வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது:-இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்தியவர்!!!

அடல்பிகாரி வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, அவர் இல்லத்திலே இந்த விருதினை வழங்கி வாஜ்பாய்யை பெருமைப்படுத்தியுள்ளார்.

பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.

அயோத்தி பிரச்சினையும், குஜராத்தில் நடந்த கோத்ரா பிரச்சினையும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தது. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்றவர்கள் கூட வாஜ்பாய்யை மனம்திறந்து பாராட்டுவார்கள்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.

பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர். 1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயும் கலந்துகொண்டார்.

(தினசரி)