“வயலுக்கு கேடு களைகள்” வாருங்கள், களைகள் பிடுங்கி பயிர்கள் நடவு செய்வோம். “நாங்கள்” இயக்கம் அறைகூவல்!!!

இலங்கை, தமிழகம், புலத்திலுள்ள பேராசிரியர்கள், சட்டவாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்  - மனித உரிமை செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் பலரை மதிஉரைஞர் குழுமமாகக்கொண்டு,


வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள, பல்கலைக்கழக – உயர்கல்வி மாணவர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், சமுக ஆர்வலர்கள் உறுப்புரிமை பெறும், மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய “நாங்கள்” இயக்கத்தினர் தமது கொள்கைப்பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் கொள்கைப்பிரகடனம் இணைப்புச்செய்யப்பட்டுள்ளது.

உலகமே இயந்திரகதியாகி விட்டது. இரக்கம், உதவி செய்யும் மனப்பான்மை, தவறை தட்டிக்கேட்கும் துணிச்சல், அநீதிக்கு எதிரான கோபம், கல்விக்கு கைகொடுக்கும் ஆர்வம், இயற்கை மீதான பற்று, அன்பு, மகிழ்ச்சி, பரிவு, கனிவு, அக்கறை, நம்பிக்கை, பாதுகாப்பு என, மனித வாழ்வியலின் அழகிய உணர்வுகளை இனிதே வெளிப்படுத்தும், இன்னும் எத்தனையோ நல்லெண்ண விசயங்களில், “மனிதம்” மாறாமல் இருக்கும் மனிதர்கள் அபூர்வமாகி விட்டார்கள்.

ஊழிப்பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமுகத்தை கருணைப்பேழையாக மிதந்து, வெகுசிலரே காப்பாற்றிக்கரை சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். மண்ணோடு கலந்திருக்கும் தங்கத்தாது போல, இவ்வளவு பெரிய ஜனத்திரளில் கலந்திருக்கும் அந்தக்கௌரவ மனிதர்களை கண்டுபிடி(த்திரு)ப்பதே நமது முதல் வெற்றி! நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும் அந்தக்கௌரவ மனிதர்களாக நீங்கள் இருப்பதையிட்டு அமுதளவு மகிழ்ச்சி! கடலளவு நம்பிக்கை!

எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும், “பணம் பணம் பணம்” என்று வளைய வளைய வலம் வந்துகொண்டிருப்பவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தில், குட்டி ஈன்ற பூனையாக தாம் பிறந்த மண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருக்கும், தமது வீட்டு முற்றத்தையே பூசித்துக்கொண்டிருக்கும் நிலம் மீதான காதலும், இயற்கை மீதான நேசிப்பும் கொண்டவர்களும் சீவித்துக்கொண்டிருப்பதாலேயே, இன்று கொஞ்சமேனும் பூமி உயிர்ப்புடன் இருக்கிறது.

ஆத்மார்த்தமாக இந்த ஜீவ ஓட்டத்தை பூமிக்கு கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் நானாக இருப்பினும், நீயாக இருப்பினும், யாராக இருப்பினும், வாருங்கள் “நாங்கள்” ஆகி புதியதொரு உலகம் செய்வோம்!

கேடு வராமலும், கேடு வந்தால் அதனைச்சரிசெய்து இயற்கை வளம் குன்றாமல் காத்துக்கொண்டு இருக்கின்ற நாடே, நாடுகளுக்கெல்லாம் தலைமையானது! - என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. வாருங்களேன் “நாங்கள்” நாடுகளுக்கெல்லாம் நாடு செய்வோம்.

“நீ இல்லாமல் என்னால் சாதிக்க முடியாது. நான் இல்லாமல் உன்னாலும் சாதிக்க முடியாது. ஆனால், எங்களால் சாதிக்க முடியும்!” Yes! We Can!


“இல்லை - இயலாது - முடியாது எனும் எதிர்மறை எண்ணங்களை (Negative Thinking) தவிர்த்து, ஆம் - முடியும் - முயற்சிப்போம்” எனும் (Positive Thinking) நம்பிக்கை வித்துகளை விதைத்தே, அறுவடையின் பயனை படையல் செய்து, சேர்ந்தே நுகர்வோம் வாருங்கள்.

முன்பெல்லாம் மக்களின் வாழ்வும், தாழ்வும் ஐம்பூதங்களான இயற்கையை மையமாகக்கொண்டே அமைந்திருந்தன. இன்றோ “தொட்டில் முதல் சவப்பெட்டி வரை” அனைத்தையும் அரசியலே தீர்மானிக்கின்றது. 

உங்கள் வீடு, பக்கத்து வீடு, அடுத்த தெரு, அப்பால் உள்ள குடியிருப்புகள், பக்கத்து ஊர், அயல் கிராமம், நகரம், மாநிலம் என்று ஒருமுறை காலாற நடந்தே போய்வருவோம் வாருங்கள்.

அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்துகொண்டிருப்பதையும், அசுத்தமாய் இருப்பவன் இன்னும் அசுத்தமாகிக்கொண்டிருப்பதையும், இருட்டில் இருப்பவன் இன்னும் இருட்டை நோக்கியே போய்க்கொண்டிருப்பதையும், தனது உற்பத்தி பொருளுக்கு சரியான விலைநிர்ணயம் கிடைக்கவில்லை என்பதற்காக பூச்சிமருந்து குடித்து இறந்துகொண்டிருக்கும் ஏழை விவசாயியையும், ஒருவேளை உணவுக்காக தனது உடலையே விற்பதற்கு தயாராக நிற்கும் அபலையையும், ஐந்துக்கும் பத்துக்கும் (கூலிக்கு) மாரடித்துக்கொண்டிருக்கும் சிறுவர் தொழிலாளர்களையும், எலிகள் பெருஞ்சாளிகளாகி, பெருஞ்சாளிகள் பன்றிகளாகிக்கொண்டிருப்பதையும்,

தற்கொலைகள், கருக்கலைப்புகள், சிசுக்கொலைகள், பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், மனநோய்கள், கொலைகள், கொள்ளைகள், களவுகள், பசி, பிணி, வறுமை, சூது, சூழ்ச்சி, வன்முறை, வழிப்பறி, ஏமாற்று, ஏறிமிதிப்பு, ஏய்த்துப்புழைப்பு, ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, ஒடுக்கல், அடக்கல், பாரபட்சம், பழிவாங்கல், திணிப்பு, தீண்டாமை, அகதிகள் குடியிருப்பு, சாக்கடைக்குப்பக்கத்திலே சமையல், மலத்துக்கு பக்கத்திலே உணவு இப்படி ஒரு இழிநிலைச்சமுதாயத்தையும் காண்பீர்கள்.   

இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று? சக்தியற்ற - பயனற்ற அரசியல் தலைமைகளால்தானே இந்த அபத்தம், அபாண்டம், வெட்கம், கேடு, அவமானம், சாபம் எல்லாம்! எல்லாமே!

மரங்கள் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமியின் வெப்பநிலை கூடுகின்றது. வாயு மண்டலம் பாதிப்படைகிறது. காலநிலையில் சடுதியாக மாற்றம் ஏற்படுகின்றது. நீர்வளம் குறைகிறது. வறட்சி அதிகரிக்கிறது. உற்பத்தி பாதிப்படைகிறது. உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. முடிவில் பஞ்சமும், பசியும், பட்டினிச்சாவும், நோயும் நொடிகளும் எம்மைச்சூழ்கிறது.

இப்படி சதா அச்சுறுத்திக்கொண்டிருக்கும், குடைந்துகொண்டிருக்கும் உலகத்தையா, சூழலையா அடுத்துவரும் தலைமுறையினருக்கு நாம் கையளிக்கப்போகிறோம்?

வீக்கத்தை வளர்ச்சி என்று நம்பிக்கொண்டும், சீழ் நிரம்பிய கொப்புளங்களை முலை என்று சப்பிக்கொண்டும், இலையில் நிறைய பண்டங்களைப்பரிமாறிவிட்டு, ஒரு ஓரத்தில் சாணத்தை வைப்பதை விருந்தோம்பல் என்றும், தாயைக்கொன்றுவிட்டு நாய்க்கு சோறு போடுவதை தானம் என்று கூறிக்கொண்டும் இருக்கும் அரசியல் சூழமைகளை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் தமது சொந்த நலன்களுக்கு இணங்க நன்கு அறிவூட்டப்பட்ட தீர்மானங்களை உய்த்துணர்ந்து எடுக்கக்கூடியவாறான சூழமைகளை தோற்றுவித்து, சமுதாயத்தரத்தை உருவாக்குவதிலும், உயர்த்துவதிலும் பணிசெய்து கிடப்போம் வாருங்கள்! நாங்கள் கண்ணால் காணுகிற, தொட்டு உணருகிற, இசைந்தே குலைந்தே வாழுகிற சமுதாயத்தையும், சூழலையும் (சு)வாசிப்போம் வாருங்கள். 

“தனிமரம் தோப்பாகாது. ஆனால் தோப்பாவதற்கு ஒவ்வொரு தனிமரமும் தேவை” என்பதே, நாங்கள் நிகழ்கால சீவியத்தில் கற்றறிந்திருக்கும் அநுபவப்பாடமாகும். தனி ஒரு மனிதனின் மாற்றமே ஒட்டுமொத்த சமுகத்தின் மாற்றமாக கொள்ளப்படுகின்றது. இந்த அநுபவப்பாடத்தை கற்றுத்தேர்ந்து, கடைந்தெடுக்கப்பட்ட தனித்தனி மனிதர்களின் கட்டமைப்பே, தமது நிலத்துக்காக இனத்துக்காக பாரம் தூக்கவும், வலி சுமக்கவும் புறப்பட்டு வந்துள்ள சமுகப்போராளிகளின் இயக்கமே “நாங்கள்”  


“உங்களின் பசியை தீர்த்து வைக்காமல், எங்களின் உணவைத்தொடமாட்டோம்” என்று மக்களைப்பார்த்து கூறும் உளத்தூய்மையும், “உங்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்ற உயிரையும் பிழிந்து கொடுப்போம்” என்று மக்களைப்பார்த்து கூறும் நெஞ்சுரமும், தம்மிடம் இருப்பதாக எவரெல்லாம் மானசீகமாக உணர்கிறார்களோ, நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் “நாங்கள்” இயக்கத்தில் செயல்பாட்டாளர்களாக இணைந்துகொள்ளும் தகுதியைப்பெற்றுள்ளனர்.

ஆதலால், கறை இல்லாதவர்கள் தன்முனைப்புடன் வாருங்கள். கருணைப்பேழையாக மிதந்து இந்த உலகை காப்பாற்றிக்கரை சேர்ப்போம்! வயலுக்கு கேடு களைகள்! வாருங்களேன், களைகள் பிடுங்கி “நாங்கள்” பயிர்கள் நடவு செய்வோம். மண் பயனுறட்டும்! இயற்கை அன்னை மடியின் கதகதப்பில் சொக்கிக்கிடந்தவாறு பால் குடிப்பதற்கு பதிலாக, அன்னையின் இரத்தத்தையே உறிஞ்சிக்கொண்டிருக்கிறது அதிகாரக்கும்பல். இதுவே நல்லவர் தாழவும், தீயவர் வாழவும் வழிவகை செய்கிறது. “வல்லோரும் வலியோரும் வாழ அல்லாது, எல்லோரும் எல்லாமும் பெற, இல்லாமை இல்லாத நிலைபெற” வாருங்கள் இனியொரு விதி செய்வோம்! 

கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர், சட்டத்துக்கு முரணாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்,

பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம், இளம் விதவைகள், யுத்தத்தால் கைவிடப்பட்டுள்ள சிறுவர்கள், மூத்த பிரஜைகள், கடும் காயங்களுக்கு உள்ளானவர்கள், முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு,

அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படை மீள்கட்டுமானங்கள், மருத்துவம், சுகாதாரம், சுத்தமான குடிநீர், சுவாத்தியமான வசிப்பிடங்கள், பாதுகாப்பான கழிப்பறைகள், அத்தியாவசியக்கல்வி, சத்துணவு மறுதளிப்பு,

இன விகிதாசாரத்தை சீர்குலைக்கும், இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் குடியேற்றங்கள், கனிய வளச்சுரண்டல்கள், காடழிப்புகள் அதனைத்தொடர்ந்த காணி நில சுவீகரிப்புகள், ஆக்கிரமிப்புகள்,

சொத்துகள் துரவுகள், உடைமைகள் சூறையாடப்பட்டோர், தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வளப்படுத்திய பூமியில் வன்புணரப்பட்டோர், தமது பூர்வீக நிலபுலங்களுக்கு திரும்பிச்செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளோர்,

இராணுவ வல்வளைப்புச்சூழலும், மொழி மத கலை கலாசார திணிப்பும்,

நடைபெற்றுள்ள மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்கள், மனிதகுலப்படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு பரிகார நீதி கோரலும், பொதுசன வாக்கெடுப்பை வலியுறுத்தலும், 

இவ்வாறு நமது நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும் தேவைகள், பிரச்சினைகள் உண்டு. இவற்றைக்கடந்து வேறு எவற்றையும் யோசனை செய்துகூடப்பார்க்க முடியாத அளவுக்கு, இவற்றுக்கு தீர்வு காணப்படாமல் மேற்கொண்டு ஒரு அடி தானும் முன்னோக்கி நகர்ந்துவிட முடியாத அளவுக்கு உருத்தலாக, குடைச்சலாக உள்ள இந்த விவகாரங்களுக்கு அவசரமும் அவசியமுமாக தீர்வு காணப்படல் வேண்டும்.

இன முன்னேற்றத்தில் துடிப்பு, நடப்புப்பிரச்சினைகளில் அக்கறை, எதிர்கால தேசம் குறித்த பரந்த சிந்தனை, மக்களை ஒன்றிணைத்துத்திட்டமிடல், அவர்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து செயல்படுதல், இந்த மனிதாபிமானப்பண்புகளையே தங்களின் ஆத்மாவாகக்கொண்டிருப்போரே வாருங்கள், பொதுஜனங்களுக்கு இயல்பு வாழ்க்கை கிட்டுவதற்காகவும், தொடர்ந்துகொண்டிருக்கும் சமுக அவலங்களை நிறுத்துவதற்காகவும் “நாங்கள்” கரிசனையுடன் செயலாற்றுவோம். உலகத்தினுடைய மொத்த மனச்சாட்சியையும் உலுக்கிக்கொண்டிருக்கும் மனித பேரவலத்துக்கெல்லாம் கொடுக்க வேண்டிய அக்கறைகள், செய்யப்பட வேண்டிய மீட்பு முயற்சிகள் குறித்து, எமது செயல் பணிகளை இதயசுத்தியுடன் முன்கொண்டு செல்வோம்.

நம் முன்னால் இங்கே ‘மாபியாக்கள்’ போல பயமுறுத்திக்கொண்டிருக்கும் அத்தனைப்பிரச்சினைகளுக்கும் யாரோ சிலரைக்குறை சொல்லி விட்டுக்கடந்து போவதால், சமுகத்துக்கு எவ்விதப்பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பதை நாம் நன்றே உணர்ந்திருக்கிறோம். 

கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, மருத்துவம், உற்பத்தி, விலைவாசி என்று, நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும், அசைவையும் அரசியலும் அதன் கொள்கைகளும் தான் தீர்மானிக்கின்றன. “அரசியல் சாக்கடை” என்று ஒதுங்கிப்போவதாலோ, விலகி நிற்பதாலோ பயனேதுமில்லை. அரசியல் கொள்கைகளைப்புரிந்துகொண்டு அதை விவாதிப்பதிலிருந்து தான் தவறான கொள்கைகளை அடையாளம் காணவும், காட்டவும் முடியும். மாற்றுக்கொள்கைகளை கண்டறியவும் முடியும்.

அந்த மாற்றுக்கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டால், அதன்பின்னர் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதைத்தான் “நாங்கள்” செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

“நீ இல்லாமல் என்னால் சாதிக்க முடியாது. நான் இல்லாமல் உன்னாலும் சாதிக்க முடியாது. ஆனால், எங்களால் சாதிக்க முடியும்!” ஆம்! நம்மால் முடியும்! Yes! We Can!

“சரியான முடிவை எடுப்பதற்கு முன்னர், அனைத்து வாய்ப்புகளையும் முயற்சித்துப்பார்ப்போம். எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகும், சரியானவற்றையே மேற்கொள்வோம். அதுதான் உண்மையான ஆட்சி முறை மற்றும் தலைமைத்துவப்பண்பு ஆகும்.”

நிறைந்தளவு நம்பிக்கையுடன்,
-நாங்கள் இயக்கத்தினர்-

தொடர்புகளுக்கு:
NaangalPolitician@gmail.com
Naangal@Politician.com

0094 773477 018, - யாழ்ப்பாணம் மாவட்டம்
0094 776872 813, - கிளிநொச்சி மாவட்டம்
0094 7792 36245,
0094 776699 093, - முல்லைத்தீவு மாவட்டம்
0094 773524 354, - வவுனியா மாவட்டம்
0094 777903 445, - மன்னார் மாவட்டம்
0094 771858 039, - திருகோணமலை மாவட்டம்
0094 767130 878, - மட்டக்களப்பு மாவட்டம்
0094 771677 883, - அம்பாறை


                                                        ***---------------***


                                                                                                            -நன்றி-
                                                                                                             WeTamizhar.