தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தலைமையேற்கப் போகும் விக்கினேஸ்வரன்!

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் ஆனால் தர்மம் என்றோ ஒருநாள் வெல்லும்" என்பதை அறியாத சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் புறமுதுக்கு குத்தல்கள், சூட்சுமமான ஏமாற்களால் எத்தனை தியாகங்கள்… எத்தனை ஈகங்கள்… எத்தனை… எத்தனை… என எண்ணமுடியாதளவு விலைமதிப்பற்ற இழப்புக்களை ஈழத்தில் சந்தித்த தமிழனம் இன்றும் போரடிக்கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நந்திக்கடல் அமைதியான போதும் தமிழினத்தின் குருதியும் வேட்கையும் உரிமைக்காக முழுவிச்சுப்பெற்ற அலைகளாகவே இருக்கின்றன. யுத்தத்தின் ரணங்களுடன், வாழ்வாதார போராட்டத்துடன் தலைநிமிர்ந்த வாழ்வுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்றது தமிழனம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் தமிழினத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியை மக்களின் அங்கீகாரத்துடன் பெற்றது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஆனால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் கூட்டமைப்பின் தலைமையும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மேற்கொள்ளும் நடவடிக்கைள் தமிழினத்தின் தலைவிதியையே சீர்குலைக்கும் அளவிற்கு சென்றிருக்கின்றது. தமது சுயநலத்தை மையப்படுத்தி சர்வாதிகார போக்கில் கட்சியை வழிநடத்த முயலும் இவ்விரு சக்திகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு பதிலான அப்பெயரால் தம்மையும் தாம் சார்ந்திருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியையும்(அதிலும் உள்நோக்கங்கள் உள்ளன) தனியே பலப்படுத்திக்கொண்டு கூட்டமைப்பை வெறுமனே தேர்தல்கால பகடைக்காயாக பயன்படுத்த தீர்மானித்திருக்கின்றார்கள். 

ஆம், அதிர்ச்சி ஒருபுறம், நம்பமுடியாத நிலைமை மறுபுறம். உண்மைகள் கசப்பானவை. ஆனால் அவை ஒருபோதும் உறங்குவதில்லை.  எந்தவொரு அரசியல் காழ்புணர்ச்சியுமின்றி எம்மினத்தை விழிப்படையச் செய்வதற்காகவே இந்த நீண்ட கட்டுரை வரையப்படுகின்றது. 

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரத்தைப் பெற்றது. தமிழ், சிங்கள, இஸ்லாமிய தலைவர்களின் ஒன்றுபட்ட பேராட்டத்தாலேயே அந்த சுதந்திரம் எமக்கு கிடைத்தது என்பதை மறந்த சிங்கள பேரினவாதம் சிறுபான்மை இனங்களை அடக்குமுறைக்குள் நசுக்கிவிடத்துடித்தது. குறிப்பாக கல்வி, வீரம், செல்வத்தில் செழுமைமிக்க சமுகமாக தலைநிமிர்ந்து நின்ற தமிழ்ச்சமுகத்தை சின்னாபின்னமாக்கவேண்டுமென்ற சிந்தனை பல்வேறு வடிவங்களில் தூபமிடப்பட்டு பின்னர் தீப்பொறியாக மாற்றப்பட்டது. 

அறவழிப்போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. காலங்கள் உருண்டோடின. பேரம்பேசல்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்த்தங்கள் என அனைத்து வகையிலும் சிங்கள பேரினவாதத் தலைவர்கள் தமிழ்த் தலைமைகளை ஏமாற்றியே வந்தன. அறவழிப்போராட்டங்களால் பாரியளவில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதை ஈழத்துக்காந்தி தந்தை செல்வா அவர்களே ஈற்றில் உணர்ந்து கொண்டார். வட்டுக்கோட்டை தீர்மானம் அதனை புலப்படுத்தும் வரலாற்றுச் சான்றாகின்றது. 

அவ்வாறான நிலையில் தான் 1970களின் பிற்குதியில் சிங்களப்பேரினவாத்தின் பாதச்சுவடுகள் ஈழமன்றில் வேரூன்றுவதற்கு எதிராக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள். ஆயுதப்போராட்டம் முழு வீச்சுப்பெற்றது. அக்காலத்தில் ஆயுதக்குழுக்கள் ஒன்றுபட்டு போரடிய போதும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் சிலபல சதிகள் அவற்றுக்குள் பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தன. அதன்மூலம் ஆயுதப்போராட்டம் மலினப்படுத்தப்படும் என்ற சிங்கள பேரினவாதத்தின் கணக்கு பொய்த்துப்போனது.

ஏதோ ஒருவகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பலம் பெற்று ஆயுதப்போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. தமிழ் ஈழத்திலேயே தமிழர்கள் சுதந்திரமாக வாழமுடியும் என்பதையும் உறுதிமொழியாக கொண்டிருந்தது. 2ஆம் ஈழப்போர் ஆரம்பம் வரையில்  ஆயுதங்களின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அதன் பின்னர் அரசியல் ரீதியாகவும் தமிழனம் பலப்படவேண்டும் என்பதை உணர்ந்தவரானார். 

எத்தனையோ பேச்சுவார்த்தை மேசைகளுக்கு விடுதலைப்புலிகள் அழைக்கப்பட்டபோதும் சூழ்ச்சிகளுக்குள் சிக்காது சாணக்கிமாக செயற்பட்டு வந்த பிரபாகரன் தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும்படியான திட்டம், சிங்கள முஸ்லிம்; தலைவர்களால் தீட்டப்பட்டு முன்நகர்த்தப்படவுள்ளது என்பதை தீர்க்க தரிசனமாக அறிந்திருந்தார். அதேநேரம் இந்த ஆபத்தை அப்போதைய புத்திஜீவிகளும், ஊடகவிலாளர்களும் அழுத்தமாக எடுத்துக்கூறினர்.

குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கின் பெரும்பாலான பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இதனால் தமிழர் தரப்பில் பணத்திற்கு சோடைபோகும் பலரை பல்வேறு கட்சிகளின் பெயரில் களமிறக்கி தேர்தலில் போட்டியிட வைப்பதன் ஊடாக, தமிழர் வாக்குகளைப் பறித்து பிரதிநிதித்துவங்களை அழிப்பதுதான் பேரினவாதிகளின் திட்டமாக இருந்தது. 

இதனை 2000ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் புடம்போட்டுக் காட்டியது. குறிப்பாக ஈழத்தின் தலைநகராக கருதப்பட்ட திருமலையில் ஒரு தமிழர் கூட வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லமுடியாதளவிற்கு நிலைமை மோசமானது. 3ஆசனங்களை பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் பெற்றிருந்தது.

இந்த நிலைமையை நன்குணர்ந்த புத்திஜீவகள் மற்றும் விதலைப்புலிகளின் தலைவர் ஆகியோர் உரிமைகளுக்காகவே தமிழனம் போராடிக்கொண்டிருக்கின்றது உள்ளிட்ட தமிழனத்தின் ஆதங்கத்தை சிங்களப்பேரனவாதத்தை முன்னெடுக்கும் சக்திகள் அமர்ந்திருக்கும் பாராளுமன்றில் வெளிப்படுத்தவேண்டும் என உறுதிப+ண்டனர். அந்த இலக்கை அடைய தமிழ் ஆர்வலர்கள், புத்திஜீவகள், தராக்கி சிவராம், இரா.துரைரெட்னம், போன்ற ஊடக ஜாம்பவான்கள முன்னெடுத்தனர். இதற்கு  பிரபாகரனும் ஒத்துழைப்புக்களை வழங்கினார். 

அதன் பிரகாரம் ஜனநாயக வழிக்கு திரும்பியிருந்த விடுதலை இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஆகியவற்றையும் அறவழியில் பயணத்தில் மனமுடைந்திருந்த இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழர் காங்கிரஸ், தமிழர்விடுதலைக்கூட்டணி ஆகியவற்றை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் ஒருவாறு ஒன்றிணைந்தன.

2004 பராளுமன்றத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் தலைமையின் தீர்மானத்திற்கு அமைவாக ஆசனப்பங்கீடு  செய்யப்பட்டு பெயர் பட்டியல் முன்மொழியப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அமோக வெற்றி. அதன் பின்னர் மீண்டும் சிங்களப் பேரினவாதம் விடுதலைப்பேராட்டத்தை முன்னெடுத்த புலிகளுக்கு எதிராக சதிவலை பின்னியது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற மேற்குலகின் தீர்மானத்தை ஈழத்தில் மனிதாபிமான நடவடிக்கை என மொழிபெயர்த்த சிங்கள பேரினவாதம் மனிதத்தை மறந்து உயிர்களை பறித்தது; கொத்துக்கொத்தாக குண்டுளை வீசி இரத்த வெள்ளத்தில் ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கையில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தது. ஈற்றில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்போராட்டத்தை மௌனித்ததாக அறிவித்தது.

குண்டுச் சத்தங்கள் காதைவிட்டு அகலாதும் ரத்தக்கறைகள் காயதிருக்கைக்கும்  ;தருணத்தில் 2010 மீண்டுமொரு பொதுத்தேர்தல். தமிழினத்தின் எதிர்காலம் என்ன??? என்ற பாரிய வினா இதன்போது எழுந்தது. அந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் மிகப்பெருமளவில் உணரப்பட்டது. தாயகம், தேசியம் சுயநிர்ணயத்துடன் தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பாரிய கடமையை கொண்ட சக்தியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பார்க்கப்பட்டது. 

சம்பந்தனின் சர்வாதிகாரம் ஆரம்பம்

2010 பராளுமன்றத்தேர்தல் காலம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் தலைவராக பார்க்கப்பட்டார். அவருடைய அரசியல் அனுபவம், புலமை என்பன காரணமாக  அமைந்தன. அவருடைய முடிவுகளே இறுதியாக கருதப்பட்டன. அவ்வாறிருக்கையில், 2004ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலைப்புலிகளினால் முன்மொழியப்பட்டவர்களின் அனைத்து பெயர்களும் நிக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் அறிவிக்கப்படுகின்றது. 

இதனை எதிர்த்து வினாத்தொடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது காட்டமான கருத்துக்களை முன்வைக்கவும் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து சம்பந்தன் அறிவித்ததன் பிரகாரமே வடக்கு கிழக்கில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழ் மக்கள் அங்கீகாரம் வழங்கினார்கள்.

தொடர்ந்த சர்வாதிகாரம்

விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலம். மகிந்த அரசாங்கம் தனது இனவழிப்பை நியாயப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுத்த காலம். தமிழர்களை அடக்கி தாயகத்தை சிதைப்பதற்கு முயன்றுகொண்டிருந்த காலம். இதன்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அனைத்து விடங்களிலும் தான் எடுக்கும் முடிவு அல்லது அறிவிக்கும் முடிவு தான் இறுதியானது என்பதை இரா.சம்பந்தன் ஆணிவேராக மாற்றினார். 

விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தினார். தன்னையும் புலிகள் கொல்ல முயன்றதாக குற்றம் சுமத்தினார். மகிந்த அரசு பேச்சுவார்த்தை மேசையில் ஏமாற்றம் அளித்த பின்னரும் தனியான சந்திப்புக்களை அலரிமாளிகையிலேயே மேற்கொண்டார். இந்தியா, சர்வதேசத்தின் துணையுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை பெறுவேன் என தமிழ்த் தேசிய சிந்தனையிலிருந்து பாதைமாறி சிங்களத் தலைமைகளின் கரங்களை தன் இரு கரங்களாலும் பற்றிப்பிடித்துக் கூறிக்கொண்டிருந்தவர் அதுவே தனது இராஜதந்திரம் என்ற நாமத்தையும் சூட்டிக்கொண்டார்.

இந்த நிலைமைகள் தொடர்ந்தன. வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான பேச்சுகளில் பேசவேண்டிய விடயங்கள், தமிழர் சார்பு நடவடிக்கைகள், பாராளுமன்ற குழுக் கூட்டங்கள், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள், போன்வற்றில் பேசவேண்டிய  அல்லது பேசப்படுகின்ற விடங்கள் தொடர்பாக  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சித்தலைவர்கள் உறுப்பினர்கள் பல்வேறு வாதங்களை முன்வைக்கின்றபோதும் அதனை கருத்திற்கொள்ளாது தனது தீர்மானத்தினையே அறிவிப்பார். அதுமட்டுமன்றி ஊடகங்களுக்கு கருத்துரைப்பதற்கும் முட்டுக்கட்டையை போட்டுவிடுவார். 

இது தொடர்கதையாக அமையந்துகொண்டிருக்கையில் பாராளுமன்ற தேசியப்பட்டியல் மூலம் உள்நுழைந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பக்கவாத்தியமானார். அதுமட்டுமன்றி பேரனவாத சக்திகளுடன் நீதிமன்றத்தினுள்ளும் வெளியிலும் தோளில் கைபோட்டு வலம்வந்த சுமந்திரனுக்கு தமிழ்த்தேசியத்தின் மீதான பற்றுறுதி என்பது எவ்வாறிருக்கும் என்பது ஐயப்பாடனதொரு விடயமுமாகும்.

தனியான பயணம்

அவ்வாறிருக்கையில் அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு ஏன், தமிழரசுக்கட்சியின் தலைவர், சிரேஸ்ட உறுப்பினர்கள் கூட ஓரங்கட்டப்பட்டு சம்பந்தன், சுமந்திரன் ஆகிய இருவரின் இழுப்புக்களுக்கே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செல்லவேண்டிய ஒரு துர்ப்பாகிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. சம்பந்தன் சுமந்திரன் அன் கோ என மாற்றுத் தமிழ் சக்திகளால் எள்ளிநகையாடுமளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ஆம், மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான நிபந்தனைகளும் மகிந்த அரசுக்கு எதிராக களமிறங்கிய சிங்களத்தலைமைகளுடன் விதிக்காது ஆதரவளிப்பதாக பகிரங்கமான ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்தது. அதேநேரம் 2014-12-28 ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது சாதரணமாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் ஏனைய கட்சிப்பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. 

ஈற்றில் அவ்வாறு ஆதரவளிப்பதாக இருந்தால் ஊடக அறிக்கையொன்றின் மூலம் அதனை வெளியிடுவோம் என கூறப்பட்டபோதும் கூட்டமைப்பு தனது அறிப்பை ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே ஒற்றைக்காலில் நின்றார். அதற்கமையவே சம்பந்தனும் இறுதி முடிவை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. தேசிய நிறைவேற்றுக்குழுவில் கூட்டமைப்பு இடம்பெற்றது. அக்குழுவின் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றபோதும் அதில் என்ன பேசப்படுகின்றன என்பது குறித்து ஏனைய கட்சிகள் அறிந்திருக்கவில்லை. அவ்வளவு தூரத்திற்கு வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சுதந்திரதின வைபவதில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றமை மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

முள்ளிவாய்கால் அவலத்திற்கு காரணமாக இறுதி யுத்தத்தம் அரங்கேற்றப்பட்டபோது மனித உரிமை மீறல்களும் யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றன அதற்கு நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் தமிழினத்திற்காக அமெரிக்கா, பிரித்தானியாவின் முன்மொழிவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை முன்னெடுப்பதற்காக ஐ.நா மனித உரிமை செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையை மார்ச்சில் வெளியிடாது ஆறுமாதகாலங்கள் பிற்போடுவதற்கான முயற்சிகள் எடுகப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமே ஜெனீவா சென்றிருந்தார். பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

சுமந்திரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்திப்பதற்கான திகதி, நேரம், ஒழுங்குகளை மேற்கொள்வதற்காகவே அங்கு சென்றதாக பங்காளிக்கட்சிகளிடத்தில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேலாக அங்கு அவர் பல்வேறு பேச்சுக்களை நடத்தினார். இருப்பினும் அறிக்கை ஆறுமாத காலத்திற்கு பிற்போடப்பட்டது. அதுமட்டுமன்றி பழைய குருடி கதவை திறவடி கதையாக உள்ளக விசாரணையே புதிய  அரசும் இறுக்கமாக பற்றிப்பிடித்திருக்கின்ற நிலையிலே அதனை ஆமோதிக்கும் வகையில் ஐ.நா. தீர்மானத்தில் இரண்டு விசாரணைகளும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் கருத்து வெளியிட்டார் சுமந்திரன். 

அதேநேரம் வீடெரிப்பவனுக்கு நெருப்பெடுத்துக் கொடுத்த கதையாக ஆறுமாதகால காலதாமதம் தொடர்பாக கருத்து வெளியிட்ட சம்பந்தன் அதில் மகிழ்ச்சியும் இல்லை கவலையும் இல்லை என பொறுப்பற்ற பதிலை சர்வதேச ஊடகத்திற்கு கூறியிருக்கின்றார். அது மட்டுமன்றி ஐ.நா அறிக்கையை காலதாமதப்படுத்தக்கூடாது என புலத்திலும் ஈழத்திலும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் இவர்கள் இருவரும் அமைதியாக தலைநகரிலே அமர்ந்து விட்டார்கள். 

அத்தோடு நின்றுவிடாது இலங்கை தமிழரசுக்கட்சிக்காரர்களையும் அவ்வாறான ஆர்ப்பாடங்களுக்குச் செல்லக்கூடாது என மறைமுகமான தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தாகவும் தகவல். இவ்வாறான செயற்பாடுகளும், நிலைப்பாடுகளும், மௌனங்களுமே இவ்விருவருக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழத்தேசியக் பற்றுறுதியாளர்கள் புலத்திலும் ஈழத்திலும் எடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இந்த உண்மையை அறியாது தமக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு என்ன உபாயமிருக்கின்றது என்பதை எண்ணிப்பார்த்த இருவரும் தமிழரசுக் கட்சியை சாதூரியமாக பயன்படுத்தினர் என்ற கசப்பான உண்மையை பலர் அறிந்திருக்க வாய்பில்லை. 

ஈழத்திலும் புலத்திலும் சம்பந்தன் சுமந்திரனின் உருவபொம்மைகள் தீக்கிரையாக்கப்பட்டன. புலம்பெயர் சக்திகளின் பகிரங்க விமர்சனத்திற்கு ஆளானார்கள். புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய சக்;திகளுடன் தொலைபேசியூடாக காரசாரமான வாதப்பிரதிவாதங்களுக்கும் கண்டனங்களுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக்கொண்டிருந்த சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அனுகுமுறையொன்றை கையிலெடுத்தனர். ஆம், அது தான் தான் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானங்கள்

வவுனியாவில் மார்ச் மாதம் முதல் ஞாயிறன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் கிளைத்தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.15; மணிவரையில் வவுனியா வைரவப்புளியங்குளம் லக்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவையாவன, 

2015, மார்ச் முதலாம் நாளன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையில் தீர்மானங்களை ஆராய்ந்து, 

தமிழ் மக்களின் காணிளை மீள கையளித்தல்
அரசியல் கைதிகளை விடுவித்தல்
காணாமல் போனவர்கள் சம்பந்தமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு, தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, உடனடியாக இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொள்கின்றது. 

அத்துடன், போர்ச்சூழலில் இடம்பெயர்நத அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள குடியமர்த்தும் வகையில் செயற்பட வேண்டும் என்று அரசை வற்புறுத்துகின்றோம். அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி, உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என எமது இந்த மத்தியகுழு அரசை மீண்டும் வலியுறுத்துகின்றது.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின், மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது ஆகிய தீர்மானங்களை முதலில் நிறைவேற்றியது. 

பாராட்டுத் தீர்மானம்

பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன், வெளிவிகார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் நலன் கருதி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டும் தீர்மானத்தை தமிழரசுக்கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்டது. அத்துடன் வழிமொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு விசேட கூட்டமொன்று இருப்பதாக தலைமையின் காதருகில் சென்று கூறிவிட்டு இடைநடுவில் சிட்டாய் பறந்து சென்றார். 

கண்டனத்தீர்மானம்

அண்மைக்காலமாக எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எமது கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை ஈழத் தாயகத்திலும், புலத்திலும் நிகழ்த்தியுள்ள விடயங்களை இந்த மத்தியகுழு கண்டிக்கின்றது. இது தொடர்பில் எமது மத்தியகுழு தனது அக்கறையுடனான கவனத்தைச் செலுத்துகின்றது. 

பிரித்தானிய பிரதமரின் உறைவிடத்தின் முன்பாகவும், பின்னர் 25.02.2015 அன்று இலண்டனில் உள்ள அமெரிக்க தூரதரகத்தின் முன்பாகவும் இலங்கை அரசு தமிழினத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்தக்கோரியும் எமது புலம்பெயர் தமிழர்கள் பெயரால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது இரா.சம்பந்தன் ஐயா அவர்களதும் சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டமையையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது.

21.02.2015 சனிக்கிழமை காலை, யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு எதிராக ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின் உண்மை நிலையைத் தெளிவு படுத்துமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், ஐ.நா.விசாரணை அறிக்கையை தாமதன்றி சமர்ப்பிக்குமாறும் கோருதலே இதன் முக்கியமான நோக்கமுமாயிருந்தது. 

இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக இணைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சுரேஸ் அணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி துணைச் செயலாளர் அனந்தி சசிதரனும் கலந்துகொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், குறித்த ஆர்ப்பாட்டத்துடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிராததும், அதுவரையில் எந்த விதத்திலும் உச்சரிக்கப்பட்டிருக்காததுமான விடயமான  சுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இச்செயற்பாடானது

(அ) எந்த நோக்கத்திற்காக மக்கள் திரட்டப்பட்டார்களோ அத்துடன் திரண்டார்களோ அந்த நோக்கத்தின் முக்கியத்துவத்தை மூலியாக்கியுள்ளது.

(ஆ) எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இச்சம்பவம் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்த மக்களின்மீது சுமந்திரன் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர் என்ற அபாண்டமான பழியைச் சுமத்தியுள்ளது.

(இ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேற்குறித்த பிரமுகர்கள் இச்செயற்பாட்டிற்குத் துணை போயிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலும், உள்ளகத் தகவல்கள் மூலம் குறித்த உருவப்பொம்மை அனந்தி சசிதரனின் வாகனத்தின் மூலமே குறித்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டதென்பது தெரியவந்துள்ளது. 

இவ்விடயம் மேலும் கவலையைத் தருவதோடு கட்சி கட்டுப்பாடு தொடர்பில் அவர்கள்மீது பொறுப்புக்கூற வேண்டிய கேள்வியை எழுப்புகின்றது. மேற்குறித்த இருவரும் இவ்விடயம் தொடர்பில் இதுவரை கவலை தெரிவிக்காதிருப்பது இவ்விடயம் தொடர்பான அவர்களது மனப்பூர்வமான ஈடுபாட்டையே புலப்படுத்தியுள்ளது.

மறுபரிசீலனைக்கோரிக்கை

சுரேஸ் பிரேமச்சந்தரன் குறித்த நிகழ்வின் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எம்.ஏ சுமந்திரன் மற்றும் எமது பெருந்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை வெளிப்படையாகவே தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களது நடவடிக்கைகளை எமது மத்தியகுழு கடுமையாகக் கண்டிப்பதோடு, அனந்தி சசிதரனின் மேற்குறித்த நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடும் அவர் எமது கட்சியின் உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.

சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு அவருக்கு வழங்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் ஊடகப் பேச்சாளர் என்ற பொறுப்பை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தி சுமந்திரன் மற்றும் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் எதிராக தொடர்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருவதையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டிக்கும் அதேவேளை, இவரது கட்டுமீறிய இச்செயற்பாடு தொடர்பாக அவர்மீது தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

வெளிவராத மத்திய செயற்குழுவின் - தீர்மானங்களும் சில சங்கதிகளும்

இவ்வாறான தீர்மானங்களை தடாலடியாக ஊடகங்களுக்கு அறிவித்து விட்டு தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு அதிநவீன வாகனங்களில் கிழக்கு , வடக்கு, கொழும்பை நோக்கி சிதறல்களாக பிரிந்து சென்றன. ஆனால் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களும் சங்கதிகளும் பின்னயை நாட்களில் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தன. என்ன செய்வது அறவழிப்போராட்டத்தில் நின்று ஜனநாயகத்தை நிலைநிறுத்திய பழம்பெரும் கட்சியல்லவா? அதன் ஜனநாயகப் பண்புகளும் உச்சத்தில் தான் காணப்படுமோ என்னமோ?  

ம்ம்ம்ம்…. பெருமூச்சை மட்டுமே விடமுடியும். மதிய உணவு இடைவேளையுடன் கொழும்பு உறுப்பினர்கள் விடைபெற்றுச் சென்றனர். 

அதன் பின்னர் குறித்த மத்திய செயற்குழுவில் இவற்றை விட வேறென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன?  குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்ற கருத்துக்கள் உறுதிபட வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதால் தமிழரசுக் கட்சி பலவீனம் அடைந்து விடும், ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் பதிவு செய்வதற்கு இடமளிக்க கூடாது, அத்துடன் கூட்டமைப்பை  பதிவு செய்யும் செயற்பாடுகளுக்கு தமிழரசுக் கட்சிக் காரர்கள் துணைபோகவும் கூடாது” என்ற தீர்மானம் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் முன்யோசனையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.  

எனினும் அடுத்து பாராளுமன்ற தேர்தலொன்ற இடம்பெறவிருப்பதாலும் உலக நாடுகளும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருப்பதையே விரும்பவதால் குறித்த தீர்மானத்தை பகிரங்கப்படுத்தி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. ஆகவே அனைத்து இலங்கை தமிழரசுக் கட்சிக்காரர்களும் இந்த விடயத்தை வெளிவிடாது மௌனமாக இருப்பதே அவசியம். அதன் மூலமே தமிழரசுக் கட்சியை பலப்படுத்த முடியும் எனவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது எமது சிரேஷ்ட தலைவரே கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். குறிப்பாக காணமல்  பேனோர் தொடர்பான யாழில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த சிரேஷ்ட உறுப்பினரான பேராசிரியர் சிற்றம்பலமும் பங்கேற்றிருந்தார். ஆகவே அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்ற கேள்வியை பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் முன்வைத்தார்.

இதன்போது சம்பந்தனுக்கு திNடீரென சீற்றம் ஏற்படவும் நீர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தான் தமிழருக்கட்சியின் தனித்தன்மை சீர்குலைகின்றது. ஆகவே அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்வது அவசியம். ஆகவே எதிர்காலத்திலும் பதிவு தொடர்பில் வாயைத் திறக்காதிருப்பதே சிறந்தது. அந்தக் கருமங்கள் தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத்தெரியும் என கடுந்தொனியில் பேராசிரியர் சிற்றம்பலத்தை நோக்கி வார்த்தைகளை எய்தார். அங்கே மயான அமைதி சூழ்ந்துகொண்டது.

அதனைத் தொடர்ந்து வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட “இனப்படுகொலை” பிரேரணை தொடர்பில் பேச்சுக்கள் திசை திரும்பின. ஆதற்கு பதிலளித்த சம்பந்தன் சுமந்திரன் அன் கோ அது பற்றி நல்லதும் கூறுவதில்லை கெட்டதும் கூறுவதில்லை. அவர்கள் செய்வதை செய்து கொண்டே போகட்டும். அது தொடர்பில் பேச முற்படுவதற்கு தற்போது பொருத்தமான காலமும் அல்ல. பொதுமக்கள் வடமாகாண சபையின் தீர்மானத்தை அங்கிகரித்திருக்கின்றார்கள். இனி; தேர்தல் காலங்கள் வருவதால் நாம் அவற்றை கண்டும் காணமலும் விடுவதே சிறந்தது எனவும் பேச்சளவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த மத்திய செயற்குழு கூட்டம் இனிதே நிறைவுக்கு வந்தது. எனினும் முக்கிய சில சிரேஷ்ட தலைவர்களும், சில இளம் உறுப்பினர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டு  அவர்களே தீர்மானம் எடுத்து அறிவிப்பதென்றால் நாம் ஏன் வரவேண்டும். தீர்மானத்தை எடுத்து விட்டு பதிவுத் தபாலில் அனுப்பியிருக்கலாமே என குறைபட்டுக்கொண்டதாகவும் ஒரு தகவல்.

மாவையின் மௌனவிரதம்

இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்கி புரட்சிகரமாக தமிழர்களின் உரிமைகளை பெறவேண்டும் என சிந்தித்து கிழக்கின் தலைசிறந்தவர்களாக திகழ்ந்த காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோருடன் கைகோர்த்து போரடியவர் மாவை சேனாதிராஜா. சிறைகளிலே வாடினார். காடுகளிலே தஞ்சம்புகுந்தார். குறிப்பாக சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளில் ஒருவேளை உணவுடன் தலைமறைவாக வாழ்ந்து தமிழ் மக்களுக்காக போரடினார். அதன் பின்னரும் அவர் உரிமைக்காக குரல் கொடுத்தார். அத்தகைய செயற்பாடுகளும்  அர்ப்பணிப்பு மிக்க அவரின் பணிகளும் தமிழரசுக் கட்சியின் தலைமை ஆசனத்திற்கே அழைத்துச் சென்றது. 

ஆனால் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக பதவியிலிருந்தாலும் குறித்த கூட்டத்தில் மௌனவிரத்தையே மேற்கொண்டிருந்தார். 
வெறுமனே தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற பெயர் சூட்டப்பட்ட ‘பொம்மையாகவே’ அமர்த்தப்பட்டிருந்தார். 

மாவை சேனாதிராஜாவின் கடந்த கால புரட்சிப் பணிகள், அண்மைக்காலமாக ஐ.நா அறிக்கை தயராக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் சாட்சியங்கள் அளிக்கப்படவேண்டும் என தொடர்ச்சியாக பகிரங்கமாக வலியுறுத்தியமை, உரிய காலப்பகுதியில் ஐ.நா அறிக்கை வெளியிடப்படவேண்டும் என வலியுறுத்தியமை, காணிபறிப்பு, இராணுவப் புலனாய்வாளர்களுக்கு எதிரன செயற்பாடுகள் ஆகியவற்றை துணிகரமாக இன்றும் மேற்கொண்டு வரும் அவர் இத்தகைய மௌனவிரத்தை கடைப்பிடித்திருக்கின்றார்.

வெளிப்பட்ட மறுமுகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஏறக்குறைய பதின்மூன்று வருடத்திற்கு மேலாக செயற்பட்டு வருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சியி;ன் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இரா.சம்பந்தன் தசாப்தம் கடந்து பதவி வகித்திருக்கின்றார். தனது சுயசிந்தனையில் பிறரின் விருப்பு வெறுப்பிற்கு இடமளிக்காது செயற்பட்டிருக்கின்றார். எனினும் அதனை எவரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. அவரின் அனுபவம் அறிவுக்கு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் சாதகமாக கொண்டு சர்வாதிகாரத்தை கையிலெடுத்து தமிழரசுக்கட்சியை வளர்ப்பதில் தந்;திரமாய் செயற்படுகிறார். 

மன்னார் ஆயர் வண.இராயப்பு ஜோசப்பு ஊடாக தமிழ் தேசியசபையை உருவாக்குவதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தற்குரிய முனைப்புக்கள் எடுக்கப்பட்ட போதும் அதற்கு பல்வேறு காரணங்களை கூறி தேசியசபையை உருவாக்குவதற்கான குழுவை நியமிக்க விடாமலும், பதிவை செய்ய விடாமலும் குழப்பங்களை விளைவித்தனர். பங்காளிக்கட்சிகள், சிவில் சமுகத்தினர் தமது முன்மொழிவு பரப்புரைகளை தயாராக வைத்துக்கொண்டிருந்தபோதும் அதனை கருத்திலெடுக்கவுமில்லை. 

இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகள் ஐயப்பட்டை ஏற்படுத்திய போதும் இரா.சம்பந்தன் அவருடைய பக்கவாத்தியமாக வலம்வரும் சுமந்திரன் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தி கூட்டமைப்பை பதிவு செய்வதில்லை என எடுத்த முடிவு ஏன் கடந்த காலங்களில் முட்டுக்கட்டைகளை போட்டார்கள் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக்கியுள்ளது. 

அதுமட்டுமன்றி நான் மட்டுமே தலைவர், நான் மட்டுமே சிந்தனையாளன், நான் எடுக்கும் முடிவு மட்டுமே இறுதியானது என நான்… நான்… என்ற மமதையும் எனது கட்சி என்ற சுயநலப் போக்கும் தமிழ்த் தேசியத்தை மலினப்படுத்துமே தவிர ஒருபோதும் வலிமைப்படுத்தாது என்பதை சம்பந்தனும் அவருடைய எடுப்பார் கைப்பிள்ளையான சுமந்திரனும் அறியாதவர்கள் அல்ல. 
நான் என்ற அகந்தையால் அரங்கேறிய முடிவுகளுக்கு பல வரலாற்றுச் சான்றுகளும் புராணக்கதை உதாரணங்களும் உள்ளன. 

இவற்றை சம்பந்தன் உணராதவருமில்லை. ஆகவே நான் என்பதை விடுத்து நாம் (நாங்கள்) என்ற கட்டமைப்புக்குள் வரவிடாமல் சுயநல அரசியலுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு காணப்படும் சுயாதீனத்தை நசுக்கி அதன் உறுப்பினர்களை அடக்குமுறைக்குள் கையாள்வதானது ஒரு பழம்பெரும் கட்சியின் வீழ்ச்சிக்கே வழிகோலும். அவ்வாறிருக்கையில், ஜனநாகத்தை நேசிப்பவர்கள். ஜனநாக வழி வந்தவர்கள். நின்றவர்கள் என வாய் வார்த்தையில் கூறிவிட்டு கட்சிக்குள்ளே ஜனநாயகத்தை நிலைநாட்டாது ஆகக்குறைந்த கருத்துச்சுதந்திரத்தைக் கூட பறிக்குமளவிற்கு நடப்பதென்பது எந்தவகையில் நியாயமாகும் என தனக்கு நெருங்கியவர்களிடம் மனக்கிடைக்கைகளை பேராசிரியர் சிற்றம்பலம், இளைஞர் அணி சிவகரன், அனந்தி, மறவன்புலவு சச்சி மாஸ்டர் ஆகியோர் கொட்டித்தீர்த்திருக்கின்றார். 

ஆகவே சம்பந்தன், சுமந்தின் போன்றவர்களின் செயற்பாடுகளையும் முடிவுகளையும் இவர்கள் போன்று மேலும் பல உறுப்பினர்கள் உணர்வால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளபோதும் அடக்கி வாசிக்கின்றார்கள் என்பதே யதார்த்தமாகவுள்ளது. இவர்கள் இருவருக்கும் எதிராக கருத்து கூறினால் வரும் தேர்தல்களில் ஆசனம் வழங்கப்படாது என்ற பயமே இதற்கு காரணமாகும். 

தனியாக சொந்தம் கொண்டாட முடியாது

இலங்கை தமிழரசுக் கட்சியாகவிருக்கலாம், அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக விருக்கலாம் எத்தனையோ போராளிகளின், விடுதலை விரர்களின், புத்திஜீவிகளின், அடிப்படை பாமர மக்களின் ஊடகவியலாளர்களின் உயிர்த்தியாகங்களுக்கு மத்தியிலேயே உருவாக்கப்பட்டது. நெறிப்படுத்தப்பட்டுது. செயற்படுகள் முன்னெடுக்கப்பட்டது. 

ஆகவே விலைகொடுக்கமுடியாத ஈகங்களால் உருவாக்கப்பட்ட சக்தி மிக்க கட்டமைப்பை பயன்படுத்தி சுயநல அரசியலை முன்னெடுப்பதென்பது கல்லறையில் உறங்கும் ஆன்மாக்களுக்கும் கருவறையில் உயிர்க்கும் ஆன்மாக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

அன்று எமக்கு பொடியள் இருக்கின்றார்கள் என்று அச்சமின்றிக் கூறிய தமிழ் மக்கள் இன்று எமக்கு கூட்டமைப்பு இருக்கின்றது என்று துணிந்து கூறுவதுடன் மட்டுமல்லாது தமக்கு சலுகைகள் வேண்டாம் உரிமைகளே வேண்டும் என சிங்களப் பேரினவாத்திற்கும் சர்வதேசத்திற்கும் உறைக்குமாறு உணரவைத்திருக்கின்றார்கள். அத்தகைய காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கையில் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புக்களையும் சின்னாபின்னமாக்கும் வகையில் சுயநல அரசியலையும் சுயகட்சி வளர்ப்பையும் முன்னெடுப்பதென்பது பெரும் நம்பிக்கை துரொகமாகும்.

விடுதலைக்காக தன்னுயிர்களை இன்னுயிர்களாக்கியவர்களின் பெயரால்ஊரிழந்து உறவிழந்து, வாழ்விழந்து, யுத்தத்தின் வடுக்களுடன் நாளை விடியும் எமது வாழ்வு என்ற கனவுடன் ஒவ்வொரு நொடியையும் கடந்து வரும் அனைத்து உறவுகளின்  ஆணைகளைப் பெற்று இவ்வாறு குறகிய மனப்பான்மையுடன் ‘இராஜதந்திரம்’ என்ற போர்வையில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைளும் மற்றுமொரு இனவழிப்பு என்பதற்கு அப்பால் ஒட்டுமொத்த இனத்தையும் ஒரேநொடியில் கருவறுக்கும் செயற்பாடு என்றே நேரடியாக குறிப்பிடவேண்டியிருக்கின்றது.

சிறந்த உதாரணம்

நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு குடையின் இலங்கையைக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு மிகப்பெரும் வாய்ப்பு கிட்டடியது. தென்னிலங்கை தலையில் வைத்துக் கொண்டாடியது. ஆயதம் மௌனிக்கப்பட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் சிறுபான்மையும் தமக்குரியவை வழங்கப்படும் என்;ற நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து நல்லாட்சியொன்றை முன்னெடுத்து வராலாற்று நாயகனாக காலமெல்லாலம் வலம்வரவேண்டியவர் இன்று……?

ஆம் யுத்த வெற்றி மமதை, பதவி, பண ஆசை, குடும்ப ஆட்சி, கூட்டணிக் கட்சித்தலைவர்களை மதிக்காது தான்தோன்றித்தனமான செயற்பாடுகள், நிதி கையாடல் முதல் எந்தவிதமான செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை என்பதே இல்லாத நிலை, அனைவரையும் அடக்கி ஆளவேண்டும் என்ற மனப்பாங்கு ஈற்றில் அனைத்துமே சிதைந்தது. அவரின் வலது கையாக இருந்த மைத்திரிபாலவே அந்த அடக்கு முறைக்கு எதிராக நின்று அடக்குமறையின் வலியால் துடித்தவர்களின் கைகோர்ப்புடன் ஜனாதிபதியாக ஆரியாசனத்தில் அமர்ந்தார்.

இது மிகச் சிறந்த உதாரணம். குறிப்பாக சம்பந்தன்,சுமந்திரனின் சுயாதீனப்போக்கும், ஏதேச்சதிகார முடிவுகளும் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களை அடக்கியாள முனைவதென்பது அடக்குமறைக்கு எதிராக ஒரு சக்தியை உருவாக்கும் செயற்பாடாகும். அவ்வாறானதொரு சக்தி உருவாகும் சாத்தியம் எமக்குள் இருக்கின்றதா என்ற வினா இங்கு எழுக்கின்றதல்லவா? சம்பந்தனின் இராஜதந்திரம், சட்டத்தரணி சுமந்திரனின் மொழிப்புலமைக்கு நிகராக தமிழினத்தில் யார் இருக்கின்றார்கள் என்ற வினாவும் தொடராக எழுக்கின்றதல்லவா?

வல்லவனுக்கு வல்லவன்

‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்’ என்பது முதுமொழி. அது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது. குறிப்பாக சம்பந்தனால் அரசியல் அறிமுகப்பெற்ற முன்னாள் நீதியரசர் தற்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். 

இவரின் பெயரை நேரடியாகப் பரிந்துரை செய்வதற்கு காரணங்கள் இல்லாமில்லை. அரசியல் அனுபமற்ற இவர் ஆரம்பகாலத்தில் கரடுமுரடான பாதையில் பயணித்திருந்தாலும் தற்போது தீர்க்க தரிசனத்துடன் தமிழனத்துக்காக தேசியத்தின் பால் நின்று அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அவ்வாறான நேரடி முன்மொழிவுக்கு ஊக்கப்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக இன்றுவரையில் இவர் எந்தக் கட்சியையும் சாராதிருக்கின்றார். அத்துடன் வடமாகாண சபையில் மனசாட்சிக்கு விரோதமில்லாது நடந்து வருகின்றார். உள்நாட்டுப் பிரதிநிதிகளாக இருக்கட்டும், வெளிநாட்டு இராஜதந்திரிகளாக இருக்கட்டும், ஊடகங்களாக இருக்கட்டும் உண்மையை நேர்மையாக பேசுகின்றார். இவற்றுக்கெல்லாம் அப்பால் முள்ளிவாய்கால் முடிவுடன் தென்னிலங்கை அனைத்தையும்  ஒழித்து சாதித்துவிட்டதாக மார்பு தட்டிக்கொண்டிருக்கையில் ஈழம் என்ற சொல்லையே மென்போக்கு அரசியல்வாதிகளான சம்பந்தன் சுமந்திரன் உச்சரிக்க தயங்குகின்ற நிலையில்,

“ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது” என்பதை வலுவாக கூறுவதோடு நின்றுவிடாது அதற்காக பிரேரணையொன்றையும் வடமாகாண சபையில் நிறைவேற்றி வரலாற்று ரீதியாக  ஆவணப்படுத்தியதுடன் மட்டுமன்றி தென்னிலங்கையும் மத்தியில் ஆட்சிபுரிபவர்களும் என்றுமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்ற கட்டுக்குள் இருந்து விலக முடியாதவாறு அழுத்தங்களுக்கு மத்தியில் அருஞ்செயலாற்றியிருக்கின்றார். 

அதுமட்டுமன்றி உள்ளக விசாரணைக்கான மறைமுக வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கமும் முன்னகர்த்தி வருகையில் அதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் “மும்மொழி வித்தகர்” ஒத்தூதும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்ற தருணத்தில் எமது மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது சர்வதேச விசாரணையே அவசியம் என்பதையும் ஆணித்தனமாக கூறியிருக்கின்றார். 

இலங்கையில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுப்பதற்கு தற்போது எந்தவொருவரும் இல்லை என்பதையும் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார். மேலும் தமிழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தென்னிலங்கையும் மத்திய அரசும் ஏற்றுக்கொண்டாலே நல்லிணக்கம் அதற்கு முன்னர் அவை அனைத்துமே வெறும் போலிஇணக்கம் என்பதை சுட்டிக்காட்டி அதற்காக தன்னாலனவரை போராடவுள்ளதாகவும் உறுதிப+ண்டுள்ள விக்கினேஷ்வரன் தமிழ் மக்களின் விடிலுக்கான விடிவெள்ளியாக மாறியிருக்கின்றார்.
தென்னிலங்கையின் திரைமறைவு அழுத்தங்களுக்கும் சுகபோகங்களும் விலைபோகாது போராடும் ஒரு நடுநிலையாளரான முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவரே தமிழ் மக்களின் உரிமைப்பேராட்டத்தை தற்போதைய காலகட்டத்தில் தலைமையேற்றி வழிநாட்த்திச் செல்வதற்கு சாலப்பொருத்தமானவர். 

அத்துடன் தேசியத்தின் பால் உறுதியுடன் நிற்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளட்ட கட்சிகளும் விக்கினேஷ்வரனின் அண்மைக்கால செயற்பாடுகளுக்கு பகிரங்க ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துள்ள நிலையில் இவர் தலைமையேற்கும் பட்சத்தில் நிச்சயமாக ஓரணியில் திரள்வதற்கான அதிகப்படியான சாத்தியங்களும் காணப்படுகின்றன. 

அதேநேரம் விடுதலையை நேசிக்கும் இவருக்கு எக்காரணத்திற்காக ஆயுதங்களை போராட்டக்குழுக்கள் கையிலெடுத்தன என்பதையும் புரிந்து கொள்ளாதவராக இருக்கமுடியாது. ஆகவே போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்கு திரும்பி தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்குள் நிற்கும் விடுதலை இயக்கங்களும் இவர் பின்னல் அணிவகுப்பதற்கு தயராகலாம். 

குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என குறிப்பிட்டபோது சம்பந்தன் மீண்டும் பழைய சீலை கிழிந்த கதையாய் நாம் ஜனநாயக கட்டமைப்பு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம் என கூறினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சுஸ்மா நீங்கள் பாதிக்கடலையே தாண்டியிருக்கின்றீர்கள். மீதிக்கடலை கடக்கவேண்டும். அதற்கு ஒற்றுமை அவசியம் என குறிப்பிட்டிக்கின்றார்.

மறுபுறத்தில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் முகத்திரை ஏறக்குறைய கிழிந்து விட்ட நிலையில்  தலைமையுடனும் அதன் பாகனுடனும் நாம் தொடர்ந்தும் பயணிப்போமாகவிருந்தால் வெகுவிரைவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழினம் என்பது அனைத்தையும் தொலைத்த அடிமைச் சமுகமாக மாறுவதை தடுக்கவே முடியாது. ஆகவே புதிய தலைமை தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதற்குரிய உந்துதல்கள் அளிக்கப்படவேண்டும். 

கடந்த காலத்தில் இதற்காக கிழக்கு ஊடகவிலாளர் சங்கம், தமிழ்த்தேசியப் பத்திரிகைகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள் என பலதரப்பட்டவர்களும் காத்திரமான பணியை ஆற்றியிருந்தார்கள். அவற்றில் தற்போது சிலர் மரணித்து விட்டனர். பலர் புலம்பெயர்ந்து விட்டனர். ஆகவே இந்த தீர்க்கமான சிந்தனையை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய கடப்பாட்டை புதிய புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், தமிழ்த் தேசியப் பத்திரிகைகளும் கொண்டிருக்கின்றன. அந்த காத்திரமான பணியை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளை விட்டகலாத தமிழ் தேசியத்திற்கு விரைவிலேயே புதிய இரத்தம் பாச்சப்படும் என்பது நிதர்சனம். 

கிளிநொச்சியிலிருந்து…
ஒரு ஊடகவியலாளனின் பார்வையில் 


                                                                                                              (நன்றி: Puli Urumudhu)