சிங்களத்துடன் சங்கமித்த இரா.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன்! 67ஆவது சுதந்திர தினத்தில் அரங்கேறிய பின்னணி என்ன?
சிங்களத்துடன் சங்கமித்த இரா.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன்! 67ஆவது சுதந்திர தினத்தில் அவசரமாக அரங்கேறிய நாடகத்தின் “பின்னணி என்ன? ”
இலங்கையின்
67ஆவது சுதந்திர தினம் 04 அன்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுரத்தில் அமைந்துள்ள
பாராளுமன்ற மைதானத்தில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்
இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் தற்போதைய ஆட்சி அதிகாரக்கயிற்றை பற்றி
வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பனங்காட்டு நரியான
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உட்பட 2500இற்கும் மேற்பட்ட உள்நாட்டு
வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.
இதுவொரு
புறமிருக்கையில் தமிழ் சிரேஷ்ட அரசியல்வாதியும்,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
இரா.சம்பந்தன் மற்றும் தற்போது அவருடைய ஆஸ்தானந்த சீடராகவிருக்கும்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவர் மட்டும் சுமார்
34வருடங்களுக்கு பின்னர் வடக்கு கிழக்கில் மக்கள் ஆணைபெற்ற தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் சார்பில் புன்னகை ததும்பிய இன்முகத்துடன் தென்னிலங்கைச்
சக்திகளுடன் கைகோர்த்திருந்தனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தேசிய
சுந்திர தின தேசிய வைபவங்களை புறக்கணித்து வந்த
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது இம்முறை அவசரமாக அந்நிகழ்வுகளில்
பங்கேற்றிருப்பதனால் பல்வேறு கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
புதிய
ஆட்சியொன்று ஏற்பட்டிருப்பதால் எமது சமுகத்துக்கு எல்லாம் கிடைத்து
விட்டதாக கருதமுடியுமா? குறிப்பாக இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வொன்றில் அவரசமாக இருவர் மட்டும் பங்கேற்பதற்கான காரணம் என்ன?
இதனால் சாதித்தது என்ன? சாதிக்கப்போவது என்ன? அதேநேரம் சிங்கள தேசம்
பகிரங்கமாக சுதந்திர தின தேசிய வைபவத்தில் பங்கேற்குமாறு தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பை அழைத்ததா? அவ்வாறான அழைப்பொன்று விடுக்கப்பட்டிருந்தால் ஆகக்
குறைந்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பங்காளிக்கட்சிகளின்
தலைவர்களுக்கோ ஏன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கோ
அறிவிக்கப்பட்டதா?
அந்த நிகழ்வில் பங்கு
பற்றுவது தொடர்பாக கூட்டமைப்பினுள் கலந்தாலோசிக்கப்பட்டதா? மேலும்
ஆகக்குறைந்தது வழமையான பாணியில் நாம் பங்கேற்கின்றோம் என்ற விடயத்தையாவது
தொலைபேசி குறுந்தகவலூடாக அனுப்பட்டதா? கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இந்த
வைபவத்தில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கும் முடிவு யாரால் எடுக்கப்பட்டது?
அந்த அனுமதியை வழங்குவதற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான
சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது? என வினாக்கள் நீண்டு கொண்டு
செல்கின்றன.
மறுபுறத்தில் “தேசிய
நல்லிணக்கத்திற்கான நல்லெண்ண வெளிப்பாடு, மக்கள் சமத்துவம் என்பவற்றை
வெளிப்படுத்தவே நாம் இந்நிகழ்வில் பங்கேற்றோம்” என சம்பந்தன் மற்றும்
சுமந்திரன் இதனை நியாயப்படுத்;துவதோடு மட்டுமல்லாது சிரேஷ்ட தலைவர்களுடனும்
ஆராய்ந்து பக்குவமாக முடிவெடுத்தாக கூறுகின்றனர். அத்துடன் சம்பந்தனின்
இராஜதந்திரம் என்று இன்னொருபடி மேலே சென்றும் நியாயப்படுத்தலாம்.
“இனப்பிரச்சினை
தீர்வுக்கான முதற்படி” “தென்னிலங்கை மக்களுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்துவதற்கான ஒரு செயற்பாடு” என்றும் சம்பந்தனும் சுமந்திரனும்
அடுக்கடுக்கான பதில்களை எதிர்காலத்தில் தொடர்ச்சியாக அளிக்கலாம். ஆனால்
அவற்றை தற்போதிருக்கும் அரசியல் சூழமைவுகளைக் கருத்தில் கொள்ளும் போது
ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது என்பது வெளிப்படையான யதார்த்தமாகும்.
இந்நிலையில் கீழே குறிப்பிடப்போகும் சில விடயங்களை தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் தமிழ்
சமுகம் கருத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகவிருக்கின்றது.
அனுமதியளிப்பதற்கு சுமந்திரன் யார்?
தமிழீழ
தேசியத்தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக 2005ஆம்
ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த
காலத்தில் சிங்களத்தின் நயவஞ்சகத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
உலகறியச் செய்த விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்காலில்
2009ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. அதன் பின்னரான காலப்பகுதியில்
அவ்விடத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆணைபெற்ற
பெரும் சக்தியாக உருவெடுத்து நிற்கின்றது.
அவ்வாறிருக்கையில்
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த கையோடு இலங்கைக்கு வருகை தந்திருந்த
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் சிவ்சங்கர் மேனுடன்
இடம்பெற்ற சந்திப்பின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த பல
உறுப்பினர்களின் முகஞ்சுழிப்புக்களுக்கு மத்தியில் இரா.சம்பந்தனால்
முன்னுரைக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட மாதிரி வரைபை
உருவாக்குவதற்கு சட்டத்தரணிகள் மிக அவசியம் என்ற அடிப்படையில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பில் காணப்பட்ட சட்டத்தரணிகளுக்கு மேலதிகமாக சுமந்திரன்,
கனகஈஸ்வரன் போன்றவர்கள் கூட்டமைப்பினரோடு இணைந்து பணியாற்றினர். இந்த
சந்தர்ப்பத்தையும் விடுதலைப்புலிகளின் மௌனிப்பையும் சரியாக கணித்த
அடிப்படையில் பெரடல் சிந்தனைவாதியான சுமந்திரன் கூட்டமைப்பினுடாக தனது
அரசியல் பயணத்தை தொடர்வதற்கு திட்டமிட்டார்.
காலம்
செய்த கோலம் சம்பந்தரின் விசுவாசியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர்
மொழிவளமுள்ளவர், சட்டம் தெரிந்தவர் என்ற சம்பந்தனின் பீடிகைகளுடன்
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமத்தைப் பெற்றார். தொடர்ந்து
சம்பந்தனின் முதுமையை பயன்படுத்தி அவருடைய திருவடியைப்
பற்றிப்பிடித்துக்கொண்டவர் அடுத்த தலைவர் என்ற இலக்கு நோக்கி தனது
செயற்பாடுகளை சுயநலமாக முன்னெடுக்கலானார். இதற்கு அவ்வப்போது சம்பந்தனின்
ஒத்தூதல்களையும் அரவணைப்புக்களையும் பகிரங்கப்படுத்தி வருகின்றார்.
மக்களின் வாக்குகளைப் பெறாது பின்கதவால் வருகை தந்தவருக்கு கூட்டமைப்பின்
தலைவர்கள், உறுப்பினர்கள் 67ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தில்
பங்கேற்பதற்குரிய அனுமதியை வழங்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கின்றது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் ப+ச்சர்க்கரையாகவிருக்கும் இவருக்கு அந்த
அதிகாரத்தை வழங்கியது யார்?
சுமந்திரனைப்
பொறுத்தவரையில் தமிழ் மண்ணில் பிறந்திருந்தாலும் சிங்கள தேசத்தை
கட்டிப்புரண்டே வளர்ந்திருக்கின்றார். அத்துடன் கொழும்பில் இருந்து கொண்டு
வடக்கு கிழக்கிற்குச் சென்று மேட்டுக்குடி அரசியல் செய்யும் அடிப்படை
சிந்தனையையும் தன்னகத்தே இன்றும் கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளையும் உன்னதமிக்க ஆயுதப்போராட்டத்தையும்
அடியுடன் வெறுத்தொதுக்கும் இவர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு
விட்டார்கள் என சிங்கள அரசு அறிவித்த பின்னரே தனக்கு அரசியலில் ஈடுபடும்
சிந்தனை உதித்ததாகவும் கூறியிருக்கின்றார். அது மட்டுமன்றி தற்போது தான்
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முத்திரையை மாற்றி மக்கள்
பிரதிநிதி அதுவும் தமிழீழ தேசிய தலைவர் பிறந்த மண்ணின் மக்கள் பிரதிநிதி
என்பதை காட்டுவதற்காக வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் உட்பட சில சீடர்களை
தன்வசப்படுத்தி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகளை
கொள்ளையடிக்கும் திட்டத்தை செவ்வனே தீட்டிவருகின்றார்.
இத்தகைய
ஒருவர் எவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தீர்மானத்தை எடுக்க
முடியும். அதேநேரம் ஏனைய உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்க முடியும். தனது
சுயநலன்களுக்காகவும் அதிசொகுசு வாழ்க்கைக்காகவும் சிங்களத்தை அரவணைத்து
போகத்துடிக்கும் இவருடைய நெறியாட்கையில் தான் சம்பந்தன் சென்றாரா? என்ற
ஐயப்பாடும் எழுகின்றது.
கூட்டமைப்பின்
பங்காளிக்கட்சிகள் என்பதை தாண்டி அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை
தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
மாவை.சேனாதிராஜாவுக்கும் அதில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட
உறுப்பினர்களுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரே
அனுமதியளிக்கின்றார் என்றால் அப்பழம்பெரும் கட்சியின் நிலைமை என்ன? அதில்
முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கின்றது? ஜனநாயகத்தின் வழி வந்த
கட்சி என்று அடிக்கடி கூறும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களும் அதன் தீவிர
ஆதரவாளர்களும் யார் முடிவெடுக்கின்றார் யாருடைய கருத்து கேட்கப்பட்டது என
கட்சிக்குள் காணப்படும் ஜனநாயகத்தை ஒரு தடவையேனும் சிந்தித்து பாருங்கள்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவல்ல?
இரா.சம்பந்தன்
மற்றும் சுமந்திரன் சுதந்திர தின வைபவத்தில் பங்கு பற்றியமையானது
ஒட்டுமொத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவல்ல. ஏனெனில் சுதந்திர
தினத்தில் பங்குபற்றுமாறு சிங்கள தேசத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தால்
அச்சந்தர்ப்பதில் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதனைத்
தெரியப்படுத்தி அவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஆகக்
குறைந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின்
தலைவர்களுடனாவது கலந்துரையாடப்பட்டு அது குறித்த இறுதி முடிவு
அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை விடுத்து எடுத்த எடுப்பில்
பட்டுவேட்டி சால்வையுடன் சுதந்திர தின வைபவத்தில் எழுந்தருளியிருப்பதால்
அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
முடிவாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
அதேவேளை
கடந்த காலங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினுள் பல்வேறு விடயங்களில்
சமந்தன், சுமந்திரன் இணையானது ‘தனிப்பட்டு’ செய்பட்டிருக்கின்ற
சந்தப்பங்கள் பலவுண்டு. ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக ‘மௌன விரதத்தை’
கடைப்பிடித்தவண்ணமிருந்த இலங்கை தமிழரசுக்கட்சின் தலைவர் உட்பட
பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனமாக இருந்தாலும் அச்
செயற்பாடானது சம்பந்தன் சுமந்திரன் ஆகியோருடன் பங்கேற்றுதலையோ அவர்களின்
நியாயப்படுத்தும் கருத்துக்களையோ ஏற்றுள்ளார்கள் எனக் கூறிவிடமுடியாது.
காரணம் அவர்கள் திரைமறைவில் இச்செயற்பாட்டால் கடுமையான மன சஞ்சலத்துடன்
காணப்படுகின்றார்கள். சிலர் வருத்தத்துடன் தமது கருத்துக்களை
தெரிவிக்கின்றனர்.
ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்கள்?
நாட்டில்
ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய
ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை, முந்தைய ஆட்சிபோல் அல்லாமல் இந்த ஆண்டின்
சுதந்திர தின வைபவம், இராணுவ வெற்றியை மையப்படுத்தவில்லை, அப்படியான
சூழலில் இந்த நிகழ்வில் பங்குபெறுவது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும்
ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்பதால் தான் இவ்விழாவில் பங்கேற்பது
குறித்து கவனமாக சிந்தித்த பிறகு முடிவெடுத்தேன். என தனது பங்கேற்றலை
நியாயப்படுத்தும் சம்பந்தன் கூட்டமைப்புக்குள்ளேயே இது குறித்து
மாற்றுக்கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக்கொள்கின்றபோதும் இது தொடர்பில்
மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இலங்கையில் நிரந்தரமான
சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும்
சமத்துவம் ஏற்பட வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1956இல்
ஆரம்பித்த தமிழ் மக்களின் அஹிம்சை வழியிலான போராட்டம் முதல் மூன்ற தசாப்த
காலமாக சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிடப்பட்ட ஆயுத வன்முறை மூலம்
ஒடுக்கப்பட்ட போது இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தது. இருப்பினும்
உள்நாட்டு வெளிநாட்டு சதிவலையுடன் சிங்களம் மீண்டும் ஆயுதப்போட்டத்தை
வீழ்த்தி தமிழ் மக்களை அடிமைகளாக்குவதூடாக பேசா மடந்தைகளாக்கிவிட
முடியுமென்பதற்காக நிகழ்ச்சிநிரலிடப்பட்ட செயற்பாடுகளால் 2009இல் ஆயுதப்
போராட்டம் முள்ளவாய்க்காலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரப் போராட்டம் தொடர்கிறது. அவ்வாறான
நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடே தமிழ்
மக்கள் சார்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு விடயமாக கருதமுடியுமே தவிர ஒருவர்
இருவரின் சுயவிருப்புக்களை ஒருபோதும் அவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியாது.
மேலும்
சம்பந்தன் தனது பங்குபற்றலுக்கு கூறியிருக்கும் விடயங்கள் அவர் ஒரு மூத்த
அரசியல்வதி என்ற தன்னிலை மறந்து கடமைக்காக அளிக்கப்பட்டிருக்கும்
பதில்களாகவே கருதவேண்டியுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என அமெரிக்கா இந்திய
உட்பட மேற்குலகம் விரும்பியது. சிறுபான்மை சமூகங்களின் தலைமைகளை அந்த
முடிவுக்குள் உள்வாங்குவதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு எதிராக களமிறங்கிய
மைத்திரிபாவை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தது. வடக்கு கிழக்கிலிருந்து
எந்தவொரு இராணுவ வீரரும் அகற்றப்படமாட்டார்,
இறுதிக்கட்ட
யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமில்லை என
தெட்டத்தெளிவாக பகிரங்கமாக மைத்திரிபால அறிவித்த பின்னரும் வடக்கு
கிழக்கில் களமிறங்கி பிரசாரம் செய்யுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்
தலைமை மக்கள் பிரதிநிதிகளுக்கு அழுத்தங்களிக்கப்படவே அதனை அவர்கள் செவ்வனே
மேற்கொண்டார்கள். ஈற்றில் வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்
சமுகத்தின் வாக்குகளால் ஆட்சியை கைப்பற்றி அரியாசனத்தில் ஏறினார்
மைத்திரிபால.
அதன் பின்னர் தமிழ் மக்களின்
அடிப்படைப்பிரச்சினைகள் உள்வாங்கப்படாத அவரின் நூறுநாள் வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டது. ஏறக்குறைய தற்போது இருபத்தைந்துக்கும் அதிகமான நாட்கள்
கடந்து விட்ட நிலையில் தற்போது வரை தமிழ் மக்களுக்காக அவர்களுடைய
தாயகத்தில் நடைபெற்ற விடயங்கள் என்னவென்று பார்த்தால் எவையுமேயில்லை என்றே
கூறவேண்டியிருகின்றது. வெறுமனே ஆளுநர், பிரதம செயலாளர் மாற்றத்தால் தமிழ்
மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் தீர்த்துவிடப்போவதில்லை.
தமிழ்
மக்களைப் பொறுத்தவரையில் தமது சொந்த நிலங்களில் மீளவும் குடியேறவேண்டும்.
கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீளக்கையளிக்கப்படவேண்டும். இரணுவம் நிலைகொண்ட
பகுதிகளில் சுதந்திரமாக நடமாடமுடியாதநிலை. காணமல் போன உறவுகளுக்கான பதில்
கிடைக்க வேண்டும். சிறைகளில் வாடும் உறவுகளை விடுதலை செய்யவேண்டும். அன்றாட
வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தக்கூடியவாறான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.
வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் இவற்றையே
எதிர்பார்த்திருக்கின்றார்கள். இந்தப்பிரச்சினைகளுக்கு ஆகக்குறைந்த
தீர்வுகள் வழங்கப்படாது எங்கோ உச்சத்திலிருக்கும் இன நல்லிணக்கம், மக்கள்
சமத்துவம் தென்னிலங்கை மக்களுக்கான செய்தி என்பவற்றால் ஏற்படப்போகும்
நன்மைகள் தான் என்ன?
இரண்டாவதாக ரணமாக தமது
மனங்களில் சுமந்துகொண்டிருக்கும் யுத்த வடுக்களையும் இறுதிக்கட்ட
கொடுமைகளையும் மறப்பதற்குரிய மருந்தாக கூட்டமைப்பு ஏற்கனவே
கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு சர்வதேச ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு
அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் சர்வதேச விசாரணையொன்றை
நடத்துவதற்கு தற்போது அரியாசனம் ஏறிய சிங்கள அரசும் தயாரில்லை. அவ்வாறான
விசாரணையொன்றுக்கு இடமளித்தால் தென்னிலங்கை மக்கள் செல்வாக்கை
முற்றுமுழுதாக இழக்கவேண்டியநிலை ஏற்படும் என்பதே காரணம். ஆகவே தற்போதை
நல்லாட்சி நோக்கிய சிங்கள அரசும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை.
உள்நாட்டில் சுயாதீனமான விசாரணையொன்றை நடத்தப்போவதுமில்லை. எனவே யுத்த
வடுக்களை சுமக்கும் உறவுகளுக்கு எந்தவிதமான ஆறுதலையும் பொறுப்புக்கூறலை
அடியோடு நிராகரிக்கும் புதிய சிங்கள அரசும் வழங்கப்போவதில்லை என்பது
திண்ணம்.
இவ்வாறிருக்கையில் சிங்களதேசம்
கொண்டாடும் சுதந்திரதினத்தில் நாம் பங்கேற்பது எந்த அடிப்படையில்
நியாமாகும். மேலும் சுதந்திரம் என்ற விடயத்தை கருத்தில்
எடுத்துப்பார்ப்போமானால் நம்முடைய நாட்டை நாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை
உணர்ச்சிதான் அது. நாம் எவருக்கும் அடிமையல்லர். நம்மை யாரம் ஆண்டு அடக்கி
ஆதிக்கம் செலுத்த முடியாது. விடவும் மாட்டோம்.நாமே நமக்கு எஜமானர்கள். நாம்
யாருக்கும் குடிகள் அல்லர் எனக் கூறமுடியும்.
அதேநேரம்
சுதந்திரம் என்பது வெறும் அரசியல் இலட்சியமோ புதிய அரசியல் அமைப்போ
அதற்கும் மேலான பொருளாதாரத் திட்டமோ கூட அல்ல! சுதந்திரம் என்பது மனித
மனத்தையும் சிந்தனையையும் பொறுத்ததாக அமைய வேண்டும். சிந்தனையில் குறுகிய
மனப் பான்மை இடம் பெற்று விடக் கூடுமானால், மனதில் பகையும் வெறுப்பும்
மிஞ்சிவிடக் கூடுமானால், அங்கே சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விடும்;.
அந்த வகையில் சிங்களம் தனது சுயநலத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கையில்
நாம் எவ்வாறு சுந்திரம் பெற்ற மக்கள் கூட்டமாக கருதப்படுவோம்.
முன்னதாக
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்ற மற்றொரு
இரத்தம் தோய்ந்த கைகளுடன் கூட்டமைப்பின் தலைமையின் சிந்தனை கைகோர்த்தது.
அதன் பின்னர் பாராளுமன்றில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை விமர்சித்த உரை,
தொடர்ந்து 2012இல் யாழில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின
மேடையில் சிங்ககொடியை பற்றியமை அதனால் எழுந்த சர்ச்சைக்கு தடுமாறிய
தடம்புரண்டமை என பலவரலாறுகள் சம்பந்தனுக்கும் உண்டு. எது எவ்வாறாயினும்
1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிட்ட சம்பந்தன் தமிழீழக்
கோரிக்கையினை முன்வைத்தே மக்கள் ஆணைகேட்டவர் என்பதுடன் இறுதியாக நடைபெற்ற
வடக்கு மாகாண தேர்தலிலும் உயிருள்ள புலிகளை விடவும் இறந்த புலிகளின்
மகிமையை உணர்ந்து அதற்கேற்றவாறு காய்நகர்த்தும் உரைகளை முதல்வருடன் இணைந்து
கொண்டு சென்றிருந்தார் என்பதை ஒருபோதும் மறுதலிக்கமுடியாது.
தடமாறிய சம்பந்தன்
1972ஆம்
ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டபோது இலங்கை சுதந்திரம்
பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்
எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும்
பங்குபற்றுவதில்லைஅந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக்
கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது
தமிழர்விடுதலைக் கூட்டணியில் முக்கிய உறுப்பினராக இருந்த சம்பந்தன்
இன்றுவரை மறந்திருப்பதற்கான வாய்ப்பில்லை. அத்துடன் 1978ஆம் ஆண்டு
ஜே.ஆர்.ஜெயவர்த்தன இரண்டாவது குடியரசு யப்பை உருவாக்கிய போது எஞ்சியிருந்த
அற்பசொற்ப சலுகைகளும் இல்லாது போய்விட்டது என தீர்மானமெடுத்த
தமிழர்விடுதலைக் கூட்டணி குறித்த சுதந்திர தின நிராகரிப்பு தீர்மானத்தை
மேலும் வலுவாக்கியிருந்தது.
அதன் பின்னர்
தாயகத்தில் தமிழர்களுக்கு சிங்களம் நடாத்திய வெறியாட்டங்களையும்
அக்கிரமங்களையும் கருத்தில் கொண்டு சுதந்திர தின வைபவத்தில்
பங்குபற்றியிருக்கிவில்லை. 2009இல் சிங்களத்தில் இனப்படுகொலையின் பின்னர்
அதன் கண்ணீர் கன்னத்தில் இன்னும் காய்ந்திருக்கும் நிலையில் தற்போது
சம்பந்தனும் சுமந்திரனும் சுதந்திரக்காற்றை தாம் சுவாசிக்கின்றோம் என்பதை
சிங்களத்திற்கு சொல்லாமல் சொல்லிவந்திருக்கின்றார்கள். எமது மறவர்களும்
மக்களும் சிந்திய குருதியும் தாங்கிய வலிகளும் இவ்வாறு சிங்களத்தின்
காலடியில் விழுவதற்காகவா? தேசிய சிந்தனையிலிருந்து விலகி சுயநிர்ணயத்தை
மறந்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று மனப்பாடம் செய்த குழந்தைபோல்
கூறிக்கொண்டிருக்கும் சம்பந்தன் இன்று ஒட்டுமொத்த தமிழர்களையும்
சிங்களத்தின் காலடிக்கே கொண்டு சென்று விட்டார்.
நெஞ்சு
பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின்
கவிவரிகள் நினைவுக்கு வரும் அதேசந்தர்ப்பத்தில் ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு
தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்காக அடிமைகளை கட்டிவைத்து எரித்து
அந்த வெளிச்சத்தில் நடனத்தை இரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது.
கண்முன்னே
எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் சிங்களத்தின்
வஞ்சகத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு
நடனத்தை இரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய
முடியும் என்று கூறப்போகிறீர்களா?
நன்றி: Puli Urumudhu
நன்றி: Puli Urumudhu