள்வோர். பொதி(colis) வந்துள்ளதாகவும், அதனை எடுக்க கணவன் - மனைவி இருவரும் வரவேண்டும். அப்போது தான் பொதி (colis) கையளிக்கப்படும் என அறிவுறுத்துகின்றனர். இதனை நம்பி வீட்டில் உள்ளவர்கள் செல்லும் வேளையில், அவர்களின் வீட்டுக்குள் செல்லும் கொள்ளையர்கள் அங்குள்ள பொருட்களை களவாடிச் செல்கின்றனர். 
இவ்வாறான மோசடி கொள்ளைகள் உறுதி செய்யப்பட்டுள்ளமையால், பிரான்ஸில் வாழும் தமிழர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.