ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா

“எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி, இப்படி ஒரு மாஸ் திரைப்படம்  போல நகரும் கதையில் ராஜபக்ஸ, சந்திரிகா, மைத்திரி கதாபாத்திரங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்கள், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பிறகு“பாலைவன நரி” என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறீலங்காவின் மிகச்சிறந்த இராஜதந்திரியை கவனிக்க மறந்து போய்விட்டார்கள். 

மகிந்த - மைத்திரி அதையும் தாண்டிய, இரண்டாம் யுத்தம் ஒன்று உள்ளது. அந்த இரண்டாம் யுத்தத்தில் யார் யாரெல்லாம் பங்குபற்றுவார்கள். அந்த யுத்தத்தின் முன்னால் உள்ள சவால்கள், ஆபத்துகள் என்பன பற்றியெல்லாம் அலசி ஆராய்வதே இந்தப்பத்தியின் நோக்கம்! - அ.ஈழம் சேகுவேரா

“காலம் காலமாக ஆட்சி பீடமேறுகின்ற எந்த சிங்களத்தலைமைகளும் தமிழர்களுக்கான தீர்வை தந்துவிடப்போவதில்லை!” - மேதகு வே.பிரபாகரன்

“தனிச்சிங்கள பௌத்தம்” எனும் நாற்றம் வீசும் சாக்கடைக்குள் அமிழ்த்தப்பட்ட தமிழ் மக்கள், சுயமரியாதைச்சமுகமாக மேலெழுந்து வருவதற்கு சுமார் அறுபது வருட காலத்துக்கும் மேலாக நடத்திய வாழ்வுரிமை போராட்டத்தின் நியாயத்தையும், இனியும் முன்கொண்டு செல்லப்படவேண்டிய அந்த உரிமைப்போராட்டத்தின் அவசியத்தையும் உணர்த்தும் அநுபவமொழி இது.  

இலங்கைத்தீவில் ஏறத்தாள முப்பது வருடங்களாக எல்லாவகையான சாத்வீக போராட்டங்களை நடத்தியும் அந்தப்போராட்டங்கள், “தனிச்சிங்கள பௌத்தம்” எனும் மேலாதிக்க சிந்தனையை துணிக்கை அளவு தானும் அசைத்து வைக்கவில்லை. முடிவில் இயலாமை ஆற்றாமை வெளிப்பட்டு சோபை இழந்து அவமானத்தின் சாட்சிகளாக தமிழர்கள் கூனிக்குறுகி வெறிச்சோடிக்கிடந்தபோது, அதே இயலாமை ஆற்றாமையால் உந்தப்பட்டு இறுதி முயற்சியாக எழுச்சி பெற்ற ஆயுதப்போராட்டத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இந்த அநுபவமொழியை உரைத்திருந்தாலும், இலங்கையின் எல்லாக்கால ஆட்சி சூழல்களுக்கும் பொருந்திவரும் தப்பாத காலக்கணிப்பு அது.

விடுதலை விற்பனைக்கல்ல!

இந்த காலக்கணிப்பு, இன்றுள்ள இனிவரவுள்ள அரசியல் தலைமைகளுக்கு இன்னும் பல உண்மைகளை எத்தகைய ஒளிவுமறைவுகளும் இன்றி நேரடியாகவே நெற்றிப்பொட்டில் அரைகிறது. “விடுதலை என்பது: எவரும் எவரிடமும் கேட்டுப்பெறுவதல்ல, அது அவரவர் தாமாகவே எடுத்துக்கொள்வது” என்பதும், “விடுதலை விற்பனைக்கல்ல” என்பதுமே அந்த மிகப்பெரும் உண்மைகளாகும். அதாவது,“பெறுவதற்கு அது பிச்சையுமல்ல, கொடுப்பதற்கு அது பண்டமுமல்ல” என்பதே இதன் தூய்மையான விளக்கமாகும். இவற்றையும் தாண்டிய ஒரு கவனிப்பையும் இந்த காலக்கணிப்பு நம் எல்லோருக்கும் சுட்டுகிறது. “இலங்கையில் ஆட்சி அதிகார மாற்றம் அல்ல, தலைமைகளுக்கு மனமாற்றம் நிகழ வேண்டும்” என்பதே அதுவாகும். 

ஆட்சி பீடமேறுகின்ற சிங்களத்தலைமைகள் தமக்குள் புரையோடிப்போயுள்ள “தனிச்சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையை” களையாத வரையிலும், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் ஆடைகள் களையப்பட்டு அவர்களின் அம்மணம் உறுத்திக்கொண்டேயிருக்கும். 

எனவே “தனிச்சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையை” களைந்து விட்ட ஒரு பொது எதிரணியா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியா? இம்முறை மகிந்த ராஜபக்ஸ அரசை எதிர்த்து 2015ம் வருடம் ஜனாதிபதி தேர்தலை சந்திக்கிறது? தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள் மிகமுக்கியமாக இந்தக்கேள்வியை எழுப்புவது தவிர்க்க முடியாததொன்றாகிறது. 

ஏனெனில் இதுவரை காலமும் இடம்பெற்ற தேர்தல் கூட்டுகளை விடவும் இம்முறை,  கலப்படம் அற்ற சிங்கள தேசியம் பேசுகின்ற கடும் போக்காளர்கள் ஓரணியில் சேர்ந்திருக்கிறார்கள். “தமிழர்களுக்கு சுயாட்சி அதிகார அலகை வழங்கி நாட்டை துண்டாடி விடக்கூடாது” என்று, தட்டித்தட்டிப்பானை செய்வதுபோல சதா வன்மம் வளர்த்துக்கொண்டிருப்பவர்களின் கூட்டே அது. 

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் இந்தப்பேரினவாதிகள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப்போன்றே வைராக்கியம் கொண்ட மகிந்த ராஜபக்ஸவுடன் கூட்டுவைத்துவிட்டு தாம் முன்வைத்த சிலபல கோரிக்கைகளை மகிந்த ராஜபக்ஸ நிறைவேற்றவில்லை அன்றி, தம்மை முன்னிலைப்படுத்தி கௌரவிக்கவில்லை என்றானபோது, அதற்காக அதிருப்தியடைந்துள்ளனரே தவிர, முறுக்கேறிப்போயிருக்கும் அவர்களின் “தனிச்சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில்” எவ்வித பழுதும், குறைச்சலும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளாமல் வாக்களிப்பில் ஆர்வம் காட்ட முடியாது.  

இலங்கை என்று பேச்செடுத்தாலே, அங்கு இலங்கைத்தமிழர் இனப்பிரச்சினையே முதன்மை பெறுகின்றது. நீறு பூத்த நெருப்புபோல தகித்துக்கொண்டிருக்கும் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில், ஆழ்ந்த அநுபவங்களை கொண்டுள்ள பொது எதிரணியின் இரு முக்கிய துருவங்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் “அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு” குறித்து தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தவே இன்று தயக்கம் காட்டுகின்றனர். இவர்கள் இருவரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இலங்கைத்தமிழர் இனப்பிரச்சினையானது பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பாக இருந்ததால் கருமையான பயங்கரமான மோசமான விளைவுகள் மற்றும் அநுபவங்களை கொண்டுள்ள போதிலும் கூட, இருவருக்கும் அரசியல் தீர்வு அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதற்கு மனம் ஒப்பவில்லை. ஏன்? எதற்கு?   

“யார் ஆகப்பெரிய இனவாதி அல்லது
யார் சிங்கள மக்களின் உண்மையான பாதுகாவலன் என்பதை
நிரூபிப்பதற்கான ஒரு பிரசார களமாகவே ஜனாதிபதி தேர்தல் களம் அமையப்போகிறது.” - நிலாந்தன் (பத்தி எழுதுநர்)

நிலாந்தன் அவர்கள் கூறியதுபோல இம்முறை மட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலிலும் “யார் சிங்கள மக்களின் மெய்யான பாதுகாவலன்”என்பதை சிங்களத்தலைமைகள் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக இலங்கையின் தேசிய இனமாகிய தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யாத, அவர்களை ஒரு துரும்பாகக்கூட கருதாத தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடவும், வலிந்து மேடைகள் போட்டு இனவாதம் பேசிப்பேசி சிங்கள மக்களை குளிர்வித்து தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்தவும் மேலாண்மையைக்கொடுக்கின்றது. 

இந்த மேலாண்மைக்கான ஆதாரம்(ஊட்டம்) எங்கிருந்து கிடைக்கிறது என்றால், “தனிச்சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில்” இருந்து வழங்கப்படுகின்றது. அது கழுவிக்கொண்டு பாய்ந்து ஓடாத நீர் சுரந்துகொண்டிருக்கும் ஒரு தேங்கிய குட்டை. அந்த குட்டையிலிருந்தே ஏற்றம் பாய்ச்சப்படுகின்றது. 

நானும் சிங்கள மக்களின் மெய்யான பாதுகாவலன்! என்று நிரூபிக்கும் ஒரு முயற்சியில் அமைந்த சறுக்கலே 2005ம் வருட ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியாகும். 

இலங்கையின் 17வது பிரதமராக (2001-2004) அவர் பதவி வகித்தபோது சர்வதேச மத்தியஸ்தத்துடன் 2002ம் வருடம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் அவரால் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து அவரின் விட்டுக்கொடுப்புகள், இசைந்துபோதல்கள், மசிந்துபோதல்களை காரணம் காட்டி, 

“நாட்டை காட்டிக்கொடுத்து விட்டார். புலிகளுக்கு அடைமானம் வைத்துவிட்டார். உங்கள் பிள்ளைகளின் தியாகங்கள் எல்லாமே வீண்போய்விட்டன” என்று இனவாதத்தை தூண்டி வன்மத்தைக்கூட்டி, தன்னை ஒரு தேச அபிமானியாக சிங்கள மக்களின் மெய்யான பாதுகாவலனாக நிரூபிக்க, 2005ம் வருட ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ முன்னெடுத்த பிரசார நடவடிக்கைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ரணில் தரப்பினர், “தாங்களும் சிங்கள மக்களின் மெய்யான பாதுகாவலர்களே!” என்பதை அத்தேர்தலில் நிரூபிக்க முனைந்தனர். 

ஊமை யுத்தம்!  

“நாங்களா நாட்டை காட்டிக்கொடுத்தோம். எங்களை விடவும் நாட்டை விசுவாசமாக நேசிப்பவர்கள் இங்கு வேறு யார் இருக்க முடியும். இந்தா பாருங்கள் எங்கள் தரப்பு சாதனைகள்” என்றவாறு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஒரு பயங்கரப்பட்டியல் காட்டியது. 

சுதந்திரமாக உலாவிய புலிகளின் சர்வதேச கடல்வழிப்போக்குவரத்தை, போர் நிறுத்த காலத்தில் தடுத்து நிறுத்தி அவர்களின் எண்ணெய் தாங்கி கப்பல்கள், ஆயுத கொள்வனவு கப்பல்கள் பலவற்றை சர்வதேச கடல் பரப்பில் வைத்து ரணில் அரசாங்கம் தகர்த்து நிர்மூலமாக்கியிருப்பதாக கணக்கு காட்டி தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் மிலிந்த மொரகொடவும், நவீன் திசநாயக்கவும் ஆற்றிய பெருமித உரைகளும், 

சிறுதுளி இரத்தம் கூட சிந்தாமல் “மௌன யுத்தம்” புரிந்த ரணில் விக்கிரமசிங்க, போர்க்களத்திலிருந்தும் புலிகள் அமைப்பிலிருந்தும் 6,000 புலி உறுப்பினர்களை மீளவும் திரும்ப முடியாமல் அப்புறப்படுத்தியிருப்பது மாபெரும் சாதனையென்று லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் ஆற்றிய இறுமாப்பு உரையும் பலத்த அதிர்வலைகளை உண்டு பண்ணியது. 

விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாடு பிரதேசங்களுக்குள் சிறீலங்காவின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி நடத்திய தாக்குதல்களில் வான்படைத்தளபதி கேணல் சங்கர், கடல்புலிகளின் சிறப்புத்தாக்குதல் தளபதி கங்கைஅமரன், படையப்புலனாய்வு பொறுப்பாளர் சாள்ஸ், மன்னார் மாவட்ட தாக்குதல் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி உள்ளிட்ட மூத்த மற்றும் இளநிலைத்தளபதிகள் சிலர் உயிரிழந்திருந்தனர்.   

மகளிர் படையணிகளின் சிறப்புத்தளபதிகள் துர்க்கா மற்றும் விதுசா, கட்டளைத்தளபதிகள் பால்ராஜ், ஜெயம், பானு, அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், கடல்புலிகளின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் பூரணி ஆகியோரும் அப்படையணியின் தாக்குதல்களிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தனர். 

கூடவே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் கட்டளைத்தளபதி கேணல் கருணாவுடன் குறுந்தொகை போராளிகள் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிச்சென்றமை, புலிகள் அமைப்புக்கு சொந்தமான ஆயுத கொள்வனவு மற்றும் எண்ணெய் தாங்கி கப்பல்கள் பத்துக்கும் மேல்பட்டவை, ஈழத்தை சென்றடைய விடாமல் சர்வதேச கடல்பரப்பில் வைத்து சிறீலங்கா கடல்படையால் மூழ்கடிக்கப்பட்டமை, இப்படி புலிகள் அமைப்பின் ஆயுதம் மற்றும் ஆளணிப்பலத்தை குறைத்து அவர்களின் உளவுரணை சிதைக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளையே “மௌன யுத்தம்”என்று அவர்கள் விளித்தனர்.   

எதிரியை பக்கத்தில் வைத்துக்கொள்! துரோகியை தூரத்தில்கூட விட்டுவைக்காதே! 

உண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரான காலப்பகுதியில் சர்வதேச கடல்பரப்பிலும், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஒரு கோர்வையாக நடைபெற்ற ஜீரணிக்க முடியாத துன்பியல் சம்பவங்கள் பலவற்றால் புலிகள் அமைப்பினர் ரொம்பவே குழம்பிப்போயிருந்தனர். 

தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது? இரு தரப்புக்குமிடையில் எவராவது மூன்றாம் தரப்பு வல்லரசு நாடுகள் புகுந்திருந்து கழுத்தறுப்பு நடக்கிறதா? இல்லை கூடவே இருந்து யாராவது குழி பறிக்கிறார்களா? என்றெல்லாம் ஊகித்து, நின்று நிதானித்து தம்மை சரிசெய்து கொள்வதற்கு, அவர்களுக்கு சிறுகால அவகாசம் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. 

மிலிந்த மொரகொட, நவீன் திசநாயக்க, லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோரின் பேச்சுகளுக்குப்பின்னர் சுதாகரித்துக்கொண்ட புலிகள்,“ஆட்சிக்கதிரைக்கு யார் ஏறணும், யார் ஏறக்கூடாது என்பதை தீர்மானிப்பது சிங்கள மக்கள் அல்ல, தமிழ் மக்களே! சிறீலங்காவின் ஆட்சியாளரை முடிவுசெய்யும் அந்தப்பலம் கூட தமிழர்களிடம் தான் இருக்கிறது!” என்பதை, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏனைய சிங்களத்தலைமைகளுக்கும் உணர்த்துவதற்காக அன்றைய ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச்செய்து வரலாற்றில் தமிழர்களின் பலத்தை மற்றுமொரு வடிவில் பதிவுசெய்தனர்.  

இலங்கை அரசியல் வரலாற்றிலும், தனது அரசியல் வாழ்க்கைப்பயணத்திலும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு அவருக்கு இருந்த பிரகாசமான ஒரேயொரு சந்தர்ப்பம் 2005ம் வருடத்தேர்தல் மட்டுமேயாகும். அத்தேர்தலே அவருக்கு துயரம் படிந்த சோக நிகழ்வாகவும், நல்ல படிப்பினையாகவும் அமைந்து விட்டது.      

சிங்கள மக்களின் வாக்குகள் தான் தேர்தல் முடிவுகளை உறுதிசெய்யும் எனும் நமட்டுத்துணிச்சலில் சிங்கள மக்களை முன்னிறுத்தி, அவர்களை திருப்திபடுத்துவதற்காக உச்சிக்குளிர்ந்து போகும்படி சலுகைகளை அறிவித்து இனவாதம் பேசிப்பேசி தென்னிலங்கையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்த சிங்களத்தலைமைகளுக்கு, தமிழ் மக்களின் தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம் கனதியான சேதி அன்று சொல்லப்பட்டிருந்தது. 

ஆனபோதிலும், வரலாற்றுத்தவறுகளிலிருந்து அரசியல் தலைமைகள் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இன்று கூடியுள்ள பொது எதிரணியினரும், “சிங்கள மக்களை மட்டும் திருப்திபடுத்தினால் போதும் எல்லாம் ஜெயமே!” என்றவாறு அவர்களின் மனங்களை வெல்வதை மட்டும் இலக்காகக்கொண்டு, சலுகை அறிவிப்புகளை விடுவிப்பதையும், தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.      

உள்ளே வந்து பார்! ஒருமுறை அநுபவித்து விட்டால்…?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து இலங்கை அரசியல் அமைப்பை மாற்றி அமைப்போம் எனும் கோசத்துடன் ஆரவாரமாக பொது எதிரணி கிளம்பியிருக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துவிட்டால், இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும் என்ற அதீத கற்பனைவாதத்தையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். 

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அரசியல் அமைப்பு சாசனத்தில் (1978ம் வருடம்) புகுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அநுபவமொழியை இங்கு மீள்நினைவுபடுத்துவது முக்கியமானது.  

“சீச்சீ… புளிக்கும்…”, “அச்சச்சோ… இனிக்கும்…”

வெளியே நின்றுகொண்டு, “அதை ஒழி ஒழி என்று சொல்வது சுலபம். உள்ளே வந்து பாருங்கள். நீங்களும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கதிரையில் வந்து அமர்ந்து பாருங்கள்.” அப்போதுதான் உங்களுக்கு அதன் Valued Valuable energy புரியும். நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் “ஆணைப்பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றித்தர முடியாதே தவிர, மற்றப்படி எல்லா மாயாஜாலங்களையும் செய்ய முடியும்.” இவ்வாறு “அநுபவி ராசா அநுபவி” என்று தனது அநுபவத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன மனம் திறந்து கூறியிருந்தார். 

வெளியே நின்றுகொண்டு “சீச்சீ… இந்தப்பழம் புளிக்கும்…” என்று சொன்னவர்கள், உள்ளே போனபின்பு “அச்சச்சோ… இந்தப்பழம் இனிக்குதே…” என்று நிறைவேற்று அதிகாரத்திலுள்ள அனைத்து பலாபலன்களையும் நுகர்ந்து அநுபவித்ததே கடந்த கால வரலாறுகளாகும்.

இதற்கு நிகழ்கால சாட்சியங்களாக இருப்பவர்கள் மகிந்த ராஜபக்ஸவும் சந்திரிகாவும் ஆவர். இவர்கள் இருவரும் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்” என்ற கோசத்தை உயர்த்தி பிடித்துக்கொண்டே வாக்குகேட்டு வந்தனர். வென்றனர். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியது போன்று, ஆட்சிக்கதிரையில் அமர்ந்த பின்னரே அதன் Valued Valuable energy இவர்களாலும் உணர முடிந்தது. அதில் ஏதோ ஒருவகை இன்பம் இருக்கிறது. அது ஒரு ஊஞ்சல் ஆட்டம். அது ஒரு தொட்டில் தாலாட்டு. அது ஒரு அலையும் இல்லாத ஆட்டமும் இல்லாத கடலில் படகு போன்றது. ஆதலால்த்தான் என்னமோ உள்ளே வருபவர்கள் எல்லோராலும் அதில் சுகம் காண முடிகின்றது.   

மைத்திரி பாலஸ்ரீசேனவும் அந்தக்கதிரையில் வந்து அமர்ந்த பின்னரே அவராலும் அதன் ஏயடரந ஐ உணர்ந்துகொள்ள முடியும். எது நடப்பினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பும், 18வது திருத்தச்சட்ட நீக்கமும் இனப்பிரச்சினைக்கு உரிய நிவாரணம் அளிக்காது.

நிகழ்கால பாலைவன நரி!

“எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி, இப்படி ஒரு மாஸ் திரைப்படம்  போல நகரும் கதையில் ராஜபக்ஸ, சந்திரிகா, மைத்திரி கதாபாத்திரங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்கள், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பிறகு“பாலைவன நரி” என்ற பட்டப்பெயருக்கு உரித்துடைய ரணில் விக்கிரமசிங்க எனும் மிகச்சிறந்த இராஜதந்திரியை கவனிக்க மறந்து போய்விட்டார்கள். 

பொது எதிரணியின் சீட்டுக்கட்டில் முக்கிய துரும்புச்சீட்டாக இருப்பவரே ரணில் விக்கிரமசிங்க தான்! மைத்திரி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகும் பட்சத்தில், பிரதமர் பதவியை அலங்கரிக்க இருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. “பிரதமர் பதவி தனக்கு தரப்பட வேண்டும்” என்ற பேரம் பேசலின் அடிப்படையிலேயே அவர் மைத்திரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறார். 

கூடவே பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் கூடியளவில் உண்டு. மகிந்த ராஜபக்ஸவை எதிர்த்த ஒரே காரணத்துக்காக அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டமை. இராணுவ பதவிகள், கௌரவ பட்டங்கள், பதக்கங்கள் பறிக்கப்பட்டமை. அவருக்கு விசுவாசமான மேஜர் தரம் முதல் மேஜர்ஜெனரல் பதவி வரையிலுள்ள நாற்பதுக்கும் மேல்பட்ட இராணுவ உயர்அதிகாரிகள் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு, பதக்கங்கள் பதவிகள் களையப்பட்டு பலவந்தமாக இராணுவ சேவையிலிருந்து வீட்டுக்கு துரத்தப்பட்டமை. 

சரத் பொன்சேகாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட“சிங்க றெஜிமென்ட்”  படைப்பிரிவு வலுவிழக்கச்செய்யப்பட்டமை. ஒரு வருட சிறை வாழ்க்கை காலம் அநுபவித்தமை இவற்றுக்கெல்லாம் கணக்கு தீர்த்துக்கொள்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவுக்கு வேண்டுமானால், நல்லதொரு வாய்ப்பாக அமையலாம்.

ஆனால் சிறீலங்கா இராணுவ படைப்பிரிவுகளிலேயே வன்மப்படுகொலைகளுடன் தொடர்புடைய மிகவும் மோசமான படையணி என்றால், அது சிங்க றெஜிமென்ட் படையணியே! எனவே வீட்டுக்கு துரத்தப்பட்ட சரத் பொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய இராணுவ உயர்அதிகாரிகள் மீண்டும் இராணுவ சேவையில் உள்ளீர்க்கப்பட்டு அதிகாரங்கள் கையளிக்கப்பட்டு சிங்க றெஜிமென்ட் படையணி மீண்டும் கட்டமைக்கப்பட்டு சிறீலங்காவில் கோலோச்சுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, “இது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு” என்ற கொள்கையில், இம்மியளவும் பிசகாமல் முரட்டுத்தனமாக இருக்குமொரு தனிச்சிங்கள பௌத்த பேரினவாதி சரத் பொன்சேகா ஆவார். இத்தகைய ஒருவருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், மேலெழும் தேசிய நலன், தேசிய பாதுகாப்பு வாதங்களின் பெயரால் தமிழர் பகுதிகள் அதிதீவிர இராணுவ கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்படும். அதற்கான நியாயப்படுத்தல்களும் உச்சம் பெற்றிருக்கும்.  

21ம் நூற்றாண்டில் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், மனிதகுலப்படுகொலைகளுடன் ராஜபக்ஸ நடத்திய “உலக அசிங்கத்தின் ஊத்தைத்தனங்களுடன் கூடிய அருவருப்பான அபத்தமான பெரும் போரை” நாம் பார்த்துவிட்டோம். இதேபோரை ரணில் விக்கிரமசிங்க நடத்தியிருந்தால், அந்தப்போர் எவ்வாறு நடைபெற்றிருக்கும்?

நான்கு மாவட்டங்களைச்சேர்ந்த ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், ஒன்றரை கிலோமீற்றர்கள் நீரேந்து நிலப்பரப்புக்குள் ஒடுங்கிப்போயிருக்க மாட்டார்கள். மக்கள் தத்தமது பூர்வீக நிலபுலங்களில், வீடு வளவு வாசல்களில் குடியிருந்தவாறு தோட்டம் துறவு என்று சீவியத்தை ஓட்டியிருப்பார்கள். மாறாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் மட்டும் மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வேறாக்கப்பட்டு காணாமல் போயிருப்பார்கள். 

எடுகோளாக இங்கு நாம் மக்களை பயிர்களாகவும், புலிகளை களைகளாகவும் எடுத்தாள்வோமாக இருந்தால், ஒரு வயல் நிலத்தில் பயிர்கள் இருக்கத்தக்கதாக களைகளை மட்டும் பிடுங்கி அப்புறப்படுத்தும் ஒரு போரியல் உத்தியையே ரணில் விக்கிரமசிங்க கையாண்டிருந்தார். இந்த இராஜதந்திர போரியல் உத்தியில் அவர் கணிசமான அளவு வெற்றியும் கண்டிருந்தார்.  

போர் நிறுத்த காலத்தில் முன்னரங்க நிலைகள் தீக்குழம்புகளால் குளிக்காத, போர் முனைகள் கந்தகப்புகையால் மூச்சுத்திணறாத“ஊமைக்காய யுத்தத்தை” ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்திருந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்தின் மத்திய பகுதிகளுக்குள் இராணுவ சிறப்பு படையணியைக்கொண்டு ஆழ ஊடுருவித்தாக்கி முக்கிய படைத்துறை தளபதிகளை கொன்று ஆள்புல பலத்தை சிதைத்தார். 

சர்வதேச கடலில் கோலோச்சிய கடல்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, போருக்குத்தேவையான ஆயுத உள்வரவை தடுத்து நிறுத்தி படைபலத்தை பெருக்க விடாமல் கவனித்துக்கொண்டார். (மிக முக்கியமாக அவரது இந்த ஆயுத உள்வரவு தடுப்பானது, பிற்காலத்தில் மகிந்த ராஜபக்ஸவின் போர் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்பதை யாரும் கவனத்தில் கொள்ளாமல் விடமுடியாது.)     

ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் போர் நடவடிக்கையானது, வயலிலுள்ள களைகளை பிடுங்குவதற்குப்பதிலாக மொத்த வயலுக்கும் (பயிர்களுக்கும் சேர்த்து)  களைநாசினியை விசிறி விட்ட ஒரு போர் நடவடிக்கையாகவே அமைந்தது. நெறிமுறை தவறிய இந்தப்போரே இப்போது அவரை, சர்வதேச நீதி விசாரணை வரைக்கும் விடாமல் துரத்திக்கொண்டிருக்கின்றது.

எடுத்துக்கோ… அள்ளிக்கோ… பொலிசி! (Policy)

நாயை தடவிக்கொடுத்தவாறே கல்லைத்தேடுவதைப்போன்ற ஒரு இராஜதந்திரத்தை ரணிலை விடவும் வேறு யாரும் இங்கு சிறப்பாக செய்ய முடியாது. எப்போதும் வன்மத்தை காட்டாத ஒரு மென்போக்குவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கும் அவர், தனது (மறைமுக) நிகழ்ச்சிநிரலின் அடைவுமட்டம் எதுவோ அதை பலதடவைகள் அடைந்திருக்கிறார். 

யார் எவரதும், எந்தவொரு முடிவுக்கும் எதிராக முஸ்டியை முறுக்கிக்கொண்டு சண்டைக்கு அவர் தயாரானதில்லை. எடுகோளாக புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் விடுதலைப்புலிகள் எதையெல்லாம் கேட்டார்களோ, அதைக்கேட்டபோதெல்லாம்“எடுத்துக்கோ… அள்ளிக்கோ…” என்று தனது தாராளமயக்கொள்கையை வெளிப்படுத்தியிருந்தார். தனது தாராளமயம் அல்லது திறந்தவெளி கொள்கை மூலமாக புலிகளின் போரிடும் ஓர்மத்தை ஒத்தி வைக்க அல்லது வற்றிப்போக செய்திருந்தார். 

இன்றும்கூட, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது ஆயுதம் ஏந்திய அமைப்போ இல்லாதநிலையிலும், அதனுடன் தொடர்புகளை வைத்திருப்பது இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு விரோதமானது என்று வாதிட்டுவரும் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாடுகள் அந்த அமைப்புக்கு ஓர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றார்.   

உடைபடுமா கூட்டமைப்பு?

ரணில் இனி என்ன செய்வார்? பிரதமராக பதவி வகிக்கும் பட்சத்தில், வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் எதைஎதையெல்லாம் காரணம் சொல்லி காட்டுக்கூச்சல் போட்டு அரசியல் நடத்துகிறார்களோ, அக்காரணங்களை களைவார். அவர்கள் அரசியல் செய்யும் மூலங்களை பிய்த்தெறிவார். அதாவது பலம் பொருந்திய புலிகளின் கட்டமைப்புக்கு பயன்படுத்திய “தனது நாகாஸ்திரம்” ஆன, அதே “எடுத்துக்கோ… அள்ளிக்கோ…”பொலிசியை (Policy) கையாள்வார். 

எடுகோளாக, இராணுவ பிரசன்னம் பற்றி கூட்டமைப்பினர் பேச்செடுத்தால், கணிசமான அளவு இராணுவ தொகையை குறைத்து பிரதான முகாம்களுக்குள் மட்டும் இராணுவத்தை நிலைகொள்ளச்செய்வார். இவ்வாறு கூட்டமைப்பினரும் ஒவ்வொரு கோரிக்கையாக தூக்கிப்பிடிக்க அவரும் அதனை நிவர்த்தி செய்து (களைந்து) கொண்டே வருவார். 

ரணிலின் இந்த தாராளமயக்கொள்கை, விட்டுக்கொடுப்புகள், இசைந்துபோதல்கள், மசிந்துபோதல்களை கண்டு, கூட்டமைப்பினரும் தமது கோரிக்கைகளுக்கு அரசு பணிந்து போவதாக புளகாங்கிதம் அடைந்துகொள்ளலாம். ரணிலின் இலகுபடுத்தல்கள் வசதிப்படுத்தல்கள் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள தளர்வுநிலைச்சூழல் மக்களுக்கும் ஒருவகை மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரலாம். 

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடுருவல் யுத்தத்தை (மௌன யுத்தம்/ஊமைக்காய யுத்தம்) சுதாகரித்துக்கொண்டு நின்று நிதானிப்பதற்குள், தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகளை சிதறடித்து, தமிழர்களுக்கான  அரசியல் தலைமைத்துவத்தை இல்லாமல் செய்து வடக்கு கிழக்கில் ஒரு வெறுமையை ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியிருப்பார். மிகப்பலம்பொருந்திய கட்டமைக்கப்பட்ட புலிகளின் நடைமுறை நிர்வாக அலகுக்குள்ளேயே தனது நிகழ்ச்சிநிரலை கனகச்சிதமாக செயல்படுத்திய அவருக்கு கட்டமைக்கப்படாத,  நிறுவன மயப்படுத்தப்படாத கூட்டமைப்புக்குள் காரியம் சாதிப்பது ஒன்றும் அவருக்கு கடினமல்ல. 

முதல் தோல்வி!

ஏற்கனவே கடந்த 2012ம் வருடம் மே மாதம் யாழ்ப்பாணத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டு மேதின நிகழ்ச்சியை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அதில் பங்களிப்பதாக இணங்கியிருந்தது. அன்றைய கூட்டு மேதின நிகழ்ச்சியில், “சிங்கக்கொடி அசைப்பது”என்ற ஒரு நிகழ்ச்சி வரைபே இருக்கவில்லை. 

ஆனால் “கூட்டு மேதின நிகழ்ச்சிக்காக ஏன் யாழ்.மண்ணை தெரிவு செய்தேன். அங்கிருந்துகொண்டு தென்னிலங்கைக்கு அன்றைய தினம், தான் என்ன சேதி சொல்லப்போகின்றேன்” என்பதை மிகவும் இரகசியமாக வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பினர் மேடையில் ஏறியதும் மின்னல் வேகத்தில் அவர்களின் கைகளுக்குள் சிங்கக்கொடியை திணித்து அவர்களைக்கொண்டே சிங்கக்கொடியை அசைவிக்கச்செய்தார். இதன் மூலம் அவர் யாருக்கு என்ன சேதி சொல்ல நினைத்தாரோ அது சொல்லப்பட்டு விட்டது. 

அன்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவர்கள் என்ன, உலகமே எதிர்பாராத தனது நிகழ்ச்சிநிரலை சடுதியாக செயல்படுத்தி ஒருநொடிப்பொழுதுக்குள் கூட்டமைப்பினரை தனது இராஜதந்திரத்துக்கு பின்னால் இழுபட்டு வரச்செய்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க. 

இது சும்மா டிரெய்லர் (Trailer) தான், மகிந்தவையும் மைத்திரியையும் தாண்டிய இரண்டாம் யுத்தத்தில் அவரின் மெயின் சுவிட்ச்சை (Main switch) பார்ப்பீர்களேயானால் அப்படியே ஆடிப்போய்விடப்போகின்றீர்கள்! 

இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
-அ.ஈழம் சேகுவேரா-

கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு: