முல்லைத்தீவில் மூக்குடைபட்ட மாவையருக்கு
தாளம்போடச்சென்றார் ஸ்ரீதரன் எம்.பி!
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு இரகசிய இளைஞர் அணியை உருவாக்க முயன்றபோது களேபரம்! - உண்மைச்சம்பவம்"
தேசியத்தை
முன்னிலைப்படுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக ஒன்றுபட்டு மக்கள்
ஆணையைப்பெற்றிருக்கின்ற போதும் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்த ஏனைய
பங்காளிக்கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தாமே பிரதானமானவர்கள்... தாமே வடக்கு
கிழக்கின் அரசியல்வாதிகள்... என்று மார்பு தட்டிக்கொண்டு சுயநல அரசியலை
முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையின் மறைமுகச்செயற்பாடொன்று
அம்பலமாகியுள்ளது.
அதுமட்டுமன்றி இறுதி
யுத்ததால் ஊரிழந்து உறவிழந்து இன்று அனைத்தையும் இழந்த நிலையில் அக்கினி
நடுவில் பயணிக்கும் மக்கள் சமூகத்தின் மத்தியில் மாறுவேடம் போட முனைந்தபோதே
தேசியத்தை நேசிக்கும் இளைஞர் குழுவினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க
முடியாது மூக்குடைந்து திரும்பிய சம்பவமொன்று முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பில் அரங்கேறியுள்ளது.
ஆம்!
கடந்த 08-02-2015 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் கண்ணீரும்
கம்பலையுமாக இன்றும் அலைந்து திரியும் காணாமல்போனோரின் உறவுகளினால்
மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இது ஒரு புறம்
நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மறுபுறத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின்
தலைவர் மாவை.சேனாதிராஜாவும் அவரது மேளத்திற்கு தாளம்போட்டவாறு
‘கிளிநொச்சியில் பிரபாகரன்’ என்று தன்னைத்தானே காட்டிக்கொள்ளும்
ஸ்ரீதரனையும் ஒருங்கே இணைத்தவாறு முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்
நுழைந்தார். ஏன் இந்த திடீர் விஜயம். காணாமல்போன உறவுகளின்
ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற வருகிறாரா? உங்கள் மனதில் கேள்வி
எழும்பியிருக்கலாம். அவ்வாறேதுமில்லை உறவுகளே!
இளைஞர்களை
ஒன்றுபடுத்தி தமிழரசுக்கட்சிக்கு இளைஞர் அணியொன்றை உருவாக்கவே இரகசிய
முல்லைத்தீவு விஜயத்தின் காரணமாகும். அதற்கான பின்னணிகள் இரண்டு
காணப்படுகின்றன. அதிலொன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக இருக்கும்
தன்னுடைய காலத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை பலப்படுத்தி ஏனைய
கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை புறந்தவேண்டும். அதன் மூலம் மக்கள்
செல்வாக்கை வலுப்படுத்தி அதன் பலனாக தன்னுடைய வாரிசை அரசியலுக்குள்
உள்நுழைக்கவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான அடித்தளத்தின் ஒரு செயற்பாடே
இதுவாகும்.
இரண்டாவதாக விரைவில் நடைபெறவுள்ள
புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில்
பங்காளிக்கட்சிகள் தமது கட்சி சார்ந்து உறுப்பினர்களை முன்னிறுத்துவதற்கு
முன்னதாக தனது கட்சியைச்சேர்ந்தவர்களை நிறுத்தி
வெற்றிபெறச்செய்துவிடவேண்டும் என்ற கபடநோக்கமும் காணப்படுகின்றது. உண்மைகள்
கசப்பானவை. இருப்பினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. இவ்வாறு
அழுத்தமாக கூறுவதற்கு என்ன ஆதாரம் அல்லது மாவை, ஸ்ரீ எம்.பிக்கள் மீது
திட்டமிட்டு பழிசுமத்தப்படுகின்றதா என்று உங்களுடைய மனச்சாட்சி
கேள்வியெழுப்பலாம். அதற்காக அன்று நடைபெற்ற சில விடயங்களை
குறிப்பிடவேண்டியிருக்கின்றது.
அதன்பிரகாரம்
முல்லைத்தீவு மாட்டத்திற்கு அன்றைய தினம் தன்னுடைய ஜீப் வாகனத்தில்
பிரவேசித்த மாவை எம்பியும் ஸ்ரீ எம்.பியும் இளைஞர் கூட்டமொன்றை ஏற்பாடு
செய்து தமிழரசுக்கட்சிக்கான முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணியை
அங்குரார்ப்பணம் செய்வது என்றே நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்டிருந்தது. அந்த
நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சியின் 500 மஞ்சள்
நிற அங்கத்துவ விண்ணப்படிவங்களை வழங்கி தமிழரசுக்கட்சிக்கு பலத்த ஆதரவு
இங்குள்ளது என மாவை அண்ணருக்கு உறுதியளித்த அன்டனி ஜெகநாதன். மற்றையவர்
புதுக்குடியிருப்பு பிரதேசம் முழுவது ஓடித்திரிந்து இளைஞர்களை
ஒன்றிணைப்பதற்கு பாடாய் பட்டுக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஸவின் நெருங்கிய விசுவாசியும் முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய மக்கள்
சுதந்திரக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான நீதன்.
தமிழரசுக்கட்சி - நீதன், இவர்களுக்கு என்ன தொடர்பு?
வரலாற்று
பழைமை வாய்ந்ததும் மூத்த அரசியல்வாதிகளைக் கொண்டதுமான இலங்கை
தமிழரசுக்கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஸவின் விசுவாசியான நீதன் எவ்வாறு
தொடர்புபட்டுக்கொண்டார்? என்ற வினா அனைவருக்கும் எழுவதுடன் இதற்கு
அனுமதியளித்தது யார்? என்ற வினாவும் கூடவே எழவே செய்கின்றது. மஹிந்தவின்
ஆட்சிக்கவிழ்வுடன் தடுமாறியிருந்த நீதனுக்கும் அன்டனி
ஜெகநாதனுக்குமிடையிலான தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அன்டனி ஜெகநாதன்
நீதனைப்பயன்படுத்தி தனது அரசியலை முன்னெடுத்து கட்சி உயர் மட்டங்களில்
நற்பெயரைச்சந்திக்க திட்டம் தீட்டினார். அதன் பிரகாரம் முதற்கட்டமாக மஹிந்த
விசுவாசியான நீதனை இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைத்தார். நீதனைப்
பயன்படுத்தி இளைஞர்களை ஒன்றிணைத்து மாவை அண்ணனின் விருப்பத்தை ப+ர்த்தி
செய்வதற்கு கங்கணம் கட்டியிருந்தார்.
இதனால்
அன்டனி ஜெகநாதனுக்கு என்ன இலாபம் இருக்கின்றது என்று பார்த்தால்
கட்சித்தலைவரிடம் நற்பெயரைச் சம்பாதித்து விட்டால் பிரதேச சபையில் ஓர்
ஆசனத்தை அமிழ்த்திவிடமுடியும் என்பது அவருடைய உள்நோக்கம்.
அவ்வாறிருக்கையில் நீதன் தமிரசுக்கட்சியில் இணைந்தார். தலைவர் மாவை
எம்.பியின் வருகையை முன்னிட்டு தடல்புடலான ஏற்பாடுகள் இருப்பினும்
வீடுவீடாய்ச்சென்றே இளைஞர் யுவதிகளை கடும் சிரமத்திற்கு மத்தியில் அழைக்க
வேண்டியிருந்தது.
அவ்வாறான நிலையில் இளைஞர் அணியை
அங்குரார்ப்பணம் செய்யும் கூட்டம் ஆரம்பமாகிய போது அப்பிரதேசத்தைச்
சேர்ந்த சுமார் 30வரையிலான இளைஞர்கள் ஒன்றிணைந்து அங்கு சமுகமளித்ததுடன்
தமிழரசுக்கட்சியின் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு நீதன் யார்? இவர்
சிங்களத்துடன் கைகோர்த்திருந்தவர் எவ்வாறு கட்சியில்
இணைத்துக்கொள்ளப்பட்டார்? என அடுக்கடுக்காக மவை மற்றும் ஸ்ரீ
எம்.பிக்களிடம் கேள்விக்கணைகளை தொடுக்கவும் அந்த விடயம் தமக்கு தெரியாது
எனவும், எங்கோ தவறு நடந்திருக்கின்றது எனவும்? வழமையான பாணியில் பதிலளித்த
மாவை எம்.பி அவ்விடத்தை விட்டு மெதுவாக நழுவிச்சென்றார். ஸ்ரீ எம்.பியும்
பின்தொடர்ந்து சென்றார்.
ஆசை யாரைத்தான்
விட்டது. நான் தலைவன். எனது தலைமையில் கட்சிக்கு ஒரு இளைஞர் அணி
உருவாகப்போகின்றது என்ற ஆசை மாவை எம்.பியை முல்லை மண்ணை விட்டு
நகரவிடவில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையை ஓடிக்கொண்டிருந்தது.
இதற்கு ஏற்றவாறு அன்டனி ஜெகநாதன் தனது வீட்டில் கூட்டத்தை தொடர்வோம். நீதன்
தம்பி மற்றவையள கூட்டிக்கொண்டு வருவார் எனக்கூறவும் அவருடைய வீட்டிற்குச்
சென்று அங்கு தனது இலக்கை அடைவதற்கு முயன்றார் மாவை எம்.பி. அதேபோன்று
அன்டனி ஜெகநாதனும் தனது இலக்கை அடைய முயன்றார். நீதனும் தனது இலக்கை எட்ட
முனைந்தார்.
இந்த நிலையில் கூட்டம்
ஆரம்பமாகியது. சிறிது நேரத்திலேயே மீண்டும் அந்த இளைஞர் குழு
அவ்விடத்திற்குச் சென்றது. அன்டனி ஜெகநாதனின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு
மாவை, ஸ்ரீ எம்.பியின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்ததுடன் மட்டும்
நின்றுவிடாது நீதனுடன் இணைந்து செயற்படுவதென்றால் முல்லை மண்ணிலேயே காலடி
எடுத்து வைக்கக்கூடாது என்ற வசனம் மாவை எம்.பியை நோக்கி வீசப்பட்டது.
இதனால் அவ்விடத்தில் பதற்றமான சூழல் உருவானது.
அதன்போது இளைஞர்களை சமாதானம் செய்ய முயன்ற ஸ்ரீ எம்.பியும் அன்டனி ஜெகநாதனும் 'நாங்கள்
ஆயுதம் ஏந்தியவர்களையே கூட்டமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளோம். வெறுமனே
மஹிந்தவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நீதனை எமது கட்சியில்
இணைத்துக்கொண்டதில் என்ன தவறிருக்கின்றது?' என்ற வார்த்தைகளை
முன்வைத்து தம்மை நியாயப்படுத்த முனைந்தார்கள். இருந்தபோதும் அது
பலனற்றுப்போனது. அந்த இளைஞர்கள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்புக்காக கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலின் போது அதன் பின்னரான
செயற்பாடுகளின் போதும் செயற்பட்டவர்களாவர். அவர்களின் அடுக்கடுக்கான
வினாக்களுக்கு 'வடிவேலு பாணியில் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா"
என்றவகையிலான நியாயப்படுத்தும் பதில்களை கூறமுனைந்த மாவை, ஸ்ரீ, அன்டனி
ஆகியோரின் குரல்களே எடுபடவில்லை.
ஈற்றில்
தடாலடியாக மாவை எம்.பி கருத்தொன்றை முன்வைத்தார். குறிப்பாக நீதன் என்பவரை
தனக்கு தெரியாது எனவும் தான் இளைஞர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே
வந்ததாகவும் அவருடைய பின்னணி தெரிந்த பின்னரும் முல்லைத்தீவு இளைஞர்களாகிய
நீங்கள் விரும்பாத நிலையிலும் அவருடன் இணைந்து நாம் செயற்படப்போவதில்லை என
கூறி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்ற கதையாய் தப்பி பிழைத்துக்கொண்டு
முல்லை மண்ணை விட்டு வெளியேற முற்பட்டார். இருப்பினும் இளைஞர்கள் விடுவதாய்
இல்லை.
மேடை ஏற அஞ்சிய மாவை!
ஏற்கனவே
புதுக்குடியிருப்பு நகரில் மேடைபோடப்பட்டு பொதுக்கூட்டமொன்றுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அந்த மேடையில் கூட்டமொன்றை நடத்தவேண்டும். மக்களை
சந்திக்க வேண்டும் என அந்த தேசிய ஆதரவு இளைஞர்கள் மாவை.எம்.பியிடம் கோரி
அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற மாவை.எம்.பி என்ன
பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? எனக்கு இதுவெல்லாம்
தெரியவே தெரியாது. என்னுடைய இன்றை நிகழ்ச்சி நிரலிலும் அவ்விடயம் இல்லை.
இதற்கு சரியாக ஸ்ரீ எம்.பியும் தாளம் போட்டார்.
தம்முடைய
உள்நோக்கத்தை இளைஞர்கள் அறிந்திருக்கின்றார்கள் மேடையில் ஏற்றி வைத்து
விட்டு இவர்கள் ஏதாவது கேள்வியெழுப்பினால் இல்லை எம்மை தாக்கினால்
விபரீதமாக போய்விடும் என்ற அச்சத்தாலேயே மயங்கி விழும் வரை மேடையில் பேசும் திறமை கொண்ட மாவை எம்.பி மேடை எறுவதற்கு தயக்கம் காட்டியுள்ளார். இவரின்
பின்னடிப்பால் உசுப்பேத்தி பேசலாம் என்ற ஆசையுடன் காத்திருந்த ஸ்ரீ எம்.பி
மிகவும் கவலையடைந்தார். ஊடகவியலாளர்கள் காதுகளுக்கோ கண்ணிலோ இந்த விடயம்
சென்றால் விளைவு விபரீதமாகிவிடும் என்பதால் இளைஞர்களிடமிருந்து
எச்சரிக்கையுடன் மீண்டவர்கள் ஒருவாறு புதுக்குடியிருப்பு நகரை விட்டு
வெளியேறி முல்லை பிரதான வீதியூடாக வெளியேற முனைந்தனர்.
முல்லை ஆர்ப்பாட்டத்தை அறியாத மாவையும் ஸ்ரீயும்!
அத்தருணத்தில்
முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் காணாமல்போனோர் தொடர்பான
ஆர்ப்பாட்டத்தில் அவர்களின் உறவுகள் கண்ணீருடன் ஈடுபட்டு மகஜர்
கையளிக்கப்பட்டு ஏறக்குறைய நிறையும் தருவாயில் அவ்விடத்தை வாகனத்தில் கடக்க
முயன்ற மாவை எம்.பியும் ஸ்ரீ எம்.பியும் தம்மை மக்களும் அவ்விடத்திலிருந்த
வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், உறுப்பினர் ரவிகரன், மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்தவுடன் வாகனத்தை
நிறுத்தி விட்டு அவ்விடத்தில் இறங்கி 'ஏன் தம்பி எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே. எனக்கு இந்த ஆர்ப்பாட்ட விடயமே தெரியாது" என
கனவு கண்டு எழுந்தவர் போல் கதையுடன் கூடிய வீதி நாடகத்தை அரங்கேற்றி
விட்டு மீண்டும் வாகனத்திலேறி அவசரஅவசரமாக முல்லை மண்ணை விட்டு பறந்து
சென்று விட்டார்.
பல தடவைகள் உதயன்,
வலம்புரி,கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி
ஆகிய பத்திரிகைகளில் காணாமல் போனோரின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்திகள்
வெளியிடப்பட்டுள்ளன என்பதற்கு அப்பத்திரிகைகளின் பக்கங்கள் சான்றாகின்றன.
அவ்வாறிருக்கையில் மாவை.எம்.பிக்கு மட்டும் தெரியாது போனமை
வியப்பளிப்பதுடன் உலகில் பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படும்
இணையதளத்தை தன்னகத்தே வைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஸ்ரீ எம்.பியும் இந்த
விடயத்தை அறிந்திருக்காமலிருப்பதும் காதில பூச்சுற்றும் கோமாளித்தனம் காமடி
செயலே!
உண்மைகள் உறங்குவதில்லை
உண்மையிலேயே
மாவை மற்றும் ஸ்ரீ எம்.பிக்களின் இந்த இரகசிய முல்லை விஜயம் வெறுமனே
இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த சுயநல விஜமாகும். குறிப்பாக
புதுக்குடியிருப்பு கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் விரைவில்
நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
பங்காளிக்கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்ட முன்னைய வேட்பாளர்கள் தற்போது
வௌ;வேறு பணிகளில் ஈடுபடுவதால் அவர்களின் இடத்திற்கு மாற்றிடாக புதியவர்ளை
நியமிக்க வேண்டும் அதற்காக அனைவரையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை
நடத்தவேண்டும் என கோரிக்கையொன்று மாவை எம்.பியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முன்பு அறிவிக்கப்பட்டவர்களுக்கு மாற்றீடாக புதியவர்களை
நியமிக்கமுடியும் என தேர்தல்கள் திணைக்களமும் அறிவித்துள்ளது. இந்நிலையில்
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அதிகமான வேட்பாளர்களை நியமிப்பதன் ஒரு
முதற்கட்ட நடவடிக்கையாகவே இந்த இரகசிய விஜயம் மேற்கொள்ளப்பட்டது என்பதே
யதார்த்தமாகும்.
அத்துடன் இளைஞர் அணியொன்று
உருவாக்கப்பட்டு எதிர்காலத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக அவர்களை
முன்னிறுத்தி ஏனைய பங்காளிக்கட்சிகளை முல்லையிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான
ஒரு செயற்பாடும் இந்த விஜயத்தின் பின்னணியில் உள்ளது. எவ்வாறாயினும்
அதற்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையிலேயே பழம்பெரும் கட்சியான
இலங்கை தமிழரசுக்கட்சியினுள்ளும் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும்
தமிழர்களை முள்ளிவாய்கால் முடிவில் கொன்றொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்விற்காய் வக்காளத்து வாங்கி செயற்பட்ட ஒருவரை எவ்வாறு இணைத்துக்கொள்ள
முடியும். அதேநேரம் அவ்வாறான ஒருவரை தெரியாத நிலையில் ஒரு கட்சியின்
தலைவர் எவ்வாறு அவருடைய ஏற்பாட்டில் நிகழ்ச்சி நிரலிடப்பட்ட ஒரு பயணத்தை
மேற்கொள்ளமுடியும். மேலும் அன்டனி ஜெகநாதன் தனது வீட்டிலாவது குறித்த
கூட்டத்தை நடத்தி இளைஞர் அணியை அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும் என்று
துடிக்குமளவிற்கு ஒரு தலைவர் ஏன் இடமளிக்கவேண்டும்.
இவற்றை
எல்லாம் விட கரைத்துரைப்பற்று பிரதேச சபை தேர்லுக்கு கூட்டமைப்பிலுள்ள
ஏனைய கட்சிகளுக்கு தெரியாது தமிழரசுக் கட்சிக்காரர்களின் கையை ஓங்குவதற்காக
இரகசியமான முறையில் காய்நகர்த்தி செல்லும் ஒரு தலைவராக இருக்கும் மாவை
எம்.பி எவ்வாறு ஜனநாயகம் , அஹிம்சைப் போராட்டம் பற்றி பேச முடியும். அதற்கு
தகுதி உடையவரா? என்பதை அவர் ஒரு தடவை சுயபரிசீலனை செய்து பார்க்க
வேண்டும். இவ்வாறான சின்னப்பிள்ளைத்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்து
பங்காளிக் கட்சிகளை சுலபமாக ஏமாற்றி விட்டாலும் தொடர்ந்தும் மக்களையும்
சிந்தனை மிக்க இளையோர் சமுகத்தையும் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அதனை
ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
தமிழீழ
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பின்னர்,
அவரது கால் தூசுக்கு கூட சமமாகாத ஸ்ரீ எம்.பி, தருமபுரத்தில் புலிகள்
அமைப்பின் முன்னரங்க பண்டை உடைத்துக்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு
ஓடிவந்த போராட்டத்துடன் எத்தகைய தொடர்பும் இல்லாதவர். இன்று
கிளிநொச்சியில் தன்னையொரு பிரபாகரனாக காட்டிக்கொண்டு அரசியல் செய்து
விடுதலைப்போராட்டத்தை சிங்கள இனவாதிகளுக்கு எதிராக பாராளுமன்றில் ஓங்கி
உரைத்து விட்டு இன்று விடுதலைப்போராட்டம் இறுதிக்கட்ட யுத்தத்தில்
வீறுகொண்டு நின்றிருந்த முல்லை மண்ணில் அதனை கொச்சைப்படுத்தும் வகையில்
வெளியிட்டிருக்கும் கருத்துக்களை எவ்வாறு ஜீரணிப்பது.
என்னதான்
நாடகங்களை அரங்கேற்றினாலும் ஈற்றில் மக்களின் கையிலேயே
தீர்ப்பிருக்கின்றது. அதனை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அந்த ஆணை பெற்ற
பிரதிநிதிகள் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்காளிகள்.
அழைப்புக்களை எதிர்பார்க்காது அதில் கலந்துகொள்வதே அதிசிறந்த செயற்பாடு.
அம்மக்களின் செயற்பாடுகளுக்கு நடவடிக்கைகளுக்கு தோளோடு தோள் நிற்பவனே
உண்மையான மக்கள் சேவகன். வீராப்பு பேச்சுக்களால் மீண்டும் ஆணைபெறலாம்
என்பது கனவான் அரசியல்.
'அரசன் அன்று கொல்வான்; : தெய்வம் நின்று கொல்லும்" காலன் பதில் கூறுவான் : பொறுத்திருப்போம்!