அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல்
போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, நாளை
(08.02.2015 அன்று) முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் (கச்சேரி) முன்பாக
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள்
குழுவின் தலைவர் பாலசிங்கம் நவரட்ணம் அவர்கள் அறியத்தந்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில்,
‘சிறீலங்கா
அரச படைகளினாலும், அரசின் கைக்கூலிகளினாலும் கட்டாயப்படுத்தப்பட்டு
கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் அரசை
பொறுப்புக்கூறுமாறு வலியுறுத்தியும், எத்தகைய நீதி விசாரணைகளும் இன்றி
தடுப்புக்காவல்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும்
விரைவாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு
போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
மன்னார் - வவுனியா
மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்களினதும், வடக்கு கிழக்கில் செயல்பாட்டு
வலையமைக்கொண்டுள்ள மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய வடக்கு
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் “நாங்கள்” இயக்கத்தினரது பங்களிப்போடும்,
அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள், காணாமல்
போகச்செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்து, நாளை காலை
10.00 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
குறித்த
கவனயீர்ப்பு நிகழ்ச்சியில், அனைத்து சிவில் சமுக, மனித உரிமைவாதிகள்,
அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள்,
காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், கல்வியாளர்கள்,
ஊடகவியலாளர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்,
படைப்பாளிகள், கலைஞர்கள், உயர்கல்வி மாணவர்கள், சமுக ஆர்வலர்கள், மக்கள்
நலன் விரும்பிகள், அரச வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும்,
முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பாலசிங்கம் நவரட்ணம் அவர்கள் தெரிவித்தார்.