இலங்கையின் யாழ் மிரிசுவில் பகுதியில் 2000ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் தேதி எட்டு பொதுமக்களை கொலை செய்ததாக குற்றம்
சாட்டப்பட்டிருந்த இலங்கை ராணுவ சிப்பாய்க்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை
வழங்கியுள்ளது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை (25-06-2015) தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.
அதேசமயம், குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்தாவது நபரான சுனில் ரத்னாயக்க என்னும் இராணுவ சிப்பாய்க்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஆனால், தான் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கபதாகக் கூறிய சுனில் ரத்னாயக்க தான் இந்த கொலைகளை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய நீதிபதிகள் அவருக்கு இந்த வழக்கில் மரணதண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்தரப்பின் வழக்கறிஞர் தனராஜ சமரகோன் கூறினார்.
இந்த தீர்ப்பின் முலம் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டுக்குள் பலம்வாய்ந்த கட்டமைப்பொன்று இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வழக்கில் அரச தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன கூறினார்.
காவல்துறையினரும், இராணுவத்தினரும் நியாயமான முறையில் விசாரனைகளை மேற்கொண்டதன் காரணமாகவே இந்த தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி: நியூஸ் ஷக்தி செய்தி.