மஹிந்த விட்டுச்சென்ற குறைப்பணியை தொடரும் மைத்திரி! நெடுங்கேணி தமிழ் பிரதேசத்துக்கு தனிச்சிங்கள அரச அதிகாரிகள் நியமனம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘மணலாறு’ தமிழ் பிரதேசத்தை ‘வெலிஓயா’ எனப்பெயர்
மாற்றி, அங்கீகரிக்கப்படாத தனிச்சிங்கள பிரதேச செயலகப்பிரிவாக அதனை
உருவாக்கியிருந்த சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,
வவுனியா
வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட தனித்தமிழ் கிராமங்கள்
சிலவற்றையும் வெலிஓயாவுடன் இணைப்பதற்கு கடும் பிரயத்தனங்களையும், சில
முன்னாயத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
அதன்
ஓர் அங்கமே, வவுனியா மாவட்டத்துக்கு அரச அதிபராக தனிச்சிங்கள பௌத்தர்
பந்துல ஹரிச்சந்திர அவர்களும், வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச
செயலகப்பிரிவின் உதவித்திட்டமிடல் பணிப்பாளராக (ADP)
தனிச்சிங்கள பௌத்தர் ஒருவரும், மேலும் ஐந்துக்கும் மேல்பட்ட அலுவலக
உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டமையாகும். கூடவே கிராம
அலுவலர்களுக்கெல்லாம் தலைமை அலுவலராகவும் (நிர்வாக கிராம அலுவலர் - GS Headquarters) தனிச்சிங்கள பௌத்தர் ஒருவரே நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்
ஜனவரி 08 இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலையடுத்து சிறீலங்காவில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மஹிந்த ராஜபக்ஸ வீட்டுக்கு அனுப்பப்பட, புதிய
அதிபராக பதவியேற்றிருக்கும் மைத்திபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸ
விட்டுச்சென்ற குறை வேலைகளை முடித்து வைக்கும் அலுவல்களில் தீவிரமாக
இறங்கியுள்ளார்.
இருநூற்று ஐம்பதுக்கும் மேல்பட்ட
தனித்தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வளப்படுத்திவரும் நெடுங்கேணி பிரதேச
செயலக பிரிவுக்குள்பட்ட மாமடு, சேனைப்புலவு, ஈட்டி முறிஞ்சான் தமிழ்
கிராமங்களுக்கு, கிராம அலுவலராக (GS) ‘மத்துமபண்டார’ என்று அழைக்கப்படும் தனிச்சிங்கள பௌத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக
நியமனம் பெற்றுள்ள மத்துமபண்டாரவுக்கு தமிழ் மொழி பேசத்தெரியாது. மாமடு
தமிழ் கிராம மக்களுக்கோ சிங்கள பாசை பேசத்தெரியாது. இத்தகைய அரசியல் சார்பு
நியமனங்களாலும், குழப்பகரமான மொழிப்பிரச்சினையாலும் பொதுமக்கள் தமக்குரிய
சேவைகளை பெற்றுக்கொள்வதிலும், தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதிலும்
இருதலைக்கொள்ளி எறும்பாட்டமாக தவிக்கின்றனர்.
வவுனியா
மாவட்ட அரச அதிபராக தனிச்சிங்கள பௌத்தர் பந்துல ஹரிச்சந்திர அவர்கள்
நியமிக்கப்பட்ட போதே, தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களாக பெயர்
மாற்றுவதும், தமிழர் பிரதேசங்களில் புதிய சிங்கள குடியேற்றங்களை
உருவாக்குவதும் - குடியேற்றுவதும், தனிச்சிங்கள பௌத்தர்களை அரச அதிகாரிகளாக
- உத்தியோகத்தர்களாக நியமிப்பதும் ஆன, வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு
விட்டன.
தமிழ் மக்களை பூர்வீகமாகக்கொண்ட
நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவுக்கு தனிச்சிங்கள அரச அதிகாரிகளை
நியமிப்பதில் தொடர்ந்தும் ஈடுபாடும் கவனமும் செலுத்தப்படுதல் ஆனது,
நெடுங்கேணி
பிரதேச செயலகப்பிரிவின் கரையோர தமிழ் எல்லைக்கிராமங்களான ஒதியமலை,
பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம், காஞ்சுரமோட்டை,
தனிக்கல்லு, ஓயாமடு, ஊற்றுக்குளம், கூழாங்குளம், கொக்கச்சான்குளம், மாமடு,
சேனைப்புலவு, ஈட்டி முறிஞ்சான் கிராமங்களையும்,
முல்லைத்தீவு
மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, தென்னமரவாடி
தனித்தமிழ் கிராமங்களையும், அநுராதபுரம் மாவட்டத்தின் ஒருசில தனிச்சிங்கள
கிராமங்களையும், உள்ளடக்கி ‘வெலிஓயா’ தனிச்சிங்கள பிரதேச செயலகப்பிரிவை
இன்னும் பலப்படுத்தி அங்கீகரிப்பதற்கேயாகும்!
சிறீலங்காவின்
புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் மைத்திபால சிறிசேனவை தமிழ்
தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியபோது, வவுனியா மன்னார்
திருகோணமலை மாவட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் அரச
அதிபர்களாக பதவியில் அமர்த்தப்பட்டுள்ள தனிச்சிங்கள பௌத்தர்களுக்கு
இடமாற்றம் வழங்கி, தமிழ்மொழி பேசும் அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரிக்கை
விடுத்ததாக கூறப்படுகின்றது. (யாமறியோம் பராபரனே! – இது அந்த
பரமாத்மாவுக்கே வெளிச்சம்!)
ஆனால் தமிழ் மக்களின் நிலைமையோ, ‘பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்’ எனும் நிலைவரமாக நீளுகிறது!
பட்ட காலிலே படும் = "எந்தக்காலில் அடிபட்டுக்காயம் ஏற்படுகிறதோ, அந்தக்காலில் அடிக்கடி துரதிர்ஷ்டவசமாக அடி விழும்(படும்)", கெட்ட குடியே கெடும் = "எந்தக்குடும்பத்தில் ஒரு துன்பம் நேர்கிறதோ, அக்குடும்பத்தில் துரதிர்ஷ்டவசமாக அடுக்கடுக்காய்த்துன்பங்கள் நேரும்" என்பதே இப்பழமொழி நமக்கு உணர்த்தும் செய்தியாகும்!
செய்தியறிக்கையிடல்,
-கவரிமான்-