அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாக குறைக்கப்பட்டுள்ள
நிலையில், தற்போது எம்.பிக்களாக உள்ள ஒருசிலர் தொடர்ந்தும் தமது எம்.பி
பதவியை தக்கவைப்பது பெரும் சவாலானதாக மாறியுள்ளது.
ஒருவரை
ஒருவர் வெட்டி வீழ்த்தி, சதி செய்து வேலை பார்த்தால் மாத்திரமே தாம் வெல்ல
முடியும் எனும் அளவுக்கு ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணம்
- கிளிநொச்சி இவ்விரு மாவட்டங்களும் இணைந்ததே ஒரு தேர்தல் தொகுதியாக
இருந்து வருகின்றது. இந்நிலையில் சிறீதரனின் எம்.பி கனவும் பல்வேறு அரசியல்
காரணிகளாலும், சமுக விழிப்புணர்ச்சியாலும் களைந்துவிடும் சூழல்
ஏற்பட்டுள்ளது.
பட்டதாரிகள் நியமனம், ஆசிரியர்
நியமனம், முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கல், கிராமங்களுக்கு
உட்கட்டுமான வசதிகள் முழுமைப்படுத்தி கொடுத்தமை என்று கிளிநொச்சி
மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு வேலை செய்துள்ள மு.சந்திரகுமார் எம்.பி,
சிறீதரன் எம்.பியின் வெற்றிக்கு பெரும் அச்சுறுத்தலான மனிதராக
மாறியிருக்கிறார்.
மேலும் மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறி (வன்னி மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு) அந்த
மாவட்டத்தில் தான் சந்தித்த முதலாவது தேர்தலிலேயே (வடமாகாணசபை) யாரும்
எதிர்பார்க்காத வகையில் கூடியளவு வாக்குகளைப்பெற்று மூன்றாவது இடத்தை
கைப்பற்றிய சித்தார்த்தன் அவர்களும் அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில்
களம் இறங்குவதாக முடிவு செய்துள்ளார்.
இவைபோதாதென்று
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இம்முறை தேர்தலில் தமது கட்சியின்
சார்பில் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் இரத்தினவேல்
மாஸ்டரை களம் இறக்கவுள்ளதும் கூடுதல் சேதி!
தமிழீழ
தேசியத்தலைவர் அவர்களின் பிள்ளைகள் சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா
இருவரையும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை எழுத அனுமதித்தமை தொடர்பில்
சிறீலங்கா அரசால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அந்த விசாரணைக்கு
அவர் சமுகமளிக்க மறுத்ததினால் சிறீலங்கா அரசால் அதிபர் பதவியிலிருந்து
தூக்கி எறியப்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்
கல்விக்கழகத்தின் ஆதரவிலேயே இவர் தொடர்ந்தும் அதிபர் பதவியை வகித்து
வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சர்
த.குருகுலராஜா உட்பட அன்றைய கிளிநொச்சி மாவட்ட கல்விச்சமுகத்தினரின்
நன்மதிப்பை பெற்றவருமாவார். அத்துடன் இவரும் தீவுப்பகுதியை சேர்ந்தவரே!
இன்னும்
ஒரு முக்கிய விடையத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாண
மாவட்டத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை விடவும், மாவட்டம் விட்டு
மாவட்டம் போய் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டவர்களே முதல் மூன்று
இடங்களை பெற்றுள்ளனர்.
க.வி.விக்னேஸ்வரன் ஐயா
(கொழும்பிலிருந்து), அனந்தி சசிதரன் (கிளிநொச்சியிலிருந்து), சித்தார்த்தன்
(வவுனியாவிலிருந்து). இந்நிலையில் திருமதி அனந்தி சசிதரனும் தேர்தலில்
போட்டியிடும் தனது விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்த நிலையில்,
தமது வெற்றிக்கு வேட்டு வைத்து விடுவார் என்று கிலி பிடித்து
மாவை.சேனாதிராசா ஏற்புடையற்ற காரணங்களை கூறி, அனந்தியை கட்சியிலிருந்து
நிறுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதன் பின்னணியிலும் சிறீதரன்
எம்.பியே மாவையை தூண்டிவிடும் கருவியாக இருந்து செயற்பட்டிருந்தார்.
முள்ளிவாய்க்காலில்
மருத்துவ உதவிகள் ஆபத்தான காலகட்டத்தில் மானுடநேய மருத்துவ பணியை வழங்கி
ஐ.நாவின் உயரிய விருதுபெற்ற வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள்,
புலம்பெயர் உறவுகளின் நிதி அனுசரணையை பெற்று ‘கல்வி கனைக்சன்’ எனும் தொண்டு
அமைப்பை நிறுவி கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களின் படிப்புக்கு
உதவிவரும் நிலையில், அவரும் தனக்கு சவாலான மனிதராக தேர்தலில் இறங்கி
விடுவாரோ என்று கிலிப்பிடித்து ‘சத்தியமூர்த்தி டொக்டருக்கு காசு எடுக்க
வேண்டாம். அவர் அரசின் கையாள், முகவர்’ என்றெல்லாம் கனடா உள்ளிட்ட
நாடுகளில் விசமத்தனமான பிரசாரங்களை சிறீதரன் எம்.பி செய்து வருகின்றார்.
சிறீதரன்
எம்.பிக்கு எப்போதோ, பாராளுமன்ற காய்ச்சலும், அதைத்தொடர்ந்த
தோல்விப்பயமும் பிடித்துள்ள நிலையில், அவர் தனது எம்.பி பதவியை தொடர்ந்தும்
தக்க வைப்பதற்காக எதையும் செய்யத்துணிந்துள்ளார். அதற்காக எப்படியெல்லாம்
மூளையை கசக்கி பிழிந்து குறுக்கு வழியில் சென்று, சதி செய்து வெற்றி பெற
முடியுமோ, அத்தனை வழிகளிலும் ஓட ஆரம்பித்துள்ளார்.
தனக்கு
எம்.பி பதவி வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பை கலைத்து
விடுவதற்கும் அவர் தயார் என்பதை அண்மைக்கால அவரது பேச்சுகளும்,
நண்பர்களுடனுடான உரையாடல்களும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
வரும்
பாராளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சி மட்டும் வென்று அதிகப்படியான
உறுப்பினர்கள் தெரிவாகக்கூடியவாறு சம்பந்தன் ஐயாவும் தானும் வியூகம்
வகுத்துள்ளதாகவும், இதர கட்சித்தலைவர்களின் பேச்சுகள் இங்கு எடுபடாது
என்றும், என்ன செய்ய வேண்டும் என்பதை தானும் சம்பந்தன் ஐயாவும் ஏற்கனவே
முடிவு செய்து செய்து விட்டதாகவும் கூறிவருகின்றார்.
அதில் ஒன்று, கூட்டமைப்பின்
இதர கட்சிகள் அவற்றுக்கு வழங்கப்படும் ஆசன ஒதுக்கீட்டில் அக்கட்சிகள்
விரும்பிய வேட்பாளர்களை தெரிவு செய்ய அனுமதிக்க முடியாதாம்.
இரண்டாவதாக, அனந்தி சசிதரன் சித்தார்த்தன் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாதாம்.
மூன்றாவதாக, ஆசன
ஒதுக்கீடு வழங்காமல் விட்டால், சித்தார்த்தன் தானாக கூட்டமைப்பிலிருந்து
வெளியேறிப்போகலாம். நாங்க அவரை கூட்டமைப்புக்குள்ள இருக்கச்சொல்லி
கேட்டோமா? அவரால கூட்டமைப்புக்கு என்ன தேவை இருக்கிறது? என்றெல்லாம்
பிதற்றி வருகின்றார்.
நான்காவதாக,
தான் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சரவணபவன்
எம்.பிக்கு என்ன வேலை? மாவை.சேனாதிராசாவுக்கு என்ன வேலை? தனக்கு
முன்அறிவித்தல் தராமல் எப்பிடி அவர்கள் இங்கு வர முடியும்? நிகழ்ச்சிகளை
நடத்த முடியும்? நீங்கள் எப்பிடி ஒழுங்குபடுத்திக்கொடுக்க முடியும் என்று
அங்குள்ள கிராம மட்ட அமைப்புகளுடன் சின்னப்பிள்ளைத்தனமாக முரண்டு பிடித்து
வருகின்றார்.
ஐந்தாவதாக, கடந்தவாரம்
கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க புதிய தெரிவை செய்யவிடாமல்,
சுதந்திர தினத்தில் சம்பந்தன் கலந்து கொண்டதை நியாயப்படுத்தி வரும் தனது
பிரத்தியே செயலாளர் பொன்.காந்தனை கொண்டு குழப்பங்களை விளைவித்தார். அதற்கான
காரணம், முன்னாள் வட்டக்கச்சி ம.வி அதிபரும், பின்னாள் கிளி.மத்திய
கல்லூரி அதிபருமாகிய இரத்தினவேல் மாஸ்டரின் ஆதரவாளர்கள், மாஸ்டருக்கு நன்கு
பரிச்சயமான சமுகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் அப்பதவிகளை
அலங்கரிக்க இருந்த நிலையில், அவர்களுக்கு குடிகாரர்கள் என்று வீண்பட்டத்தை
சுமத்தி, அவரது ஊதுகுழலாக செயல்படும் இணையத்தில் செய்தி வெளியிட்டு
கல்விப்பராம்பரியம் மிக்க சமுகத்தை கலங்கப்படுத்தியிருக்கிறார்.
யாழ்ப்பாண
தேர்தல் தொகுதியில் தனது வெற்றிக்கு அச்சுறுத்தலாக, சவாலாக
இருக்கின்றவர்களுக்கு ஆசனம் வழங்கப்படாமல் அதை எப்பிடி தடுக்கலாம்,
தட்டிப்பறிக்கலாம், எப்பிடியெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று
தாறுமாறாக சிந்தித்து சிறீதரன் செயற்பட்டு வருகின்றார். தனது எம்.பி
ஆசனத்தை தக்க வைப்பதற்காக (பதவி சுகத்துக்காக) ஒருவேளை கூட்டமைப்பு உடைந்து
போகத்தான் வேண்டும் என்றால் கூட, அதற்கும் அவர் தயாராகவே உள்ளார் என்பதையே
அண்மைக்கால இவரது அரசியல் அநாகரிக செயல்கள், ஜனநாயக விரோதப்போக்குகள்
எமக்கு எடுத்தியம்புகின்றன.
-கவரிமான்-