அரசாங்கம்- அமைச்சர்கள்- புலனாய்வாளர்கள்- படையினருடன் இணைந்து மாபியாக்களாகும் தமிழ்அதிகாரிகள் சிலர்!!!

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலையும் துலங்கும் மர்மங்களும்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
அரசாங்கம்- அமைச்சர்கள்- புலனாய்வாளர்கள்- படையினருடன் இணைந்து மாபியாக்களாகும்  தமிழ்அதிகாரிகள் சிலர்:
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், தமிழீழ காவற்துறையின் முன்னாள் வீரருமான கிருஸ்ணசாமி  நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது.

தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை இவர் துணிந்து செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் கடுமையான  தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு அமைந்திருக்கிறது. இந்த பிரிவின் நகராக அடம்பன் விளங்குகிறது. இங்கு தான் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்தப் பிரிவின் தற்போதைய பிரதேச செயலராக இருப்பவர் சிறீஸ்கந்தராசா இவர் மிகப்பெரிய ஊழல் பேர்வழி என கிராம மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இவர் அமைச்சர் ரிஸாத்பதியுதீனிற்கு  மிக நெருங்கிய நண்பர் எனவும்,  பாடசாலைக் கால நண்பர் எனவும் அறியவருகிறது.  அதனால் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஊழல்களுக்கு இவரும், இவருடைய ஊழலுக்கு அமைச்சர் ரிசாத்தும்  துணை துணையாக செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டும் விடயங்கள் - காட்டு மரங்கள் வெட்டி விற்கப்படுவது -  இந்த வியாபாரத்தில் ஈடுபடும் அமைச்சர் ரிஸாத் பதியுதீனிற்கு நெருக்கமானவர்களுக்கு அனுமதிப்பத்திரம் கொடுப்பது (பெமிற் கொடுப்பது) மணல் கொள்ளைக்கு அனுமதிப்பத்திரம் கொடுப்பது  (பெமிற்) - கிரவல் ஏற்றி விற்பதற்கு அனுமதிப்பத்திரம் கொடுப்பது (பெமிற்) உள்ளிட்ட விடயங்களுக்கு  தாராளமாக இந்தப் பிரதேச செயலராக உள்ள சிறீஸ்கந்தராசா உதவுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அடம்பன் பிரதேச அரச அதிகாரி ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

இவை மட்டும் அல்லாது அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நெருக்கமானவர்கள் புத்தளம் - கற்பிட்டி உள்ளிட்ட இலங்கையில் எங்கிருந்தாலும் மன்னாரில் இந்திய வீட்டுத் திட்டம் வேண்டும் என்றால் அவர் மன்னாரில்தான் வசிக்கிறார் என்பதனை உறுதிப்படுத்தி அந்த இந்திய வீட்டுத் திட்டம் கிடைக்கவும பிரதேச செயலராக உள்ள சிறீஸ்கந்தராசா உதவி புரிவார்.

தவிரவும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான -  18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் எல்லோரும் மன்னார் பெரிய மடு , சன்னார் போன்ற பகுதிகளில் அரசிற்கு சொந்தமான காட்டு காணிகளை வெட்டி தமதுடமையாக்குவதற்கு அனுமதிப் பத்திரம் (பெமிற்) போட்டு கொடுப்பார்.  இதனால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவருக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறார் என அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.

அந்த வகையில் பிரதேச செயலரான சிறீஸகந்தராசா  தன்னுடைய உறவினர்கள் நண்பர்கள் பெயரில் அதிகமான  வாகனங்களை வாங்கி குவித்துள்ளார். ( றக்றர் - டிப்பர் - பெக்கோவாகனம்)  இந்த வாகனங்கள் மூலமாக மன்னார் இலுப்பைக் கடவைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் கூராய் என்ற ஆறில் இருந்து பெருந்தொகையான மணலை கொள்ளை அடித்து ஒரு டிப்பர் மணலுக்கு 9000.00 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.  அதனை வாங்கும் வியாபாரிகள் 14.000 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்கிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளில் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் இவருக்கு பல இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்ட போதும்;  அமைச்சர் ரிசாத் பதியுதீன்; ஊடாக அமைச்சர்  பசில் ராஜபக்ஸவின் அனுசரணையோடுஇடமாற்றங்களை காலதாமதப்படுத்தி வருவதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பெரிய மடு வெள்ளாங்குளப் பகுதியில் பலநூறு ஏக்கர் அரச காணிகளை தனது உறவினர்கள் நண்பர்கள் பெயரில் அபகரித்து தனது உடமையாக்கி வருகிறார்.

அதில் ஒரு கட்டமாக மன்னார் வெள்ளாங்குளப் பகுதியில் பாலியாறுக்கு அண்மையில் நெற்செய்கை பண்ணக் கூடிய 60 ஏக்கர் அரச காணியை தனது உடமையாக்க முயற்சித்த வேளையிலேயே கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் இவர்களின் வில்லனாக உருவெடுத்துள்ளார்.

வெள்ளாங்குளத்தில் தற்போதைய கிராமசேவகராக இருக்கும் ஜெபநேசன் என்பவருடன் இணைந்து பிரதேச செயலாளரான சிறீஸ்கந்தராஜா இந்தக் காணியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது இதற்கு அங்கு வசிக்கும் புலிகளின் முன்னாள் காவற்துறையை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்...

இது குறித்து மன்னார் நீதிமன்றில் முக்கியமான வழக்கு ஒன்று நடைபெறுகிறது. அதன் முக்கிய சாட்சியாகவும் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் விளங்கியிருக்கிறார்...

இதனால் இவரை ஊரைவிட்டு துரத்த சிறீஸ்கந்தராஜாவும் - ஜெபநேசனும் முயன்றிருக்கின்றனர்...

ஏதோ ஒரு அலுவலாக ஆசிரியரான  நகுலேஸ்வரனின் மனைவி பிரதேச செயலகத்திற்கு சென்ற போது ' தங்கச்சி உனது கணவரை ஏதாவது மத்திய கிழக்கு நாட்டுக்கு அனுப்பு  ஊரில் வைத்திருக்காதே விணான பிரச்சனை என மறைமுகமாக மிரட்டி உள்ளார்.

இந்தப் பின்னணியில் வழக்கு தொடரும் நிலையில் வெள்ளாங்குள கிராம சேவகர் ஜெபநேசன் மூலமாக நகுலேஸ்வரனை கொல்லும் பொறுப்பை சிறீஸ்கந்தராஜா ஒப்படைத்துள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது.

இந்தக் கொலையில் கிராமசேவகர் ஜெபனேசன், பிரதேச செயலர் சிறீஸ்கந்தராசா தவிர நேரடியாக 3பேர் தொடர்புபட்டுள்ளனர்.

ஒருவர் வெள்ளாங்குளம் மாட்டு கண்ணன் என அழைக்கப்படுபவர். எருமைகளையும் ரக்ரர்களையும் சொந்மாக  வைத்திருப்பதனால் இவரை மாட்டுக் கண்ணன் என மக்கள் அழைக்கின்றனர்.  இரண்டாமவர் மாட்டு கண்ணனின் உழவுயந்திர சாரதி. 

3ஆவது நபர் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் புலிகளின் உறுப்பினர். இவர் மதுவுக்கு அடிமையாகி கூலிக்கு எதனையும் செய்வார் - முரடன் கொலைகாரன் என பெயர் பெற்றவர். இவருக்கும் இலங்கைப் புலனாய்வுத் துறைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது.  இவரே கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்.  இவருடன் மாட்டுக் கண்ணனும் அவரது உழ வுயந்திர சாரதியும் உடன் சென்றுள்ளார்கள்.

கொல்லப்பட்ட அன்றைய தினம் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரின் வீட்டின் மீது கல்லெறிந்து  உள்ளார்கள். யாரடா என கேட்டவாறு  வெளியில் சென்ற கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் மீது முன்னாள் புலி உறுப்பினர்   ரீ 56 துப்பாக்கியினால் சுட்டு இருக்கிறார்.

சூட்டுக்கு இலக்கான நகுலேஸ்வரன் இரத்த வெள்ளத்தில் கிடக்க ரீ 56 துப்பாக்கியை எறிந்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.   இந்தத் துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு துப்பாக்கியும் இவர்களிடத்து இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போ செத்தவரும் முன்னாள் புலி சுட்டவரும் முன்னாள் புலி. இதனால் இந்தக் கொலையை புலிகளுக்கு இடையிலான மோதலாக காட்டுவதற்கு ஒருதரப்பும்; - இந்து கிறீஸ்தவ மோதல் எனக் காட்டுவதற்கு இன்னொரு தரப்பும் முயலுவதாக முக்கிய தரப்புகளிடம் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதே வேளை பிரேத பரிசோதனைக்கு சென்ற நீதவான்  'இந்தப் பொடியன் வழக்கொன்றிற்காக சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு  வரும்  பெடியன் அல்லவா' எனக் கேட்டதாக அருகிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போ இந்தக் கொலையின் பின்னணியில் பல கேள்விகளை பிரதேச மக்கள் எழுப்புகின்றனர்.


1)    அமைச்சர் ரிஸாத் பதியுதீனுக்கும் பிரதேச செயலாளர் சிறீஸ்காந்தராஜாவுக்கும் இடையிலான பரஸ்பர சலுகைகள் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணையை இலங்கை நீதிமன்றங்கள் மேற்கொள்ளுமா?

2)    பிரதேச செயலாளர் சிறீஸ்காந்தராசா மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல முறை இடம்மாற்ற உத்தரவுகள் வந்த போதும் அதனை தடுத்து நிறுத்திய அல்லது உதவி புரிந்த அமைச்சர்கள் பசில் ராஜபக்ஸ – ரிஸாத் பதியுதீன் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பக்கச் சார்பற்ற விசாரணையை நடத்துவாரா?

3)    கிராமசேவகர் ஜெபநேசன், பிரதேச செயலாளர் சிறீஸ்காந்தராசா ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக அமைச்சர் ரிஸாத் பதியுதீனின் அனுசரணையுடன் மன்னாரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்துமா?

4)    மிகச் சாதாரண உழைப்பாளர் குடும்பத்தில் இருந்து பிரதேச செயலாளராக உயர்ந்த சிறீஸ்காந்தராசா கடந்த 3 – 4 வருடங்களில் பல ஏக்கர் காணிகளுக்கு சொந்தக்காரணாகவும் பெரும் பணக்காரராகவும் எப்படி உருவெடுத்தார் என வெளிப்படையான விசாரணையை அரசாங்கம் நடத்துமா?

5)    மன்னார் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகைக்கு ஈடாக படையினரையும், பெருமளவு புலனாய்வாரள்களையும், மிகப் பலம் வாய்ந்த புலநாய்வு வலையமைப்பையும் வைத்திருக்கும் படையினரை தாண்டி ரி 56 துப்பாக்கியுடன் சென்று சர்வ சாதாரணமாக ஒருவரை எப்படி சுட்டிருக்க முடியும்?

6)    துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் புலி உறுப்பினருக்கும் வவுனியா -  மன்னார மாவட்டங்களில்; முன்னாள் இயக்கங்களின் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் விசேட  புலனாய்வுக் கட்டமைப்புக்கும் உள்ள தொடர்பை குறிப்பாக துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் புலி உறுப்பினரின் தொடர்பை வெளிப்படுத்த முடியுமா?

7)    அரசாங்கத்தினதும், புலனாய்வுப் பிரிவினதும் தேவைகளுக்காக முன்னாள் புலிகள் பயன்படுத்தப்படுவது குறித்து பகிரங்க விசாரணைக்கு அரசாங்கம் தயாரா?


இங்கே தரப்பட்ட தகவல்கள் யாவும் மன்னாரைச் சேர்ந்த மக்கள் அரசாங்க அதிகாரிகயால் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வழங்கப்பட்டவை.

இவை குறித்து சம்பந்தப்பட்டோர் தமது பக்க நியாயத்தை – அல்லது குற்றச்சாட்டுகள் குறித்த மறுப்பை எமக்கு அனுப்பி வைத்தால் அவை முழுமையாக பிரசுரிக்கப்படும். எனினும் தகவலின் மூலம் குறித்தோ பெயர் விபரங்களை வழங்குமாறோ எவராவது கோரினால் அவை வழங்கப்பட மாட்டாது. தொலைபேசி அழைப்பிலும் விளக்கம் அளிக்கப்பட மாட்டாது. அனைத்து தொடர்புகளையும் மின் அஞ்சல் மூலமாக மேற்கொள்ள முடியும்.
radiokuru@yahoo.com


இந்தச் செய்தியை சமூக வலைத்தளங்களில் - இணையங்களில் புளொக்குகளில் மீள்பதிவிடுவோர் மூலத்தை குறிப்பிட்டு பதிவிடலாம்...
                                    
                                                                                                  நன்றி: குளோபல் தமிழ் செய்தி