யாழ்/புங்குடுதீவு மாணவி வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி!!!

புங்குடுதீவின் மண்ணில் மகளாய் உதித்து பெற்றோரின் எண்ணங்களுடன் தன்னூர் சக மாணவ மாணவிகளுடன் அதிபர் ஆசிரியர்களுடன் வாழும் காலத்தின் தொடர்ச்சியை வித்தியா அனுவிக்க முடியாமல் அவள் புன்னகைக்க முடியாமல் அவள் எதிர்காலக்கனவுகளை நிதர்சனம் ஆக்கமுடியாமல்
வெறியர்களாய் பிறழ்வுள்ள பிறவிகளாய் கொடுர மிருகங்களாய் வந்து அவளை உடலை உயிரை சிதைத்து நாளின் கண்ணீர் ஊரெங்கும் பரவிக்கிடக்க அவளை கொன்ற பாவியர்மீது கோபம் கொப்பளிக்க இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வித்தியாவின் உடலுக்கு பெருமளவான மக்கள் மாணவர்கள் திரண்டுவந்து இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
அவளின் இறுதி வணக்கத்திற்கு வானம் கூட கண்ணீர் சிந்தும்முகமாக சோவென மழையைக் கொட்டியது.
யாழ் மாவட்ட பா.உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா சி.சிறீதரன் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட மக்கள் பிரதிநிதிகளும் வித்தியாவின் இறுதி நிகழ்விற்கு வந்து இறுதி விடை கொடுத்தனர்.


மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து கிளிநொச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புங்குடுதீவில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையை கண்டித்து, அதற்கு நீதிகோரி வித்தியாவின் படங்களையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு இன்று கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல பாடசாலைகளான, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி புனித திரேசாள் மகளிர் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
கிளிநொச்சி கச்சேரியில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஜனாதிபதிக்கான மகஜரை கையளி;த்ததுடன், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், தங்கள் கண்டனங்களையும் வெளியிட்டனர்.
மாணவர்கள் ஜனாதிபதிக்காக வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.,
பள்ளிச் சிறுமி பாதி வழியில் படுகொலை…!
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் நேற்று முன்தினம் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா மிகக்கொடூரமான முறையில் கூட்டு வன்புணர்வின் பின் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
இக்கொடூரமான கொடிய கொலை மிகவும் கொதிப்புணர்வுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இப்பாதகமான செயலைச் செய்து ஈவு இரக்க மற்ற முறையில் கொலையை செய்த பாவிகளை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென தவிக்கும் மனதுடன் மனவிரக்தியுடன் கூறுகின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது என்பதற்காக பின்வருவனவற்றை வேண்டி நிற்கிறோம்.
மாணவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். மாணவர்களது மாண்புகள் மதிப்பப்படல் வேண்டும்.

மாணவர்களின் கல்வி கற்றலுக்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களினது நிலை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
மாணவர்களாகிய எங்களுடைய உயிரை யார் பாதுகாப்பது? எமது கல்விக்கான உத்தரவாதத்தை யார் தருவார்கள்?
எமக்கான அமைதியான சூழலையும் அழகிய வாழ்வையும் உறுதிப்படுத்துவது யார்?
நாளாந்தம் அஞ்சி அஞ்சி கல்வி கற்க முடியாமல் நமைச்சலுக்கு உள்ளாகும் எம் வாழ்கைக்கு யார் பொறுப்பு?
வாழும் போதிலுள்ள எமக்கான உரிமைகள் மதிக்கப்படுமா?
இன்னும் இன்னும் இது போன்ற எத்தனை துன்பியல் அவலங்களை நாம் சந்திப்பது?
எம்மை வழி நடாத்தும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே! இதனைத் தங்கள் மேலான கவனத்திற்குத் தெரியப்படுத்துகிறோம்.
மாணவர்கள் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து  கொட்டும் மழையிலும் மத்தியில் யாழ் அல்லைப்பிட்டி பராசக்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.