அன்புடையீர்:
ஊடக அனுசரணை உதவிகோரல் தொடர்பாக,
‘கட்டாயப்படுத்தப்பட்டு
கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பிலான பொறுப்புக்கூறல்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் பாதுகாப்பும், நில ஆக்கிரமிப்பும்
பௌத்த மயமாக்கலும், இனவிகிதாசாரத்தை சீர்குலைக்கும் குடியேற்றங்களும்
இயற்கை கனியவளச்சுரண்டல்களும்’ இவ்வாறு தமிழ் மக்களின் நெஞ்சை அழுத்தும்,
குரல்வளையை நெரிக்கும் தவிர்க்க முடியாததும், அத்தியாவசியமானதும்,
கட்டாயமானதுமான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வையும், பரிகார நீதியையும்
வலியுறுத்தி கரிசனையோடு செயல்பணிகளை முன்னெடுத்துச்செல்லும் வவுனியா மாவட்ட
பிரஜைகள் குழுவினர்,
முள்ளிவாய்க்கால்
மானுடப்பேரவலத்தை நினைவேந்தி, நாடு தழுவிய ரீதியில் கவிதை, ஓவியம், சிறுகதை
படைப்பாக்க போட்டிகளை ‘பாடசாலை மட்டம், திறந்த மட்டம்’ என்று நடத்துவதாக
முடிவுசெய்துள்ளோம். வெற்றியாளர்களுக்கு மேடை நிகழ்ச்சி ஒன்றில்
பெறுமதிவாய்ந்த பரிசில்களும், நினைவுச்சின்னங்களும்,
பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.
ஈழத்தில்
தமிழ்மொழி பேசும் மக்கள் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கின்ற
மானுடப்பேரவலத்தை, இழப்பை, வலியை, கவலையை, கண்ணீரை இயம்புவதும், சமகால
பிரச்சினைகளை பிரதிபலிப்பதும், எஞ்சியுள்ள தமிழ் இனத்தின் இருப்பை
உறுதிசெய்வதும், வாழ்வியலின் உயிர்ப்பை சுகத்தை அழகை பண்பாட்டை நம்பிக்கை
ஊட்டுவதுமே குறித்த படைப்பாக்க போட்டியின் நோக்கமாகும்.
இரத்தம், வலி, கவலை, கண்ணீர் என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ‘தமது அநுபவக்கதைகளை இந்த உலகத்துக்கு தாமே கூறும்’ குறித்த படைப்புகளை பதிப்பித்து நூல் வடிவுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
எமது
இந்த நல்லெண்ண முயற்சிக்கு தங்களது ஊடக நிறுவனத்தின் ஊடக அனுசரணையை
பெரிதும் எதிர்பார்க்கின்றோம். தங்களது ஆதரவு கிடைக்கப்பெற்றால் இன்னும்
கூடுதல் பலம் பெறுவோம். எனவே தங்களால் முடிந்தவரையிலான ஊடக பங்களிப்பு
மற்றும் ஆதரவை வழங்கி ஊக்குவிக்குமாறு அன்புரிமையுடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
-வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு-
படைப்பாக்க போட்டி தொடர்பான விவரங்களும், விதிமுறைகளும் இக்கோரிக்கை மனுவுடன் இணைப்புச்செய்யப்பட்டுள்ளன.
.............................. .............................. .............................. .............................. .....................
“முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’’ நினைவேந்தல் படைப்பாக்க போட்டி! - 2015
முள்ளிவாய்க்கால் அதுவொரு - மானுடப்பேரவலம்!
முள்ளிவாய்க்கால் அதுவொரு - காலத்துயரம்!
இந்நாளை நினைவேந்தி, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின், மொழி கலை கலாசார மரபுரிமை பாதுகாப்புத்துறையினர் (‘நிதர்சனம்’ ஆவணகாப்பகம்) “முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்” நினைவேந்தல் படைப்பாக்க போட்டிகளை நடத்துகின்றோம்.
‘கவிதை, சிறுகதை, ஓவியம்’ போட்டிகளுக்கான பொது விதிமுறைகள்:
போட்டிகள் யாவும் கனிஸ்ட பிரிவு (தரம் 6-9 வரையான பாடசாலை மாணவர்கள்),
உயர்தரப்பிரிவு (தரம் 10-12வரையான பாடசாலை மாணவர்கள்),
திறந்தவெளிப்பிரிவு (வயதெல்லையற்ற) என மூன்று வகைப்பிரிவுகளாக நடத்தப்படும்.
போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தங்களது படைப்பை, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ பதிப்பிக்கவோ,
அன்றி வேறுஏதேனும் காட்சிப்புல வடிவத்தில் வெளிப்படுத்தும் காப்புரிமை
மற்றும் வெளியீட்டு உரிமையை, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வுக்கு
வழங்குகிறீர்கள்! (குறித்த விதிக்கு சம்மதித்தே தாங்கள் போட்டியில் கலந்துகொள்கின்றீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
படைப்பாக்கங்கள்
ஏற்கனவே அச்சு, ஒளி-ஒலி (மின்னியல்) ஊடகங்களில் வெளிவந்திருக்க கூடாது
எனும் கட்டுப்பாடுகள் எவையும் கிடையாது. ஆயினும் அவ்வாறு வெளிவந்திருப்பின்
அவை தொடர்பான விவரங்களை பிறிதொரு தாளில் எழுதி படைப்பாக்கத்துடன் இணைத்து
அனுப்புதல் வேண்டும்.
படைப்புகள், பிறிதொரு நபரின் படைப்பை பிரதி செய்யாத, சுயபடைப்பாக்கமாக இருத்தல் வேண்டும். ‘பிறிதொரு நபரின் படைப்பை பிரதி செய்யப்பட்டதென்று அடையாளம் காணப்படும் பட்சத்தில்’
அப்படைப்பு நிராகரிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் ‘வவுனியா மாவட்ட
பிரஜைகள் குழு’வால் அழைப்பு விடுக்கப்படும் போட்டிகளில் பங்குபற்றும்
வாய்ப்பினையும் இழக்க நேரிடும்.
பாடசாலை மாணவர்கள் தமக்கு பொறுப்பான அதிபர்-ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் மூலம் தமது படைப்பை, ‘தங்களது சுயபடைப்பாக்கம்’ என்று உறுதிப்படுத்தி சமர்ப்பித்தல் வேண்டும்.
போட்டியாளர்கள்
தமது பெயர், புனைபெயர், தபால் முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல்
முகவரி, பங்குபற்றும் போட்டிப்பிரிவு, குறித்த தகவல்களை பிறிதொரு தாளில்
எழுதி படைப்பாக்கத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
திறந்தவெளிப்பிரிவினர் குறித்த விவரங்களுடன், “நான்
முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் நினைவேந்தல் படைப்பாக்க போட்டிக்கு
அனுப்பியுள்ள இந்தப்படைப்பு, எனது சொந்தப்படைப்பு என்பதனையும், இதனை நான்
யாரிடமிருந்தும் பிரதி செய்யவில்லை என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.” என்று உறுதிமொழி எழுதி கையொப்பமிட்டு அனுப்புதல் வேண்டும்.
படைப்புகள்
யாவும், தாயகம் தமிழகம் புலம் என்று குறித்த துறைகளில் பாண்டித்தியம்
பெற்றவர்களைக்கொண்ட நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு போட்டி
முடிவுகள் ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டு, மேடை நிகழ்ச்சி ஒன்றில்
வெற்றியாளர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்களும், நினைவுச்சின்னங்களும்,
பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு
போட்டிப்பிரிவிலும் ஒன்று முதல் மூன்று வரையான தரநிலைகளைப்பெறுபவர்களுக்கு
பரிசில்களும் நினைவுச்சின்னங்களும், நான்கு முதல் பத்து வரையான
தரநிலைகளைப்பெறுபவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்படும்.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும்.
‘கவிதை,
சிறுகதை, ஓவியம்’ ஆகியவற்றின் படைப்புகள் யாவும், ஈழத்தில் தமிழ்மொழி
பேசும் மக்கள் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கின்ற மானுடப்பேரவலத்தை,
இழப்பை, வலியை, கவலையை, கண்ணீரை இயம்புவதாகவும், சமகால பிரச்சினைகளை
பிரதிபலிப்பதாகவும், எஞ்சியுள்ள தமிழ் இனத்தின் இருப்பை உறுதிசெய்வதாகவும்,
வாழ்வியலின் உயிர்ப்பை சுகத்தை அழகை பண்பாட்டை நம்பிக்கை ஊட்டுவதாகவும்
அமைதல் வேண்டும்.
கனிஸ்ட
பிரிவு (தரம் 6-9 வரையான பாடசாலை மாணவர்கள்) போட்டியாளர்கள்,
ஓவியப்போட்டியில் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஓவியம்:
ஓவிய படைப்பாக்கத்துக்கு A3 அளவுடைய காகிதத்தை பயன்படுத்த வேண்டும்.
கனிஸ்ட
பிரிவினர் ‘மெழுகு’ வர்ணத்தையும், உயர்தரப்பிரிவினர் மற்றும்
திறந்தவெளிப்பிரிவினர் ‘நீர்’ வர்ணத்தையும் உபயோகித்தல் வேண்டும்.
கவிதை:
கவிதை படைப்பாக்கம் ‘A4 தாளின் ஒரு பக்கத்துக்கு குறையாமலும் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமலும்’ இருத்தல் வேண்டும்.
தாளின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்தலாகாது.
சிறுகதை:
சிறுகதை படைப்பாக்கம் கையெழுத்தாயின் ‘A4 தாளின் ஆறு பக்கங்களுக்கு குறையாமலும் ஏழு பக்கங்களுக்கு மேற்படாமலும்’ இருத்தல் வேண்டும்
கணினி தட்டெழுத்தாயின் ‘A4 தாளின் நான்கு பக்கங்களுக்கு குறையாமலும் ஐந்து பக்கங்களுக்கு மேற்படாமலும்’ இருத்தல் வேண்டும்.
கணினி எழுத்துரு அளவிடை 12 புள்ளியாக இருத்தல் வேண்டும்.
தாளின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்தலாகாது.
குறித்த விதிமுறைகளுக்கு கட்டுப்படாத படைப்புகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.
படைப்பாளர்கள்
ஒன்றுக்கு மேல்பட்ட போட்டிப்பிரிவுகளில் பங்குபற்றுவதோடு, ஒன்றுக்கு
மேல்பட்ட படைப்புகளையும் அனுப்ப முடியும். (ஆனால் குறித்த அறிவுறுத்தல்
விதிகளுக்கமைய படைப்புகளை வெவ்வேறாக இணைப்புச்செய்து அனுப்புதல் வேண்டும்.)
படைப்புகளை 10.05.2015க்கு முன்னர் எமக்கு கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு:
VavuniyaCitizen@ Gmail.Com எனும் மின்னஞ்சல் முகவரிகள் ஊடாகவும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தபால் தொடர்புகளுக்கு:
மே 18 படைப்பாக்க போட்டி – 2015
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு,
(மொழி கலை கலாசார மரபுரிமை பாதுகாப்புத்துறை)
236/5, 2ம் குறுக்குத்தெரு,
கூமாங்குளம், வவுனியா.
இலங்கை.