‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி திருகோணமலையில்!!!

திருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

மூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

கடல் கரையோர கிராமமான திருக்கடலூர் கிராமத்தில், கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கும், அலஸ்தோட்டம் கிராமத்தில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கும், திருமலை நகரத்தில் அதிகப்படியான வறுமைநிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதியான நாகராஜாவளவில் பத்து மாணவர்களுக்கும், பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் ‘நாங்கள்’ இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.  

வடக்கு கிழக்கில் சமுதாயத்தரத்தை உருவாக்கும் - உயர்த்தும் மக்கள் நலப்பணிகளில் ‘நாங்கள்’ இயக்கத்தினர் தமது வலுவுக்குள்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.  

தேவை எங்குள்ளதோ அதனை அடையாளம் கண்டு, அங்கு சிறிய அளவிலான நிதி ஊட்டம் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இன்னும் சில கிராமங்களை அடையாளம் கண்டிருப்பதாகவும், இரண்டாம் கட்டமாக விரைந்து உதவ இருப்பதாகவும் ‘நாங்கள்’ இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 
                                                                                    
                                                                                           (நன்றி: புரட்சி வெல்க-wetamizhar)