“நாங்கள்” இயக்கத்தால் சமநேரத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன வடக்கு கிழக்கு மாகாணங்கள்!!! (Photos)
அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல்
போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, “நாங்கள்”
இயக்கத்தால் சமநேரத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்ச்சிகளால் அதிர்ந்தன
வடக்கு கிழக்கு மாகாணங்கள்!
பெப்ரவரி
நான்கு! அதாவது நாளை சிறீலங்காவின் சுதந்திரநாள்! தன்னை ஒரு ஜனநாயக
நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப்பேணிப்பாதுகாக்கும்
கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும்
முயற்சிக்கிறது.
மனித உரிமைப்பிரகடனங்களை
வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக சிறீலங்கா,
பூகோளப்பந்தில் தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில்,
‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும்.
‘அரசியல் கைதிகள்’ எனும் சொல்ப்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்’ என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும்.
‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும்.
இவ்வாறு
இலங்கை மக்களின் நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும்
சமகாலப்பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறும், தீர்வளிக்குமாறும் சிறீலங்கா
அரசை வலியுறுத்தி, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வினருடன் இணைந்தும்,
அரசியல்
கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின்
பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்தும், வடக்கு கிழக்கில் செயல்பாட்டு
வலையமைக்கொண்டுள்ள, மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய “நாங்கள்” இயக்கத்தினர், மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்ச்சியை இன்று, (03.02.2015) வவுனியா நகரசபை மைதானத்தில் நடத்தினர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா மற்றும் “நாங்கள்” இயக்கத்தின்
யாழ்ப்பாணம் மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர் செல்வராஜா பிரதாப் ஆகியோரின்
தலைமையில் குறித்த கவனயீர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமநேரத்தில்
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்துறைமுகம் வீதி, சிறுவர் பூங்கா
வளாகத்தில் திருகோணமலை மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர் வடமலை ராஜ்குமார்
அவர்களின் தலைமையிலும், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின்
தலைமைச்செயல்பாட்டாளர்கள் பாலசிங்கம் முரளிதரன், செல்லத்துரை கஜேந்திரன்
ஆகியோரின் தலைமையில் கல்லடி பாலத்திலிருந்து காந்திநகர் சதுக்கம் வரையிலும்
மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்ச்சியை “நாங்கள்” இயக்கத்தினர் நடத்தினர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற குறித்த கவனயீர்ப்பு நிகழ்ச்சிகள் ஊடாக, “நாங்கள்” இயக்கம்
வலியுறுத்தும் தவிர்க்க முடியாததும், அத்தியாவசியமானதும், கட்டாயமானதுமான
பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வையும், பரிகார நீதியையும் சம்பந்தப்பட்ட
தரப்பினர் தந்துதான் ஆக வேண்டும் என்றும், அவற்றை தரும்வரையிலும் தமது
இயக்கத்தின் போராட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்றுக்கொண்டு தான்
இருக்கும் என்றும்,
பொதுஜனங்களுக்கு இயல்பு
வாழ்க்கை கிட்டுவதற்காகவும், தொடர்ந்துகொண்டிருக்கும் சமுக அவலங்களை
நிறுத்துவதற்காகவும் கரிசனையுடன் செயலாற்றுவதோடு, உலகத்தினுடைய மொத்த
மனச்சாட்சியையும் உலுக்கிக்கொண்டிருக்கும் மனித பேரவலத்துக்கெல்லாம்
கொடுக்க வேண்டிய அக்கறைகள், செய்யப்பட வேண்டிய மீட்பு முயற்சிகள் குறித்து,
தமது செயல் பணிகளை இதயசுத்தியுடன் முன்கொண்டு சென்று, அரசியல் வெறுமை
நிலையில் இருக்கும் மக்களுக்கு மிகச்சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை
கொடுத்து மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாக பணி செய்து கிடப்போம்
என்றும் பிரகடனம் செய்தனர்.
“உங்களின் பசியை தீர்த்து வைக்காமல், எங்களின் உணவைத்தொடமாட்டோம்” என்று மக்களைப்பார்த்து கூறும் உளத்தூய்மையும், “உங்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்ற உயிரையும் பிழிந்து கொடுப்போம்”
என்று மக்களைப்பார்த்து கூறும் நெஞ்சுரமும், தம்மிடம் இருப்பதாக
எவரெல்லாம் மானசீகமாக உணர்கிறார்களோ, நம்புகிறார்களோ, அவர்கள் எல்லாம் “நாங்கள்” இயக்கத்தில் செயல்பாட்டாளர்களாக விரைந்துவந்து இணைந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.
செய்தியறிக்கையிடலும், ஒளிப்படங்களும்,
நன்றி: -அ.ஈழம் சேகுவேரா-