பிள்ளைகள் இருப்பதாக கதிர்காமத்தில் வைத்து கூறியவர் விலாசமும் தந்தார்; சகோதரிகள் சாட்சியம்!!!

அம்பாந்தோட்டையில் இருக்கும் புனர்வாழ்வு முகாமில் எங்கள் பிள்ளைகள் இருப்பதாக கதிர்காமத்தில் வைத்து ஒருவர் கூறியது மட்டுமல்ல அவர்கள் இருக்கும் விலாசமும் தந்துவிட்டு போனார் ஆனால் இன்று வரை பிள்ளைகளைக் காணவில்லை என சகோதரிகள் இருவர் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் அமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதன்போது சகோதரிகள் ஆணைக்குழு முன் மேற்கண்டவாறு சாட்சியமளித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டில் இருந்து முள்ளிவாய்க்கால் கடலால் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் 2009.04.28 ஆம் திகதி படகில் சென்று கொண்டிருந்தோம். அப்போது நவரத்தினராசா சுகிர்தன், எஸ் .சுதர்சனும் எங்களுக்கு முன்னால் சென்ற படகில் போய்க் கொண்டிருந்தனர்.
அப்போது முள்ளிவாய்க்கால் கடலில் நின்ற கடற்படையினர் அவர்களை மறித்தனர். நாங்கள் எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட போது விசாரித்து விட்டு விடுவதாக தெரிவித்தனர். பின்னர் எங்களை புல்மோட்டை கரையில் இறக்கி விட்டனர் . ஆனால் மகன்கள் வரவில்லை.
முகாமில் இருந்து திரும்பி சொந்த இடத்திற்கு வந்தது 2010 ஆம் ஆண்டு கதிர்காமத்திற்கு சென்று மலையேறி விட்டு திரும்பி வரும் போது முல்லைத்தீவு நிறுத்தப்பட்ட இடத்தில ஒரு பையன் வந்து முல்லைத்தீவில் இருந்தா வந்துள்ளீர்கள் என்று கேட்டு எங்கள் மகன்களின் பெயர்களைக் கூறி கேட்டார்.
அப்போது நீங்கள் யார் என்றும் அவர்களது பெற்றோர்கள் தான் நாங்கள்  என்றும் தெரிவித்தோம். அப்போது குறித்த இருவரும் அம்பாந்தோட்டையில் உள்ள முகாம் ஒன்றில் இருக்கின்றனர் என்றும் குறித்த முகாமின் விலாசமும் தந்துவிட்டு சென்றுவிட்டார் .
நாங்கள் அங்கு சென்றபோது அங்கு பிள்ளைகளைக் காணவில்லை. இன்றுவரை எல்லா இடமும் அறிவித்துவிட்டோம் ஆனால் இதுவரை பிள்ளைகள் தொடர்பில் எந்தவிதமான தகவலும்  தெரியாது . எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம் எங்களது பிள்ளைகள் தான் வேண்டும் என கண்ணீருடன் சாட்சியமளித்தனர்.