சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில அருமையான வழிகள்!!!

நம் உடலில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு முக்கிய செயலாற்றி வருகிறது. அதில் ஒன்று பழுதாகி விட்டாலும், நம் உடல் செயலாற்றுவதில் சிரமத்தை காணும். இப்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு பங்கு இருந்தாலும், சில முக்கிய உறுப்புகள் முக்கியமான செயல்களை புரிந்து வருகிறது. அவை பழுது பட்டால் உயிருக்கே கூட ஆபாத்தாய் முடியும். இதயம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் மற்றொரு அதிமுக்கியமான உறுப்பே சிறுநீரகம்.
பொதுவாக மனிதனுக்கு இரண்டு சிறுநீரகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. உடலில் உள்ள நச்சுக்களைப் பிரித்து அதனை சிறுநீராக வெளியே கழிக்கும் முக்கிய வேலையை தான் சிறுநீரகம் பார்த்துக் கொள்கிறது. ஒரு சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்றாலும் கூட மற்றொரு சிறுநீரகத்தை வைத்து வாழலாம். தன் செயல்களை ஆற்றிட ஒரு சிறுநீரகமே போதுமானது. ஆனாலும் கூட அதனை ஒழுங்காக பராமரிக்க வேண்டியது நம் கடமையாகும். இல்லையென்றால் பலவித உடல சுகவீனத்திற்கு ஆளாகி விடுவோம். ஏன், உயிரே கூட போய் விடும் இடர்பாடு உள்ளது.
சரி சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தண்ணீர் குடிக்கவும்

அளவுக்கு அதிகமான தண்ணீரை குடியுங்கள், தண்ணீரை மட்டுமே குடியுங்கள்! 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்ற கணக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு நாளைக்கும் குடித்து விடுங்கள். இந்த 2 லிட்டர் என்பது சராசரியான உடல் எடையை வைத்து கூறப்பட்ட அளவே.

பழங்களும் காய்கறிகளும்

இவைகளில் அதிகமான நீர்ச்சத்து உள்ளதால், நீங்கள் உண்ண வேண்டிய உணவுப் பட்டியலில் இது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. சில மருத்துவ வல்லுனர்கள், நச்சுத்தன்மையை நீக்கும் செயல்முறையான சிறுநீரக சுத்தப்படுத்துதலை பரிந்துரைக்கின்றனர். அதன்படி, காய்கறிகள் மற்றும் பழச்சாறுகளை மட்டும் குடித்து ஒருவர் விரத முறையை கடைப்பிடிக்க வேண்டும். இதனை அவரின் தாக்குப்பிடிக்கும் திறனை வைத்து 3-5 வரை தொடர வேண்டும். நச்சுத்தன்மையை நீக்கும் திட்டம் திராட்சை பழச்சாறு, கிவி, எலுமிச்சை, கிரான்பெர்ரி பழச்சாறு போன்ற க்ளென்சிங் பழச்சாறுகள் மற்றும் மூலிகை சிகிச்சைகளை கொண்டிருக்கும்.

எடை மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்பாட்டுடன் வைத்தல்

உடல் எடை மற்றும் இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உங்கள் கிட்னிக்கு நீங்கள் பெரிய நன்மையை அளிக்கிறீர்கள். உடல் பருமன் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவைகள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபாத்தாய் அமையும். இதனால் சரி செய்ய முடியாத அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.



புகைப்பழக்கத்தை கைவிடவும்

இதய குழலிய மற்றும் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
 

உடற்பயிற்சி

உங்கள் தினசரி வேளைகளில் உடற்பயிற்சியும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை. மாறாக, இரத்தத்தில் உள்ள உங்கள் சர்க்கரையின் அளவுகள் மற்றும் இரத்தக் கொதிப்பின் அளவை சீராக வைத்திருக்கவும் இது உதவும்.
  

பார்ஸ்லி தண்ணீர்

சிறுநீரக கற்கள் இருந்தால் தினமும் இரண்டு முறை பார்ஸ்லி தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் கொஞ்சம் பார்ஸ்லியை (8-10 தண்டுகள்) எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அலசுங்கள். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, 2-3 கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் லேசான பச்சை நிறத்திற்கு மாறும். அதனை மூடி விட்டு, தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு கப் பார்ஸ்லி நீரை குடியுங்கள். சிறுநீரகத்திற்கு பயனை தரும் மற்றொரு உணவாக இருப்பது அஸ்பாரகஸ்.
 
 

குறைவான உப்பு அவசியம்

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு முன்னெச்சரிக்கை - குறைந்த அளவிலான உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது. அதற்கு முக்கிய காரணம் இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். சோடியம் குறைவாக உள்ள உணவு இரத்த கொதிப்பை குறைப்பதால், அது உங்கள் இதயத்திற்கும் நல்லது. மேலும் மூட்டுக்களில் நீர் கோர்க்கும் பிரச்சனைகளும் இருக்காது.
 

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி

10 நிமிட சூரிய ஒளி உங்கள் கிட்னிக்கு நல்லதென்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சூரிய ஒளிகள் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால் உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் அளவு சீராக இருக்கும். இது சிறுநீரகங்களுக்கு உதவியாக இருக்கும். மன அழுத்தம் சிறுநீரகங்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் ஆரோக்கியமான சிறுநீரகம் வேண்டுமானால் மன அமைதியும் முக்கியம்.
 
 
 
 
                                                  நன்றி:போல்ட் ஸ்கை