ரொம்பவும் ‘நீண்ட வாலு’ : விரும்பும் ரணில்!

கடந்த 29.03.2015 அன்று நண்பகல் 2.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தார். (இரண்டாவது தடைவையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான அவரது முதலாவது பயணம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.)  

அதற்கு முதல் நாளே (28.03.2015) முல்லைத்தீவு நகரத்தை ‘பச்சை நிறம்’ மூழ்கடித்துவிட்டது. திரும்புகிற இடமெல்லாம் பச்சையாய் தெரிகின்றனர் இராணுவத்தினர்! அண்ணார்ந்து பார்த்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்ன கொடிகளும், பச்சை நிறத்துண்டுகளும் - துணிகளும் அந்தரத்திலாடுகின்றன. எங்கும் பச்சை நிறம்! எதிலும் பச்சதாபம்!
(பூந்த்தளிர்  ப்ளாக்)
மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், (வன்னி) பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் - உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், ஐ.தே.க வின் அமைப்பாளர்கள், பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள், இவர்களுடனான சந்திப்பு மாவட்டச்செயலகத்தில் (கச்சேரி) நடைபெற ஏற்பாடாகியிருந்ததால், மாவட்டச்செயலகத்தை சூழவும் கடுமையான இராணுவ பாதுகாப்பும், சோதனைக்கெடுபிடிகளும்! 






மாவட்டச்செயலகத்தின் மேல்தளத்திலும், வளவுக்குள்ளும் இயந்திர துப்பாக்கிகளுடனும், தொலைதூரப்பார்வை கருவிகளுடனும் ஒருதொகை இராணுவத்தினர் (விசேட அதிரடிப்படையினர்) குவிக்கப்பட்டிருந்தார்கள்! மாவட்டச்செயலகத்துக்கு எதிரே உள்ள முல்லை.நகர் விளையாட்டுத்திடலை சூழவும் இன்னுமொரு தொகுதி இராணுவத்தினர் இறக்கி விடப்பட்டிருந்தார்கள். சிற்றுண்டிச்சாலைகள் முதல் இயற்கை உபாதையைப்போக்க ஒதுங்கும் இடங்கள் வரை இராணுவ புலனாய்வாளர்கள் ஆலாய்ப்பறக்கிறார்கள்! 

‘வட்டுவாகல் ஊடாக புதுக்குடியிருப்பு,’ ‘முள்ளிவாய்க்கால் ஊடாக புதுக்குடியிருப்பு’ மாவட்டச்செயலகத்தை அண்மித்து (வட்டமிட்டு) முல்லைத்தீவு மத்திய நகரத்துக்குள் பிரவேசிக்கும் இந்த இரண்டு பிரதான பாதைகளுடனான பொதுமக்கள் போக்குவரத்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன.  

திரை மறைப்புகளாலான சதுர கூண்டுகளுக்குள் அழைத்துச்செல்லப்பட்ட குழந்தைகள் முதல் பெண்கள், அந்தரங்க உறுப்புகள் வரையிலும் சோதனையிடப்பட்ட பின்னரே மாவட்டச்செயலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் இந்த மக்கள் அனைவரும் ஐ.தே.க வின் மாவட்ட கிளை அலுவலகங்களின் பெயர்ப்பட்டியல்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்றிவரப்பட்டவர்களே! ஏறக்குறைய ஐநூறு வரையிலானோர் இருந்தனர்.  

இரண்டு உலங்குவானூர்திகள் சகிதம் பிரதமர் ரணிலும், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் வந்திறங்கினர். இவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய படை பட்டாளம் அரக்க பறக்க! (இந்த கொசுறுகளும் வாண்டுகளும் சடுதியாக எங்கிருந்து தான் வந்து சேர்ந்தார்களோ தெரியேல்ல. ஆனால் நிச்சயம் இவ்விரு உலங்குவானூர்திகளிலும் வரவில்லை என்று மட்டும் பார்க்கத்தெரிந்தது.)   

பொதுஅமைதிக்கு இது பெரும் ஊறுசெய்விப்பதாகவும், சங்கடமாகவும் இருந்தது. சகிக்க முடியல்ல! இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், மாவட்டச்செயலகத்துக்குள்ளே சந்திப்பு தொடங்கியதும் இந்த கொசுறுகளும் வாண்டுகளும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களையும், சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பிரமுகர்களையும் முட்டிமோதித்தள்ளியது தான்! 

இவர்கள் யார்? என்று, உள்ளங்கால்களிலிருந்து உச்சந்தலை வரைக்கும் கண்களாலேயே அளவிடை செய்வோமாகவிருந்தால், ஐ.தே.க வின் அமைச்சர்கள், எம்.பிக்கள், அமைப்பாளர்களின் எடுபிடிகளே! இத்தனைக்கும் இவர்கள் தமது கடந்தகால சமுக நம்பகத்தன்மையற்ற செயல்பாடுகள் மூலமாக ‘சமுக அந்தஸ்தை’ இழந்தவர்களே!  

ஆனால் ரணில், தனக்கு பின்னால் ஒரு கூட்டம் ஆலாய்ப்பறப்பதை விரும்புகிறார். அது கள்ளனாய் இருந்தாலென்ன? காவாளியாய் இருந்தாலென்ன? தனக்கு பின்னால் ஒரு கூட்டம் அரக்க பறக்கத்திரிவதை ரசிக்கிறார். தான் பயணம் செய்யும் இடமெல்லாம் ‘நாடு மிரளுமாறு’ பொலிஸ் - இராணுவ படைபட்டாளம் சூழ்ந்துகொள்வதை ரணில் கௌரவமாக நினைக்கிறார். அவருக்கு உள்ளுர ஏதோ ஒரு மகிழ்ச்சியையும் செருக்கையும் அது கொடுக்கிறது! 

‘அட! அவனா நீ?’

கடந்த 2012ம் வருடம் மே மாதம் முதலாம் நாள் யாழ்ப்பாணத்தில் தனது தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டு மேதின நிகழ்ச்சியை நடத்துவதற்காக, ஓரிரு நாள்கள் முன்னதாகவே யாழ்ப்பாணம் சென்றிருந்த ரணில், 29.04.2012 அன்று நெடுந்தீவுக்கு பயணம் செய்திருந்தார். அங்கு ரணிலுக்கான போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அப்போது ஈ.பி.டி.பியினர், ‘பொதுமக்களை ரணிலின் கூட்டத்துக்கு செல்லக்கூடாது என்றும், ரணிலுக்கு எவ்வித உதவிகளையும் செய்யக்கூடாது என்றும்’ அச்சுறுத்தியதையடுத்து, வாகன ஒழுங்குகள் மற்றும் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். இதனால் ரணில் தனது குழுவினருடன் நடந்தும், லான்ட் மாஸ்டரிலுமே நெடுந்தீவின் குக்கிராமங்களுக்குள்ளே சென்ற சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கலாம்! (நினைவு தப்பியிருந்தால் மீள்நினைவுக்கு கொண்டு வாருங்கள். தங்களை அறியாமலேயே சத்தமாக சிரித்து விடுவீர்கள்.)  

‘நெடுந்தீவு மக்கள் என்னுடன் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். தங்களுக்கு ஏதும் நடைபெறும் என்று அச்சப்படுகிறார்கள். நான் நெடுந்தீவு வருவதை அறிந்துகொண்டு, மக்களை எனது கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஈ.பி.டி.பி கட்சியினர் எச்சரித்துள்ளார்கள். இனம்தெரியாத இளைஞர்கள் சிலர் என்னைச்சுற்றி சுற்றி வெள்ளைநிற மோட்டார் சைக்கிள்களில் வருவதை அவதானித்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு பயணம் செய்வதற்கு வாகனம் கொடுக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளதால், நான் சிறிய லான்ட் மாஸ்டரில் சென்று கொண்டிருக்கின்றேன்.’ இது 29.04.2012 அன்று நெடுந்தீவில் கையறுநிலையில் நின்றுகொண்டு ஊடகங்களுக்கு திருவாளர் ரணில் பாடிய கெஞ்சல் ஸ்தாயி!     
ரணில் குழுவினர் அங்கு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தீவின் நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருந்தன. ‘எதுவும் நடக்கலாம். கொலையும் நடக்கலாம்’ எனும் அபாயகரமான சூழலில் பொலிஸ்ஸாரும் - இராணுவத்தினரும் கையை விரிக்க, இறுதியில் கடல்படையினர் விரைந்து செயல்பட்டு ரணில் குழுவினரின் பாதுகாப்பை பொறுப்பேற்று நயினாதீவு வரைக்கும் பவுத்திரமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டு திரும்பிச்சென்றனர். 

நெடுந்தீவிலிருந்து ரணில் குழுவினரை அழைத்துக்கொண்டு கடல்படையினர் புறப்படும் முன்னர், ‘நயினாதீவு வரைக்கும் தான் நாங்க பாதுகாப்பு தரமுடியும்.’ என்று அழுத்த திருத்தமாகக்கூறியே அழைத்துச்சென்றனர். அப்படியாயின் ‘அதற்கு அங்கால எப்பிடியாவது புழைத்துப்போங்கள்’ என்று தானே அர்த்தம்!

சமகால அரசியல் சூழமைவுகளில் ரணிலின் நடத்தைகளை முன்னிறுத்தி குறித்த சம்பவத்தை அசைபோடும் போது, ‘அட அவரா இவர்’ என்று ரணிலை பார்த்து பிரமிப்பு எழவில்லை. மாறாக, சிரிப்பையே அது வரவழைக்கிறது. ஆழ்ந்த அநுதாபங்களையும் இரங்கல்களையுமே அவருக்கு தெரிவிக்க தோனுகின்றது. ஆகமொத்தத்தில் ஒன்றேஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாகப்புரிகிறது.

பாராளுமன்ற தேர்தல் காய்ச்சல் (வருத்தம்) பீடித்து, எப்பாடுபட்டாவது எம்.பி ஆகிவிட வேண்டும் என்று, இவர்கள் எம்பி எம்பி குதிக்கிறார்கள் என்பதுவே அதுவாகும்!

முல்லைத்தீவிலிருந்து…
சுயாதீன இளம் ஊடகவியலாளர்,
-அ.ஈழம் சேகுவேரா-