மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முயற்சி:-

(விசேட செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்)மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முயற்சி:-
 மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு யாழ்.மாவட்ட பரவூர்த்திகள் சங்கத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோண்டாவில் கிழக்கில் உள்ள யாழ்.மாவட்ட பாரவூர்திகள் சங்க கட்டடத்தில் திங்கள் கிழமை காலை சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் சங்க கூட்டம் இடம்பெற்றது.

அக் கூட்டத்திலையே மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


EPDPன் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிதியம் பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவு சங்க அங்கத்தவருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக  கூறி மணல் ஏற்றி இறக்கும் தொழில் வழங்கி இருந்தார்.

அதற்காக ஒவ்வொரு அங்கத்தவர்களும் 5 ஆயிரம் ரூபாய் வைப்பு பணம் செலுத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு சேவைக்கும் 3௦௦ ரூபாய் செலுத்த வேண்டும். அப் பணம் தொழில் பெறுநர் சேமிப்பு பணம் எனவும் கூறி 2010 - 2013ம் கால பகுதியில் 575 பாரவூர்தி உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டனர்

வைப்பு பணமும்  தொழில் பெறுநர் சேமிப்பு பணமும் தொழிலில் இருந்து விலகும் போது மீள கையளிக்கப்படும் என கடித மூலம் உறுதி வழங்கியே பெற்றுக்கொண்டனர்.

வைப்பு பணமும் தொழில் பெறுநர் சேமிப்பு பணம் எனவும் கூறி பெற்றுக்கொண்ட சுமார் 2 கோடி ரூபாய் பணத்தினை மகேஸ்வரி நிதியம் திருப்பி தர வேண்டும் என கோரி கடந்த மாதம் 22 ம் திகதி யாழ்.நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் நடாத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது