இராயப்பு யோசப்பு ஆண்டகையின் 75வது அகவை! - நேரில் வாழ்த்திய ‘நாங்கள்’ இயக்கம்!

'கூட்டுச்சதியின் குட்டை உடைத்த விடுதலைப்பசியாளன்' மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை! - நேரில் வாழ்த்திய ‘நாங்கள்’ இயக்கம்!

தமிழினம் பற்றிய புரிதலோடும், தமிழ் நிலம் பற்றிய தெளிதலோடும் ஈழத்தவர்களின் உரிமைக்குரலாக, உண்மைக்குரலாக ஆசிய பிராந்தியம் கடந்து சர்வதேச விவகாரம் வரை கர்ஜித்துவரும் வணக்கத்துக்குரிய மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் இன்று (16.04.2015) தனது 75வது அகவையுறுகிறார். 

மேதகு இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள்,

சிறீலங்கா அரச படைகளின் நிலஆக்கிரமிப்பு போரில் நிகழ்த்தப்பட்டுள்ள இறப்புகளின் (படுகொலைகள்) எண்ணிக்கையை, ‘பரிகார நீதியையும் தீர்வையும் தர வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையே’ நாற்பதாயிரம் என்று குறைத்து மதிப்பிட்டபோது, 

இத்தனைக்கும் சிறீலங்காவின் கொலைக்களத்துக்குள் இருந்துகொண்டு ‘ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர்’ கொல்லப்பட்டுள்ளனர் / படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மெய்யுரைத்து சர்வதேசத்தின் கூட்டுச்சதியின் குட்டை உடைத்த விடுதலைப்பசியாளன்! கனன்று கொண்டிருக்கும் இலட்சிய நெருப்பு ஆவார்!

அநீதிகளுக்கு எதிராக கோபத்தீயை மூட்டுகின்ற, நல்லிணக்கம், சாந்தி, சமாதானம், கூடிவாழ்தல், பகிர்ந்துண்ணல் பற்றி சகல சமுகங்களுக்கும் போதிக்கின்ற மனிதநேய பண்பாளனை, 

வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள, பல்கலைக்கழக – உயர்கல்வி மாணவர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், சமுக ஆர்வலர்கள் உறுப்புரிமை பெறும், மக்கள் ஆட்சி அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கமும் வாழ்த்தி பேருவகையுறுகிறது. 

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டகையின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (ஆயர் இல்லம்) இன்று (16.04.2015) பிற்பகல் 5.30 மணிக்கு, ஆண்டகையை சந்தித்து வாழ்த்துரைத்துள்ள ‘நாங்கள்’ இயக்கத்தினர், அவரது ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.