‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி கிளிநொச்சியில்!!!

சிறீலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்பு போரினால் தாய் தந்தையை இழந்துள்ள, போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல் குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள, 

கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த பாடசாலை செல்லும் 144 மாணவர்களுக்கு, அவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், 15 முன்பள்ளிகளுக்கு மனவளக்கலைக்கான கற்பித்தல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 

‘நாங்கள்’ இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயல்பாட்டாளர் மு.தாஸ் ஒழுங்கமைப்பில், யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர் செ.பிரதாப் தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி கலையரங்கத்தில் இன்று (21.03.2015) பிற்பகல் 3.00 மணிக்கு குறித்த உதவி வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 

நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி – யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினார்.

உருத்திரபுரம் புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் அருள்சகோதரி மார்க்கிரட், கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதி அதிபர் திரு.சிம்மேந்திரன், உமையாள்புரம் வித்தியாலய அதிபரும் - முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்கள் பராமரிப்பு இல்லத்தின் (இரத்தினபுரம்) பணிப்பாளருமாகிய திரு.அருளானந்தசிவம், இவர்களுடன் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் - இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள், சமுக ஆர்வலர்கள், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 







































                                                                                                                                                        நன்றி: புரட்சி வெல்க!