மண்ணில் சரிந்த சினிமா சிகரம்- மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் சிறந்த படங்களின் தொகுப்பு

சென்னை: சினிமாத் துறையில் வளர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்குனருக்கும் முதலில் உத்வேகம் தருபவை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் படங்கள்தான். நாடகத்துறையில் இருந்து நேரடியாக திரைத்துறைக்கு வந்தவர் இயக்குனர் சிகரம் அவர்கள். உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு உலகை விட்டு மறைந்தார். ஒரு வெகுஜனக் கலைஞனாகவும், பல்வேறு மாற்றங்களை சினிமாத் துறையில் விதைத்தவருமான பாலசந்தரின் சில சிறந்த படங்களின் தொகுப்பு இங்கே.


தெய்வத்தாய்: கதையாசிரியராக கே.பாலசந்தர் அறிமுகமான முதல் திரைப்படம் "தெய்வத்தாய்". மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது
சீன் கானரி நடிப்பில் வெளிவந்த டாக்டர்.நோ என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தினை தழுவி இப்படத்தில் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

 நீர்க்குமிழி:
1965 ஆம் ஆண்டு வெளிவந்த நீர்க்குமிழி, பாலச்சந்தர் அவர்கள் இயக்குனராக முதன்முதலாக அறிமுகமான திரைப்படம்.
பாலச்சந்தரின் கதையாக்கத்தில் உருவாகிய இத்திரைப்படத்தில் வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் செளகார் ஜானகி நடித்திருந்தனர்.
சென்னையின் கெய்ட்டி திரையரங்கில் அந்த காலகட்டத்திலேயே 82 நாட்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படம் இது.

இரு கோடுகள்:
1969 ஆம் ஆண்டு வெளியான இரு கோடுகள் திரைப்படம் ஒரு நாடக சாயலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
"காதல் மன்னன்" ஜெமினி கணேசன், செளகார் ஜானகி, ஜெயந்து, நாகேஷ், விஎஸ் ராகவன், எஸ்.என். லட்சுமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இரண்டு பெண்களை மணந்த ஒருவனின் கதைதான் இந்தத் திரைப்படம். இருகோடுகள் திரைப்படத்திற்காக முதன்முதலில் விருது பெற்றார் பாலச்சந்தர்.


அவள் ஒரு தொடர்கதை:

கருப்பு-வெள்ளை திரைப்படமாக வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் 1974 ஆம் ஆண்டு வெளியானது. ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் வாழ்க்கையை சித்தரித்த திரைப்படம் இது.
பெண் கதாப்பாத்திரத்தினை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிகை சுஜாதா நடித்திருந்தார்.
பாலசந்தர் அவர்களின் சிறந்த படங்களில் ஒன்றாக குறிக்கப்பட்டது இப்படம். மணி ரத்னம், பாக்யராஜ், ரவிக்குமார் உட்பட பல்வேறு இயக்குனர்களின் மனம் கவர்ந்த இத்திரைப்படம் 25 வாரங்கள் தொடர்ந்து ஓடியதுடன், மேலும் 5 மொழிகளில் டப் செய்யப்பட்டது.
 வறுமையின் நிறம் சிகப்பு:
1980 ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் கமல் ஹாசன், ஸ்ரீதேவின் நடிப்பில் வெளிவந்தது.
இந்தியில் "சாரா சி சிந்தகி" என்று கமல், அனிதா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.






தண்ணீர் தண்ணீர்:

மனிதனின் மிக அடிப்படைத் தேவையான தண்ணீருக்காக தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் எந்த அளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும், அரசாங்கத்தின் சிவப்பு நாடாத்தனத்தையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய படம் "தண்ணீர் தண்ணீர்'.
1981 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குகன், சரிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.



அச்சமில்லை அச்சமில்லை:

1984 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ் மற்றும் சரிதா நடித்திருந்தனர்.
ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை , ஆசையை படம் பிடித்து காட்டிய அல்லது துகிலுரித்து காட்டிய படம் என்றே சொல்லலாம் இப்படத்தினை.


"தன் கடைசி காலத்தில், மீண்டும் ஒரு நாடகம் நடத்த வேண்டும் என விரும்பினார் கேபி. அதில் தன் சீடர்கள் ரஜினி, கமல் நடிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். அதேபோல ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதும் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகிவிட்டது."