வவுனியாவில் கவனயீர்ப்பு நிகழ்ச்சி: 'அரசியல் கைதிகளுக்கு விடுதலை! காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல்!' அரசை வலியுறுத்தி போராட்டம்!!!
இலங்கை நாட்டின் அனைத்துக்குடியின மக்களுக்கும், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும்…
காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல்!'
அரசை வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்பு நிகழ்ச்சி!
பேரன்புடையீர்:
சிறீலங்கா நாடு 67வது சுதந்திர நாளைக்கொண்டாடத்தயாராகி விட்டது. தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப்பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கிறது. ஆயினும் முன்னைய வருடங்களைப்போல அல்லாது, இம்முறை இவ்விடையத்தில் கூடிய கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளினதும் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும், இலங்கையிலுள்ள அனைத்து குடியினங்களாலும் நிராகரிக்கப்பட்டதாகவும் உள்ள ‘பயங்கரவாத தடைச்சட்டம்’நீக்கப்படவில்லை.
சிவில் சமுகத்துக்கும் பொது அமைதிக்கும் ஊறு செய்விக்கும், சவால் விடுவிக்கும் இந்தச்சட்டம் ஒன்றே, இலங்கையில் இன மொழி சமய கலாசார வேறுபாடின்றி, பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கியது. ‘எவ்விடத்திலும் எவ்வேளையிலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்’ என்ற நமட்டுத்துணிச்சலையும் அசட்டு அதிகாரத்தையும் கொடுத்த இக்கொடுஞ்சட்டம், ஊழலை எதிர்த்தவர்கள் மீதும், எதிர்க்கேள்வி கேட்டவர்கள் மீதும், சமுக அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீதும்கூடப்பாய்ந்தது. கொடுமையிலும் கொடுமை, அதிகார வர்க்கத்தின் சிற்றின்பங்களுக்கும் பாலியல் இச்சைகளுக்கும் உடன்பட மறுத்தவர்கள் மீதும் கூடப்பாய்ந்ததுதான்! அது சிங்களம், முஸ்லிம், தமிழ் மக்கள் என்று எத்தகைய வகைப்படுத்தல்களையும் காட்டவில்லை. எல்லா இனங்கள் மீதும் ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எனும் ‘லத்தி’யை வைத்தது! பதம் பார்த்தது! ருசித்தது! மனிதத்தை வேட்டையாடியது!
சட்டத்தைப்பிரயோகித்தவர்கள், தங்களது தனிப்பட்ட வன்மத்தைக்கொட்டித்தீர்க்கவும், பச்சதாபங்களைக்காட்டவும், பகை உணர்வுப்பாராட்டவும் செய்தார்கள். இப்படி வஞ்சிக்கப்பட்ட பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள், தடுப்புக்காவல்களுக்கும் சிறைக்கூடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டார்கள். கொண்டுசெல்லப்பட்டவர்களில் பலர் காணாமல் போகச்செய்யப்பட்டார்கள்.
ஆள்கடத்தல் சம்பவங்கள் இலங்கையில் குடியியல் சமுகங்களுக்கு மோசமான பாதிப்புகளையும், ஆபத்துகளையும் உண்டுபண்ணியுள்ளது. சமுக கட்டமைப்பு முதல் குடும்ப அலகு வரை அனைத்தையும் சிதைத்துச்சின்னாபின்னமாக்கியு ள்ளது. வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், பொருளாதாரம், தொழில், கல்வி, சுகாதாரம், சமுகநிலை எல்லாவற்றிலும் கடும் தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளது. ஆதலால் இவை பாரிய மனித உரிமைகள் மீறல்களாகும்!
நெறிமுறை தவறி நடைபெற்று முடிந்துள்ள போரில், இடம்பெற்றுள்ள அனைத்துக்குற்றங்கள், மீறல்களுக்கு முன்பாகவும், இலங்கையின் அனைத்துக்குடிமக்களும் வெட்கப்பட வேண்டியவர்களாக, கூனிக்குறுகி அவமானப்பட வேண்டியவர்களாக உள்ளனர். வடக்கும் தெற்கும் போரில் இடம்பெற்ற இழப்புகள் வலிகளுக்கு முன்பாக, தோற்றுப்போனவையாகவே உரிமை கொண்டாடிக்கொள்ள முடிந்திருக்கிறது. மனச்சாட்சி உருத்தலின் பிரகாரம் சுயமாகவே முன்வந்து ‘பொறுப்புக்கூறல், பரிகாரநீதி’ வழங்கல் முன்னெடுப்புகளை செய்யாதவரையிலும், கறைகளை போக்கிக்கொள்ளாத வரையிலும், சிறீலங்கா நாட்டின் ‘சுதந்திரநாள் கரிநாளாக’ மழுங்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக சிறீலங்கா, பூகோளப்பந்தில் தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில்,
‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும்.
‘அரசியல் கைதிகள்’ எனும் சொல்ப்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்’என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும். ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும்.
இவ்வாறு இலங்கை மக்களின் நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும் சமகாலப்பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறும், தீர்வளிக்குமாறும் சிறீலங்கா அரசை வலியுறுத்தி, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வினருடன் இணைந்து, வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைக்கொண்டுள்ள “நாங்கள்”இயக்கத்தினர், மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்ச்சியை 03.02.2015 (செவ்வாய் கிழமை) அன்று, வவுனியா நகரசபை மைதானத்தில் நடத்துகிறோம்.
குறித்த கவனயீர்ப்பு நிகழ்ச்சியில், நாடு முழுவதுமுள்ள சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், மதப்பிரமுகர்கள், அருள்தந்தைகள், அருள்சகோதரிகள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக நண்பர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், மாணவர்கள், சமுக ஆர்வலர்கள், மக்கள் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
நிறைந்தளவு நம்பிக்கையுடன்…
செல்வராஜா பிரதாப், தலைமைச்செயல்பாட்டாளர் (யாழ்ப்பாணம் மாவட்டம்) – 0094 7734 77018
கைலைநாதன் அகிலன், தலைமைச்செயல்பாட்டாளர் (கிளிநொச்சி மாவட்டம்) – 0094 7792 36245
நா.கீதபொன்கலன், தலைமைச்செயல்பாட்டாளர் (முல்லைத்தீவு மாவட்டம்) –
கோ.கேதாரன், தலைமைச்செயல்பாட்டாளர் (வவுனியா மாவட்டம்) –
சி.பீட்டர் நிஜாகரன், தலைமைச்செயல்பாட்டாளர் (மன்னார் மாவட்டம்) –
வடமாலை ராஜ்குமார், தலைமைச்செயல்பாட்டாளர் (திருகோணமலை மாவட்டம்) – 0094 7718 58039
பாலசிங்கம் முரளிதரன், தலைமைச்செயல்பாட்டாளர் (மட்டக்களப்பு மாவட்டம்) – 0094 7671 30878