மக்களின் நியாயமான கோபத்தை திசைதிருப்பும் தேசவிரோத சக்திகள் குறித்து விழிப்பு அவசியம்! - தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை!
(நன்றி:புகைப்படம்-சக்தி டிவி) |
இவ்விடயம் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான எழில் ராஜன் மற்றும் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
யாழ்/புங்குடுதீவில் பாடசாலைச் சிறுமி ஒருவர் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தமிழ் சமூகத்தை மீண்டும் துன்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. மரணித்தவரின் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளை அவர்களது நீதிக்கான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். உரிமைக்காகப் போராடிய ஒரு சமூகத்தில் இத்தகைய கொடூரமான சமூகப் பிறழ்வுகள் பெரும் கவலையைத் தருகின்றன. ஒரு சமூகமாக சுயதேடலும் சுயவிமர்சனமும் இன்று எமக்கு அவசியமானவை என்பதை இச்சம்பவம் ஞாபகப்படுத்துகின்றது.
இவ்விடயம் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பின்வரும் விடயங்களைச் சுட்டி காட்ட விரும்புகிறது:
வடக்கு கிழக்கு எங்கணும் இயல்பாக மக்கள் குறிப்பாக மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை சமூகத்தின் ஒட்டுமொத்த கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தக் கோபம் நியாயமானதும் முறையாக வெளிப்படுத்தப்பட வேண்டியதுமாகும். எனினும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நியாயமான கோபத்தை பிழையான வழியில் திசை திருப்ப தமிழ்த் தேச விரோத சக்திகள் முயற்சிப்பது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
போராட்டத்தின் நோக்கம் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பொதுச் சொத்துக்களை நாசம் செய்வதோ வீதியை மறித்து டயர்களை எரிப்பதோ நீதியை உறுதிப்படுத்தாது. காவல்துறை தொடர்பில் எம்மத்தியில் நம்பிக்கையீனம் இருப்பது விளங்கிக் கொள்ளக் கூடியதாயினும் எமது போராட்டத்தின் அறத்தின் பாற்பட்ட அடிப்படைகளை நாமே சிதைப்பது முட்டாள்தனமானது. குறிப்பாக நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்கள் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை.
பொலீசார் விசாரணைகளை பக்கச் சார்பின்றி நடாத்துவதை உறுதிப்படுத்த தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு தேவை. அதனைச் சாத்தியப்படுத்துவதற்கு தேவையான அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க அறவழி போராட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அக்குழு தலைமையில் போராட்டம் கட்டுக்கோப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு உரிய விவேகமான தலைமையை சமுக அக்கறை கொண்டவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் சம்பந்தப்பட்ட தரப்புக்களும் இனங்கண்டு வேகமாக செயற்படுவது முக்கியமானதாகும்
2. போருக்குப் பின்னரான சூழலில் எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் நாம் அறிய வரும் முதல் சம்பவம் இதுவல்ல என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. இரண்டு மாதங்களுக்கு முன் கிளிநொச்சி, கனகராயன்குளத்திலும் பாடசாலைச் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்பட வேண்டியது.
போருக்குப் பின்னரான சூழலில் எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு பொதுவில் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்:
1) தமிழர்கள் தாயகத்தில் தொடர்ந்து ஆழமாக ஊடுருவியிருக்கும் இலங்கை இராணுவத்தின் இராணுவமயமாக்கம் .
2) தமிழ் மக்கள் மத்தியில் போர் உத்தியின் பகுதியாக வேண்டுமென்றே பெருக அனுமதிக்கப்பட்டிருக்கும் மதுபான, போதைவஸ்துப் பாவனையும் இதனது தாக்கங்கள் ஆணாதிக்க மனநிலையோடு கூட்டு சேரும் போது ஏற்படும் விளைவுகளும்.
3) போருக்குப் பின்னரான சூழலில் சமூக பாதுகாப்பு வலைத்தளங்கள் சிதைவடைந்து போயுள்ளமை.
கடந்த ஆறு வருடங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு பாலியல் வன்முறைச் சம்பவங்களை நாம் ஒட்டுமொத்தமாக விளங்கிக் கொண்டு கூட்டு நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும். இவற்றை பற்றிப் பேசுவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்குமான பாதுகாப்பான வெளிகள் உருவாக்கப்படுவது அவசியமானதாகும். அவ்வப்போது இத்தகைய சம்பவங்கள் பற்றி நாம் கேள்விப்படும் போது உடனடியாக சில நடவடிக்கைகள் எடுப்பதும் அதன் பின்னர் அமைதியாவதும் பிரச்சனைக்கு தீர்வாகாது. தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாது தவிர்க்க நீதி நிலைநாட்டப்படுவதொடு அதற்கான சமூகக் காரணிகளை இனங்கண்டு இல்லாதொழிக்க நீண்டகாலத் திட்டம் ஒன்றை வகுத்து கூட்டாக செயற்படுவதும் அத்தியாவசியமானது.
இவ்வாறு தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.