நன்றி: 4TamilMedia |
தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாட்டு நிலையில் இருந்து முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலேயே அவர்கள் மீதான தடை இரத்தாகியுள்ளது. இந்த தடை மீதான இரத்தினால் செயற்பாட்டு நிலையில் இல்லாத விடுதலைப் புலிகளுக்கு என்ன பயன்? புலிகளை முன்னிறுத்திய போராட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், அது மக்களுக்கு என்ன மாதிரியானை பயனைத் தரும் என்கிற மாதிரியான வாதப்பிரதி வாதங்கள் தீர்ப்பு வெளியான நாள் முதல் பல தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
ஆனால், இலங்கையிலிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் குறித்த தடை இரத்து குறித்து எந்தவிதமான சலனமும் இல்லை. அதனை அவ்வளவுக்கு கண்டுகொள்ளவும் இல்லை. ஏனெனில், விடுதலைப் புலிகளின் அழிப்போடு ஆயுதப் போராட்டங்களின் எல்லாத் தளங்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அதுவே, எதிர்கால யதார்த்தங்களைப் புரிந்து கொண்ட சரியான நிலை என்றும் கருதுகிறார்கள்.
விடுதலைப் புலிகள் மீதான தடை இரத்து தொடர்பில் இலங்கையிலிருக்கும் தமிழ் மக்கள் தான் அக்கறை கொள்ளவில்லையே தவிர, சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் அதனை பெருமெடுப்பில் தேர்தல் அரசியலுக்காக முன்வைக்க ஆரம்பித்து விட்டது. அதுவும், வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய படை பரிவாரங்களுக்கு ஊடாக புலி மாயையை பெருமெடுப்பில் முன்னெடுக்கின்றார். ஏனெனில், அது, தேர்தலை வெல்லும் சூத்திரம் என்று அவரும், அவர் தலைமையிலான அரசாங்கமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றது.
அதன் உச்ச கட்டம் என்னவெனில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இடையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரமே ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், மீண்டும் புலிகளின் பெரும் உருவாக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதவி புரிவதாகவும் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை கடந்த நாட்களில் முன்வைக்க ஆரம்பித்து விட்டது.
அதற்கு, ஜனாதிபதியும், அரசாங்கமும் ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய பிரித்தானிய விஜயத்தினை காரணமாகவும் முன்வைக்கின்றன. கொழும்பின் வீதிகளில் புலிகளின் தடை நீக்கத்துக்கு காரணமான எதிர்க்கட்சித் தலைவர் யார்?, என்ற கேள்விகளை முன்வைக்கும் சுவரொட்டிகளையும் காண முடிந்தது.
இன்னொரு புறத்தில், அறிக்கைகளினூடு அரசியல் முன்னெடுப்புக்களைச் செய்து வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். புலம்பெயர் தமிழ்ச் சமூகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் இணக்கத்தோடு அது, சாத்தியமாகலாம் என்ற ரீதியிலான கருத்தையும் முன்வைத்திருக்கின்றார்.
மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் மீண்டும் புலிப் பூச்சாண்டியை முன்னிறுத்தி சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் அரசியல் செய்கின்ற போது, முதுபெரும் தமிழ் அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் மேற்குறித்த கருத்து சிங்கள பெரும்பான்மை வாதத்துக்கு எண்ணை ஊற்றி எரியவிடும் வகையிலானது. ஆனந்தசங்கரி அவர்களின் தேர்தல் அரசியல் தமிழ் மக்களினால் நிகாரிக்கப்பட்ட நிலையில், அறிக்கை அரசியல் தமிழ் மக்களை சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைகின்றது.
இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மீதான இரத்து யாருக்கு என்ன பயனைக் கொடுக்கப் போகின்றது? அதற்கு, சர்வதேச ரீதியில் புலிகளின் சொத்துக்களை (குறிப்பாக பிரித்தானியா தவிர்த்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்) தனிப்பட்ட நபர்கள் சிலர் கையாள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகம் என்று நம்பப்படுகின்றது.
விடுதலைப் போராட்டத்திற்கான ஆதாரமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் பெருமளவாக வழங்கப்பட்ட நிதியுதவிகளை தனிப்பட்ட நபர்கள் தங்களது தனிப்பட்ட வியாபார தேவைகளுக்கு கையாளும் சூழல் உருவாகுவது என்பது தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்காது. மாறாக, அதை சட்ட ரீதியான அமைப்பினூடு பெற்றுக் கொண்டாலும் அது, தமிழ் மக்களுக்கான பயனை வழங்குவதற்கான சாத்தியங்களும் இல்லை.
ஏனெனில், மோதல்களின் கோரத்துக்குள் சிக்கி வாழ்வாதரத்துக்கான உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்படும் வாய்ப்புக்கள் இல்லை. அதனை, இலங்கை அரசாங்கம் என்றைக்கும் அனுமதிக்காது.
நிலைமை இப்படியிருக்க, விடுதலைப் புலிகள் மீதான தடை இரத்து என்பது ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஏனையை நாடுகளையும் முறையான ஆதாரங்களுடன் போராட்ட அல்லது பயங்கரவாத அமைப்புக்களைத் தடை செய்யக் கோருவதற்கான முன் ஆணையை வழங்குவதாகவே அமையும். அது, சர்வதேச ரீதியில் எதிர்காலத்தில் முன்னுதாரணமாக கொள்ளப்படும். மற்றப்படி, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வெளிப்படையாக விடுதலைப் புலிகளாக தங்களை முன்னிறுத்தும் குழுக்கள் உருவாகும் வாய்ப்புக்களை சில வேளை உருவாக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்புக்கள் என்பது மிகவும் குறைவு.
இவ்வாறான நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை இரத்து, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியில் அமர்த்துவதற்கு துணை செய்வதாகவே அமையும். மற்றப்படி, தமிழ் மக்களுக்கும், செயற்பாட்டு நிலையிலிருந்து அழிந்து போன விடுதலைப் புலிகளுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கப் போவதில்லை. அவ்வாறானதொரு நிலையில், ஊடகங்களும், புலம்பெயர் சமூகத்தின் சில கூறுகளும் கொள்ளும் ஆர்ப்பரிப்புக்கள் அர்த்தமற்றவை!