நாற்பது வருடமாக தமிழ் மக்கள் இழந்தவற்றை மீள வழங்க வேண்டும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்!!!

நிலற்படம்:கூகிள்
நாற்பது வருடமாக தமிழ் மக்கள் இழந்தவற்றை மீள வழங்க வேண்டும் என்று மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு மீள்குடியேற்றப் பணிகளுக்காக சென்றுள்ள அமைச்சரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று மானிப்பாய் பிரதேச செயலகத்தில் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த  நிகழ்விலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் மக்கள் நாற்பது வருடங்களாக இழந்தவற்றை ஈடுசெய்யும் முகமாக அரசியல் தீர்வொன்றை புதிய அரசு முன்வைக்கும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வலி வடக்கு தமிழ் மக்களின் விவசாய பூமி என்று தெரிவித்த அமைச்சர் தான் அந்தப் பகுதிக்கச் சென்று பார்த்தபோது அது ஒரு தங்க பொக்கிசம் என கருதியாகவும் குறிப்பிட்டார்.

ஆயிரம் கோயில்களை கட்டினாலும் மக்களின் வீடுகளுக்கு அவர்களை அனுப்பும் சேவையே ஓர் உன்னத சேவை என்று குறிப்பிட்ட அமைச்சர் அனைத்து மக்களும் விரைவில் அவர்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்றும் கூறினார்.

இதேவேளை அங்கு தலைமை உரை ஆற்றிய கலாநிதி ஆறுதிருமுருகன்
வலி வடக்கை சேர்ந்த பல முதியவர்கள் தங்கள் ஊருக்குச் சென்று உயிர்விட வேண்டும் என்று தவித்தே காலமாகியதாக தெரிவித்தார்.

அவ்வாறு பலர் நிறைவேறாத கனவுகளுடன் இறந்தது போனதாகவும் எஞ்சியுள்ள மக்கள் விரைவில் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை 2000 மாணவர்கள் கல்வி கற்ற விடுதலியுடன் கூடிய காங்சேன்துறை நடேஸ்வராக்கல்லூரி தற்போது தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தின் முன்னால் ஓர் கொட்டிலில் இயங்கிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த பாடசாலையை இராணுவத்தினர் அழித்து அங்கு சொகுசு விடுதிகளை அமைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் ஆலயங்கள் உட்பட அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வலி வடக்கில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மணி ஓசை கேட்க வேண்டும் என்றும் அந்தப் பகுதி பாடசாலைகள் மீள இயங்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்தார்.

                                                                                                                 நன்றி:
                                                                                   குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்