தமிழ் தேசிய சபையை (Tamil National Forum) உருவாக்குமாறு வடமாகாண பிரஜைகள் குழுக்கள் மன்னார் ஆண்டகையிடம் வேண்டுகோள்.

மன்னாரில் அமைந்துள்ள ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்தில், கடந்த 09.12.2014 அன்று சந்தித்து பிரஜைகள் குழுக்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. 

தமிழ் மக்களின் தேவைகளிலும் அபிலாசைகளிலுமே நீதிக்கும் சமத்துவத்துக்குமான அரசியல் தங்கியுள்ள நிலையில், அவர்கள் ஆணை வழங்கிய தலைமைகள் கூட்டுப்பொறுப்புகளில் தவறிழைத்துள்ளதையும், இத்தகைய தலைமைகள் மீது நம்பிக்கையீனங்களும், அரசியல் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியையும் சுட்டிக்காட்டியுள்ள பிரஜைகள் குழுக்கள், பொருளாதார சமுக மேம்பாட்டில் மக்கள் நலிவுற்றுள்ளமை குறித்தும் ஆண்டகையிடம் கவலை தெரிவித்துள்ளனர்.  

தமிழ் மக்களின் வாழ்வுரிமை, மரபுரிமை, அரசியல் உரிமை விவகாரங்களில் கரிசனை கொண்டு “தமிழ் தேசிய சபையை (Tamil National Forum-TNF)” உருவாக்குவதற்கு முன்னைய நாட்களில் ஆண்டகை எடுத்த முன்னாயத்த முயற்சிகளுக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ள பிரஜைகள் குழுக்கள், 

இன்னும் கூடியளவு கவனமும் வேகமும் கொண்டு, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், தென்னிலங்கை மற்றும் மலையகப்பகுதிகளிலும் வசிக்கும் தமிழ் மக்களையும், தமிழகம் இந்தியா மலேசியா சிங்கப்பூர் மொரீஸியஸ் உட்பட உலகெல்லாம் பரந்துபட்டு வாழும் தமிழ்  மக்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய சபையை உருவாக்குமாறும் வணக்கத்துக்குரிய ராயப்பு யோசப் ஆண்டகையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 





வடக்கு மாகாணத்தில் சிவில் சமுக மனித உரிமை மேம்பாடுகளுக்காக வேலை செய்யும் ஏனைய அமைப்புகளையும் இனம் கண்டு, அவற்றுக்கென பொதுஆலோசனை மையம் ஒன்றை நிறுவி குழுக்களுக்கிடையில் பரஸ்பர உறவு, நம்பகத்தன்மை, புரிந்துணர்வை கட்டியெழுப்பி அவற்றை பலப்படுத்தி இணையக்கட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பிலும், சிவில் சமுக மனித உரிமை விடையங்களில் பங்குபற்றுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், ஆபத்துகள், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகள், அதற்கான பரிந்துரைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா.செபமாலை அடிகள், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி.தேவராசா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் பா.நவரட்ணம் ஆகியோரின் தலைமையில் பிரஜைகள் குழுக்களின் மட்டுப்படுத்தப்பட்ட செயல்குழு உறுப்பினர்கள் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.