இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள சுதந்திர
சதுக்கத்தில் நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் பதவிப் பிரமாணம்
செய்தார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.முன்னதாக, யார் மனமும் புண்படாத வகையில் தனது வெற்றியை கொண்டாட வேண்டுமென்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று காலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவந்த நிலையில், தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியா, மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதன் பின்னர் பேசிய மைத்திரிபால சிறிசேன,'எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உள்ளிட்ட இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பொதுமக்களிடமும் கேட்கிறேன், இந்த வெற்றியின் உண்மையான அர்த்தம், சமாதானமான முறையில் செயல்படுவதுதான். ஒருவருக்கொருவர் மனரீதியில் வேதனை தருமாறு நடந்துகொள்ள வேண்டாம். இந்த வெற்றியை நாட்டில் உள்ள அனைவரும் அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். யாருடைய மனமும் புண்படுமாறு நடந்துகொள்ள வேண்டாம். இந்த வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டுமென நான் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.