நவீனகாலச் சீர்திருத்தவாதிகளுக்கு முன்னோடி சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ – வாழ்க்கைக் குறிப்பு
சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ, எந்த வித வளங்களும் இன்றி இருந்த ஒரு நகரை அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார மையமாக மாற்றும் அளப்பரிய சாதனையைச் செய்தவர். கடினமான நடைமுறைகளை கையாண்டதாகக் கூறப்பட்டாலும் அவர் முன்னெடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவே சர்வதேச அளவில் சிங்கப்பூர் தனித்துயர்ந்து நிற்கிறது.
நவீன சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லி குவான் யூ, 1959-ம் ஆண்டில் இருந்து 1990-ம் ஆண்டு வரை மொத்தம் 31 ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர். பிரிட்டிஷ் காலனியாகவும் மலேசியாவின் அங்கமாகவும் இருந்த கடினமாக தருணங்களில் நாட்டை வழிநடத்தியவர். எந்தவிதமான இயற்கைவளமும் இ்ல்லாமல், மிகவும் பின்தங்கிய காலனியாக இருந்த ஒரு நகரத்தை பொருளாதாரத்தில் ஆசியப் புலியாக மாற்றியவர் லீ.
லீயின் கொள்ளுத்தாத்தாவான லீ போக் பூன் 19-ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்தவர். பின்னாளில் சிங்கப்பூரில் ஓரளவுக்கு மதிப்பு மிக்க வணிக நிறுவனத்தை லீயின் குடும்பத்தினர் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
1923-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி பிறந்த லீ, சிங்கப்பூரின் தெலாக் குராவ் தொடக்கப் பள்ளியிலும், ராபேல்ஸ் கல்வி நிறுவனத்திலும் பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே கிரிக்கெட், டென்னிஸ், செஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் விவாதங்களிலும் பங்கேற்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு, லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் பயின்றார். அப்போதே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தனது நண்பருக்காக பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரைகளை மேற்கொண்டார் லீ. இதுவே அவருக்கு அரசியலில் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. சிங்கப்பூர் விடுதலைபெற்று தனிநாடாக வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் பிறப்பதற்கும் இதுவே காரணமாக இருந்தது.
இத்தகைய தாகத்துடன் 1949-ம் ஆண்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய லீ, அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் பிரிட்டிஷாருக்கு ஆதரவான அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1954-ம் ஆண்டு, தன்னைப் போன்று ஆங்கிலம் பேசும் சிலருடன் இணைந்து மக்கள் செயல் கட்சியைத் தொடங்கினார்.
1959-ம் ஆண்டு நடந்த தேர்தலில் லீயின் பிஏபி கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சிங்கப்பூருக்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய சுயாட்சியை பிரிட்டன் வழங்கியது. அதன் முதல் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட லீ, பிரிட்டிஷாரின் காலனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைக்கும் திட்டத்தை ஆதரித்தார். இந்த அடிப்படையில் 1963-ம் ஆண்டு மலேயா ஒன்றியத்தின் ஒரு பிராந்தியமானது சிங்கப்பூர். மக்களின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த இணைப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை
1964-ம் ஆண்டு சிங்கப்பூரர்களுக்கும், மலேயர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.இதில் 23 பேர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஒன்றியத்தில் இருந்து சிங்கப்பூரை வெளியேற்றுவது என மலேசியா தீர்மானித்தது.
இதன்படி 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி சிங்கப்பூர் தனி நாடாகச் சுதந்திரம் அடைந்தது. லீ அதன் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிலும் பிற நாடுகளிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார் லீ. இந்தோனேசியா போன்ற பகை நாடுகளை இணங்கிவரச் செய்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தாலும், மத நல்லிணக்கம், இன ஒற்றுமை போன்றவறைப் பாதுகாத்தவர் லீ.
பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக, காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் இளைஞர்கள் கட்டாயமாகப் பணியாற்றும் முறையைக் கொண்டுவந்தார். விதிமீறல்களுக்குக்கு பிரம்படி உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கும் முறை அமல்படுத்தினார். ஊழலால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்பதைப் புரிந்து கொண்ட அவர், அதற்காகவே அதிக அதிகாரங்களைக் கொண்ட கண்காணிப்பு அமைப்பையும் நிறுவினார். அவரது முயற்சிக்கு வேகமாகவே பலன்கள் கிடைத்தன.
எந்தக் கனிம வளமும் இல்லாத, குடிநீருக்குக்கூட வெளிநாட்டை நம்பியிருக்கும் நிலையில் இருந்த சிங்கப்பூர் ஆசியாவின் முதல்நிலைப் பொருளாதார நாடாக உயர்ந்தது. 1990-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும் மூத்த அமைச்சராகவும், சிங்கப்பூர் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவபவராகவே தொடர்ந்த லீ, நவீன காலச் சீர்திருத்தவாதிகளுக்கு முன்னோடியாகப் பார்க்கப்படுகிறார்.