வவுனியாவில் 6 ஆம் வருட ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ நினைவேந்தலும், எழுச்சியும்!!!

முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட, காமக்கழுகுகளால் கொத்திக்குதறப்பட்ட உரிமைப்போராளி, ஊடகப்போராளி ‘இசைப்பிரியா’ உள்ளிட்ட பல ஆயிரம் பெண் விடுதலைப் போராளிகளை முன்னிறுத்தி நாட்டப்பட்டிருந்த நினைவேந்தல் சொரூபத்துக்கும்,
தமிழ் தேசிய குடியினம் வாழ்ந்து வளப்படுத்திய பூர்வீக நிலங்கள் மீது நிகழ்த்தப்பட்ட சிறீலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்புப்போரினால், உயிர்குடிக்கப்பட்ட அனைத்து உறவுகள் சார்பில் நாட்டப்பட்டிருந்த மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சொரூபத்துக்கும், வீரவணக்கம் செலுத்தியபோது...


வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மக்கள் நலன் அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தினதும், வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியலையும் சங்கத்தினதும் பங்களிப்புடன், வவுனியா கலாசார மண்டபத்தில் மே 18, 2015 (திங்கள் கிழமை),  ன்று உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்… ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! அனுஸ்டிக்கப்பட்டது.  

‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஈழதேசத்திலே தமிழ் தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. ஈழத்தமிழர்களின் இருப்புக்கான இந்த போராட்டத்திலே பல ஆயிரம் அக்னிக்குஞ்சுகளை பிரசவித்திருக்கிறோம். உவந்தளித்திருக்கிறோம். இனமான விடுதலைப்போராட்டத்தின் பக்கம் விரும்பியோ விரும்பாமலோ உள்ளீர்க்கப்பட்டு ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகிகளையும், கொடையாளர்களையும், மாமனிதர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நெஞ்சத்தில் ஏற்றி ‘வீரவணக்கம்’ செலுத்தினர்.

மனிதத்துவத்துக்கு எதிரான அரச வன்முறைகள், குற்றங்களினாலும், கொத்துக்குண்டுகள்-விமானக்கணைகள், பொஸ்பரஸ் உள்ளிட்ட எரிஅமிலவாயுக்களாலும் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளை நினைந்துருகி மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலிக்கும் நிகழ்ச்சியை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.