மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில், கட்டாயப்படுத்தப்பட்டு
கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டு பெண்களை
தலைமைத்துவமாகக்கொண்டுள்ள குடும்பங்களில், இருபத்தொரு குடும்பங்களுக்கு
சுயதொழில் முயற்சிக்கான ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.
“நெல்லு குற்றி அரிசியாக்கி விற்பனை செய்தல், இடியப்பம் அவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்தல்” உள்ளிட்ட குடிசைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் குடும்பங்களுக்கே சிறுதொகை நிதி ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொம்மாந்துறை
கிழக்கு மாதர் வள அபிவிருத்திச்சங்க பிரதிநிதி திருமதி மதனா
ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில்,
‘நாங்கள்’ இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைச்செயல்பாட்டாளர்
பாலசிங்கம் முரளி நிதியுதவியை வழங்கினார்.
உலகத்தினுடைய
மொத்த மனச்சாட்சியையும் உலுக்கிப்போட்டிருக்கும் இங்குள்ள
மனிதப்பேரவலத்துக்கெல்லாம் கொடுக்கவேண்டிய அக்கறைகள், செய்யப்படவேண்டிய
மீட்பு முயற்சிகள் குறித்து, ‘நாங்கள்’ இயக்கம் தமது செயல் பணிகளை
இதயசுத்தியுடன் முன்கொண்டு செல்லும் எனவும் அவர் மக்களிடம் உறுதிமொழி
கூறினார்.
மேலும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கை
கிட்டுவது தொடர்பிலும், தொடர்ந்து கொண்டிருக்கும் சமுக அவலங்கள்
நிறுத்தப்படுவது தொடர்பிலும், கரிசனையுடன் செயலாற்ற அனைவரதும் ஆதரவையும்
எதிர்பார்ப்பதாகவும் அவர் அழைப்பு விடுத்தார்.