தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை வாங்கச் சென்ற மக்கள் இராணுவ முகாங்களுக்குள்?

தங்கம் வாங்கச் சென்ற மக்கள் இராணுவ முகாங்களுக்குள்?

போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இன்று கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் இவற்றைப் பெறுவதற்குக் கிளிநொச்சியில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் ஆண்கள், பெண்கள் என வேறாக்கப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்,  என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் தமக்கு நகைகள் வேண்டாம் வீட்டுக்குச் செல்லவிடுங்கள் என்று கேட்டபோதும் அதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்தனர் என்றும் உறவினர்கள் கூறினர். 
கிளிநொச்சி மாவட்டத்தில் நகைகளைப் பெறுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் நேற்று மதியம் அந்தந்தப் பிரதேச இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மாலை 6 மணியளவில் ஆண்கள், பெண்கள் வேறாக்கப்பட்டு இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். 
  
தம்மைக் கொழும்பு அழைத்துச் செல்வதாகக் கூறினரே தவிர இராணுவ முகாம்களுக்குள் தங்கவைப்பது குறித்து கூறப்படவேயில்லை என்று இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 
விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைப் போரின் இறுதியில் இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.