தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினரின் கொலையால் வடக்கு கிழக்கில் பெரும் அச்சம்!!!

தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினரின் கொலையால் வடக்கு கிழக்கில் பெரும் அச்சம்:-வடக்கின் மன்னார் மாவட்டத்தில் அண்மையில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவம் வடகிழக்கு மக்களை பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக ஆயுத வன்முறைக் கலாசாரம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இரண்டு பிள்ளைகளின் தந்தையரான நகுலேஸ்வரன் எனப்படும் குறித்த தமிழீழ காவல்துறை உறுப்பினர் தனது குடும்பத்தை கொண்டு நடத்த சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவந்தவர். அத்துடன் தான் உண்டு தன் குடும்பம் உண்டென வாழ்ந்து வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு படுகொலை செய்யபட்டுள்ளார். 
 
இந்த விடயம் முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் போராளிகள் பெரும்பாலானவர்கள் தமது வாழ்க்கைi கொண்டு நடத்த பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். கல்வி, தொழில் வாய்ப்பு இன்றி அவர்கள் படும்பாடுகள் சொல்லி மாளாதவை. 
 
இந்நிலையில் அவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படும் நிகழ்வுகள் இடம்பெற்றே வருகின்றன. பெரும்பாலானவர்கள் கிராம இராணுவ அதிகாரிகள் ஊடாக கண்காணிக்கப்படுகின்றனர். அத்துடன் அடிக்கடி இராணுவ முகாங்களுக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டும் வருகின்றனர். 
 
இந்த நடவடிக்கைகள் முன்னாள் போராளிகளின் மீள் வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலையில் இலங்கை அரச படைகளின் தொடர் அச்சுறுத்தல் நெருக்கடிகள் இன்னொரு புறம் அவர்களை பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாக்கி வருகின்றன. 
 
இந்நிலையில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தம்மை கடுமையாக அச்சுறுத்தியுள்ளதாக முன்னாள் போராளி ஒருவர் குறிப்பிடுகிறார். இலங்கை அரசு புனர்வாழ்வு அளித்தாக கூறப்பட்ட போதும் அவர் தனது குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன் என்று அப் போராளி கேள்வி எழுப்புகிறார். 
 
இலங்கை அரச படைகளே இந்த குற்றச் செயலை மேற்கொண்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கூறுகிறார். தாம் எல்லாவிடயங்களையும் கைவிட்டு எல்லாவற்றையும் மறந்து வீடுகளுக்குள்ளும் குடும்பங்களுக்குள் மூழ்கி வசிப்பதாக அவர் கூறுகிறார். 
 
ஆனால் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் இலங்கை அரசுக்கும் அரச படைகளுக்கும் புலிகள் தேவைப்படுவதாக கூறும் அந்த முன்னாள் போராளி தம்மை தொடர்ந்தும் புலிகளாக்கி – போராளிகளாக்கி படுகொலை செய்வதே இலங்கை அரசின் நோக்கம் என்றும் கூறுகிறார். 
 
முன்னாள் போராளிகள், தமிழீழ முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் மாத்திரமின்றி அவர்களது பெற்றோர்கள் உறவினர்கள் மத்தியிலும் நகுலேஸ்வரன் படுகொலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் தனது தேவைக்கு ஏற்ப ஆயுத வன்முறை; கலாசாரத்தை நடத்தும் என மக்கள் அஞ்சுகின்றனர். 
 
இந்த சம்பவம் வடக்கில் மாத்திரமின்றி கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளையும் அச்சப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். தாம் தொடர்ந்து அச்சுறுத்தல் நோக்கத்துடன் கண்காணிக்கப்படுவதாக முன்னாள் போராளிகள் அச்சமடைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். 
 
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பத்துடன் மீள் இணைப்பு செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது. அவர்கள் எதுவும் வேண்டாம் குடும்பத்துடன் வாழ்கிறோம் என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தவர்களை இலங்கை அரச படைகள் விடுவதாயில்லை என்று கிழக்கை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார்.
 
(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)
 
குளோபல் தமிழ் செய்தியாளர்கள் - வடகிழக்கு