தமிழரசுக்கட்சி பலவீனப்பட்டு விடும் என்ற காரணத்தால் தமிழ்
தேசியக்கூட்டமைப்பு என்றுமே பதியப்படக்கூடாது என தமிழரசுக்கட்சியின் மத்திய
செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை
தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை
(01.03.) வவுனியா, குருமன்காடு விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக்கூட்டம்
நடைபெற்றதுடன் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் உள்ள கட்சியின் மத்திய
செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தின்
போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் மோசமான செயற்பாடுகளை இராஜதந்திரம்
எனப்பாராட்டியும் அவர்களது உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டமையைக் கண்டித்தும்
தமிழரசுக்கட்சியின் செயலாளார் கே.துரைராஜசிங்கம் தீர்மானம் முன்மொழிய
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வழிமொழிய நிறைவேற்றப்பட்டிருந்தது.
அத்துடன்
யாழில் நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் அனந்தியின் வாகனத்தில்
கொண்டுவரப்பட்ட சுமந்திரனின் உருவப்படம் பொருத்தப்பட்ட உருவப்பொம்மை
எரிக்கப்பட்டதாகவும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உபதலைவரே இதற்கு
தீ மூட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு அதுதொடர்பில் தீர்மானமொன்றும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியை பாவித்து சம்பந்தன்
சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக விசமப்பிரசாரம் செய்து வருகிறார் ஆகவே
அவருடைய பதவியை பாராளுமன்ற குழு மறுபரிசீலனை செய்து பறிக்க வேண்டும் என்ற
வகையிலான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பாராளுமன்றத்தேர்தல் வருது, தீர்மானத்த வெளியால சொல்லாதைங்கோ!
இவ்வாறான
அனைத்து தீர்மானங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள போதும் தமிழ்
தேசியக்கூட்டமைப்பின் பதிவு தொடர்பாக அண்மைக்காலத்தில் வலியுறுத்தி
ஊடகங்களுக்கு கருத்துக்கூறிய தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில்
ஒருவரும் பேராசிரியருமான க.சிற்றம்பலம் அவர்களை தமிழரசுக்கட்சியின் தலைமை
கடுமையாக கண்டித்ததுடன்,
அதனைத்தொடர்ந்து
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உட்பட முக்கிய சில
உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு அரசியல்
கட்சியாக பதிவு செய்யப்பட்டால் தமிழரசுக்கட்சி பலவீனப்படுத்தப்படும். ஆகவே
ஒருபோதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு என்றுமே
செய்யப்படக்கூடாது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன்
தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் இவ்விடயமாக பகிரங்க கருத்துக்கள்
தெரிவிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அதனை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அடுத்து
பாராளுமன்ற தேர்தலொன்று இடம்பெறுவதற்கான சூழமைவுகள் காணப்படும் நிலையில்
இதனை பகிரங்கப்படுத்தினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்ற காரணத்தாலேயே
ஊடகங்களுக்கும் மக்களுக்கும் மூடர் பட்டம் கட்டி தீர்மானம்
பகிரங்கப்படுத்தப்படவில்லை என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ஆதங்கம் தெரிவித்தார்.